அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்

bookmark

வாழ்க்கை வரலாறு

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் திருவெங்கட்டார், தாயார் பெயர் முத்தம்மை. இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லப்படுகின்றது.

அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இவருடைய தீய பழக்கத்தின் காரணமாக இவர் தனது சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் ஏற்பட்டது. நோயின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது வழியில் ஒரு பெரியவர் அருணகிரிநாதரிடம் குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.

முருகனை நினைத்து தியானம் செய்ய முடியாத அருணகிரிநாதர், தன் உயிரை விட முயன்ற போது, அங்கு முருக பெருமான் தோன்றி, அருணகிரிநாதருக்கு, தம் வேலால் அவர் நாவிலே ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. அதன் பிறகு இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவரானார். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.