சிவப்பிரகாசர்

சிவப்பிரகாசர்

bookmark

வாழ்க்கை வரலாறு

சிவப்பிரகாசர் என்பவர் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். இவர் சிற்றிலக்கியப் புலவர் ஆவார். இவர், ‘கவி சார்வ பெளமா’, ‘நன்னெறி சிவப்பிரகாசர்’, ‘துறைமங்கலம் சிவப்பிரகாசர்’ என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் ‘நால்வர் நான்மணி மாலை’ என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.

தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு மகனாக சிவப்பிரகாசர் பிறந்தார். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தார். தந்தை இறந்த பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று, அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக் கற்று வந்தார்.

ஆங்கோர் நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் ‘சோணாசலமாலை’ என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார். சிலகாலம் கழித்து, சிவஞான பாலைய தேசிகரிடம் விடைபெற்று காஞ்சி சென்று இறைத்தொண்டு புரிந்திருந்தபோது, நிசகுணயோகி என்பவரால் கன்னட மொழியில் இயற்றப்பட்ட விவேக சிந்தாமணியின் ஒரு பாகமாகிய ‘வேதாந்த பரிச்சேதத்திற்கு வேதாந்த சூடாமணி’ என்னும் பெயரிட்டுத் தனி நூலாகப் பாடினார். இரேணுகர் என்னும் கணத்தலைவரால் அகத்தியருக்கு அருளப்பட்ட சித்தாந்த சிகாமணியையும் பாடினார்.

அத்தருணத்தேதான் அல்லமதேவராகிய பிரபுதேவர் வரலாறான பிரபுலிங்க லீலையும் இயற்றி அருளினார். சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.

இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் காலமானார்.