சுவாமிஜியிடம் உண்மையை உணர்த்திய ஜகந்மாதா

சுவாமிஜியிடம் உண்மையை உணர்த்திய ஜகந்மாதா

bookmark


க்ஷீரபவானியை தரிசிக்க சுவாமிஜி புகழ் பெற்ற சாக்த ஸ்தலத்துக்குச் சென்றார். அங்கே அவர் தினமும் ஹோமம் செய்தார். கன்யா பூஜை செய்து தேவியை கன்னிகையாக வழிபட்டார்.

உலகப் பொறுப்புக்களைத் துறந்து தாயின் மடியில் இருக்கும் குழந்தை போல அம்பாளிடம் அவர் சரணம் அடைந்தார்.

கோயிலைப் பிரதட்சிணம் செய்யும் போது அது பழுதுபட்டுக் கிடப்பதைக் கண்டார். முகமதியப் படையெடுப்பால் கோயில் இடிந்து கிடப்பதை அறிந்தார்.

அப்போது சுவாமிஜி நினைத்துக் கொண்டு இருந்தார்," தாம் மட்டும் அக்காலத்தில் இங்கே இருந்திருந்தால் அம்பாளின் கோயிலைக் காப்பாற்றி இருப்பேனே" என்று

அத்தகைய எண்ணம் தோன்றியதுமே தெய்வீகக் குரலின் அழைப்பு அவரது செவிகளை நிறைத்தது. தாயாக, அம்பிகையாக உலகநாயகியானவள் அவரை, குழந்தாய் என்று அழைக்கும் குரல் அது.

"யார் அழித்தாலும் எனக்கு எதுவும் ஆகாது குழந்தாய், என்னை நீ காப்பாற்றுகிறாயா? இல்லை உன்னை நான் காப்பாற்றுகிறேனா?" அம்பிகை இனிமை பொங்கக் கேட்ட கேள்வி சுவாமிஜியை இடி போலத் தாக்கியது. அவரை அவருக்கு உணர்த்தியது.

தாம் ஒரு கருவி. அவளுடைய அருளானை இல்லாமல் தம்மால் துரும்பைக் கூடக் கிள்ள முடியாது நடமாடும் மனித உயிர்களும் சேவை செய்வதற்கும் அவள் அருளல்லவா வேண்டும். தம்முடைய முயற்சிகள் என்று எண்ணுவது கூட சரியில்லை. எல்லாமே பரதேவதையின் செயல் என்று அம்பிகையிடம் சரண் புகுந்தார் சுவாமிஜி.

எல்லாம் அன்னைக்கே என்று அளித்துவிட்டு குழந்தையாக சுவாமிஜி க்ஷீரபவானியை வணங்கி, தம் பயணத்தைத் தொடர்ந்தார்.