சிந்துபாத்தின் ஐந்தாவது கப்பல் பயணம்
தனது நான்கு பயணங்களின் மூலமாக பெரும் சொத்துக்களை சேர்த்தான் சிந்துபாத். பயணங்களில் அவனுக்கு நேர்ந்த பல விதமான அனுபவங்கள் அவனை சிறந்த கடலோட்டியாகவும் மாற்றி இருந்தது. அத்துடன் மீண்டும் கடல் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை அவனது மனதினில் எழுந்தது. அதனால் சிந்துபாத் தனது அடுத்த கடல் பயணத்திற்கு ஆயத்தம் ஆனான். ஏராளமான வணிகப் பொருள்களை வாங்கி வழக்கம் போல கடலில் ஏற்றினான். உடன் எண்ணற்ற வியாபாரிகள் தங்கள் பொருள்களுடன் அந்தக் கப்பலில் முன்னதாகவே ஏறி இருந்தனர். சிந்துபாத்தை பார்த்த அந்த வணிகர்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். எனினும் சிந்துபாத் அவர்கள் மத்தியில் தன்னடக்கத்துடன் தான் காணப்பட்டான்.
சிந்துபாத்தின் கப்பல் புறப்பட்டது எண்ணற்ற தீவுகளை கடந்து கப்பல் பயணித்தது. நல்ல முறையில் வணிகமும் நடைபெற்றது. சிந்துபாத் மட்டும் அல்ல அவனுடன் வந்த ஏராளாமான வணிகர்களும் நல்ல லாபத்தை அடைந்தனர். வணிகர்கள் அனைவருக்கும் சுகமான காற்று நல்ல உற்சாகத்தை தந்தது. "மதினத் அல்ஸின்" என்ற இடத்தை கடந்து கொண்டு இருந்தனர் வியாபாரிகள். அதுவரையிலும் மிகவும் அமைதியாகச் சென்று கொண்டு இருந்த கப்பல் பயணம் பின்னர் அச்சம் தரும் விதமாக மாறியது. திடீர் என்று கப்பல் தலைவன் சத்தம் போடத் துவங்கினான்.
"கப்பலை வேகமாகத் திருப்புங்கள், விரைவாக செலுத்துங்கள். நம்மை நோக்கிக் கொள்ளையர்களின் கப்பல் விரைந்து வந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் நம்மை பிடித்தால் உயிருடன் விட மாட்டார்கள். நமது பொருள்களையும் அபகரித்து விடுவார்கள்" என்று தொடர்ந்து கப்பல் தலைவன் சத்தம் போட. கப்பல் தலைவன் சொன்னதைக் கேட்ட வியாபாரிகள் திடுக்கிட்டனர். செய்வது அறியாது திகைத்தனர்.
மறுபுறம் கொள்ளைக்காரர்களின் கப்பல் சிந்துபாத்தின் கப்பலை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சிந்துபாத்தின் கப்பல் கொள்ளையர்களின் கப்பலால் சிறைபிடிக்கப் பட்டது. உடனுக்குடன் கொள்ளையர்கள் சிலர் தங்களது கப்பலில் இருந்தபடி சிந்துபாத்தின் கப்பலுக்கு தாவினர். சிந்துபாத் போர்க்கலையில் சிறந்தவன் தான் இருந்தாலுமே கூட கொள்ளையர்களுடன் அவன் போர் செய்ய விரும்பவில்லை. காரணம் ஒரு வேலை சிந்துபாத் கொள்ளையர்களுடன் போரிட்டால் அதனால் உடன் இருக்கும் வர்த்தகர்களுக்கு ஏதேனும் கேடு வந்து விடுமோ என்று அவன் நினைத்தது தான். இதனால் மற்ற வர்த்தகர்களுடன் சேர்ந்து சிந்துபாத்தும் கொள்ளையர்களால் கைது செய்யப்பட்டான். கப்பல் தலைவனை மிரட்டி கப்பலை சிறைபிடித்து தங்களது தீவிற்கு கொண்டு சென்றனர் கொள்ளையர்கள்.
தங்களிடம் இவ்வாறு பிடிபட்ட வர்த்தகர்களை மாட்டை அடைப்பதை போல ஓர் இடத்தில் அடைத்தார்கள். அங்கு ஏற்கனவே பலர் சிறைப்பட்டு இருந்தனர். இரவு நேரம் இருட்டத் தொடங்கியது. சிந்துபாத் அங்கு ஏற்கனவே சிறைவைக்கப்பட்டு இருக்கும் மற்ற கைதிகளுடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். அவர்கள் மூலமாக எண்ணற்ற விஷயங்களை அறிந்து கொண்டான்.
உண்மையில் அந்தக் கொள்ளைக்காரர்கள் தலைவனின் பெயர் "ஜாஃபர் கான்". அவன் மிகவும் கொடூரன். குறிப்பாக பெண்களைக் கண்டால் விட மாட்டான். நல்லவேளையாக சிந்துபாத்துடன் வந்த அனைத்து வர்த்தகர்களுமே ஆண்கள் தான். அதனை நினைத்து சிந்துபாத் ஆறுதல் அடைந்து கொண்டான். மேலும் அந்தக் கொள்ளைக்காரத் தலைவனைப் பற்றி ஏற்கனவே சிறைபட்டு இருந்தவர்களிடம் மெல்ல விசாரிக்கத் தொடங்கினான்.
கொள்ளைக்காரன் ஜாஃபர் கானை பிடிக்க துருக்கி நாட்டு அரசர் ஷா ஆலம் எண்ணற்ற முறை தனது படைகளை அனுப்பி இருக்கிறார். ஆனால் ஜாஃபர் கானுக்கு அந்தத் தீவின் அனைத்து பகுதிகளும், அனைத்துப் பாதைகளும் அத்துப்பிடி அதனால் எளிதில் ஷா ஆலமீன் படைகளை முறியடித்து வந்து உள்ளான். அத்துடன் அடிக்கடி தனது இடத்தை மாற்றிக் கொள்வான். இப்படியாக அந்தக் கொள்ளைக்காரனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சிந்துபாத் அறிந்து கொண்டான்.
அன்றைய இரவு இப்படியாகக் கழிந்தது. அடுத்த நாள் காலை விடிந்தும், விடியாததுமாக ஜாஃபர் கானின் ஆட்கள் அனைத்து கைதிகளையும் அடித்து, உதைத்து எழுப்பினர். சிந்துபாத்துக்கும் சில அடிகள் பரிசாகக் கிடைத்தது. அனைவரும் உடனுக்குடன் குளித்து தங்களது கடமைகள் அனைத்தையும் முடித்தனர். உடனே கொள்ளைக்காரர்கள் தங்களிடம் பிடிபட்ட கைதிகளை இழுத்துச் சென்று தோட்டத்திலும், வயல் வெளிகளிலும் கொடுமையாக வேலை வாங்கினர். வயோதிகர்கள் என்று கூட பார்க்காமல் சிலரை கொள்ளையர்கள் அடித்துத் துன்புறுத்தினர். பெரிய, பெரிய மரங்களை சுமந்து செல்ல கட்டளை பிறப்பித்தனர். தூக்க முடியாமல் திணறுபவர்களை சவுக்கால் அடித்துத் துன்புறுத்தி மகிழந்தனர். சிந்துபாத்துக்கும் கடுமையான வேலைகள் பல காத்துக் கொண்டு இருந்தது. வேறு வழி இல்லாமல் அவற்றை பொறுமையுடன் செய்து முடித்தான் சிந்துபாத். பிற்பாடு இரவு நேரம் வந்ததும் மீண்டும் அனைவரும் கொண்டு செல்லப்பட்டு மாடுகளை போல முன்பு இருந்த இடத்தில் அடைக்கப்பட்டனர். இதே போல தினமும் நடந்து கொண்டு இருந்தது. சரியான நேரம் வரும் வரையில் காத்துக் கொண்டு இருந்தான் சிந்துபாத். அத்துடன் அந்தக் கொள்ளையர்களின் அனைத்து செயல்களையும் நன்கு மனதினில் பதிய வைத்துக் கொண்டான் சிந்துபாத். கொள்ளையர்களின் பலம் பலவீனம் என அனைத்தையுமே சிந்துபாத் அறிந்து கொண்டான்.
இந்நிலையில் ஜா ஃ பர் கான் "தையபா" என்னும் அழகு நங்கையை பிடித்து வைத்து இருந்தான். அவள் மீது கொண்ட ஆசையால் ஆரம்பத்தில் அவளை நல்ல முறையில் தான் நடத்தினான். எனினும் "தையபாவிற்கு" ஜா ஃ பர் கானை கண்டாலே பிடிக்காது. அவனிடம் இருந்து விலகி விலகி சென்றாள். கோபம் அடைந்த ஜா ஃ பர் கான் ஒரு நாள் அவளை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக அடைந்து விட்டான். தனது வாழ்க்கை பறிபோனதை நினைத்து அழுது துடித்தாள் தையபா. ஜா ஃ பர் கானை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று அவளது மனம் துடித்தது. அவளும் சரியான வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
இந்நிலையில் ஒரு நாள் வழக்கம் போல கைதிகள் அனைவரும் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது உடன் சென்ற கொள்ளையர்கள் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்த ஒரு பெரியவரை அடித்து உதைத்தனர். வீணாகத் துன்புறுத்தி நகைத்தனர். பொறுக்கமுடியாத சிந்துபாத் அதனை தட்டிக் கேட்டான். பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டை கை கலப்பில் முடிந்தது. கொள்ளையர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு வஞ்சகமான முறையில் சிந்துபாத்தை தாக்கினர். இறுதியில் சிந்துபாத் கைது செய்யப்பட்டான். ஒரு தனி சிறையில் அவனைக் கொண்டு சென்று அடைத்தனர் அக் கொள்ளையர்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தாள் தையபா. காரணம் அது நாள் வரையில் கொள்ளையர்களை எதிர்க்கும் அளவுக்கு அங்கு எந்த ஆணும் துணிந்ததில்லை. ஆனால் இன்று ஒருவன் துணிந்து இருக்கிறான் என்றால் சும்மாவா? அது தான் தையபாவின் மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணம். ஜா ஃ பர் கானை அழிக்க சிந்துபாத் தான் சரியான ஆள் என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அதனால் எப்படியாவது சிந்துபாத்தை தப்பிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
அன்றைய தினம் தன்னை அணுகிய ஜா ஃ பர் கானிடம் அன்பாக நடந்து கொண்டாள் தையபா. தையபா பயத்தில் மனம் மாறிவிட்டாள் போல என்று நினைத்துக் கொண்டான் ஜா ஃ பர் கான். அப்போது மிக நைசாக பேசி சிந்துபாத் அடைக்கப்பட்டு இருக்கும் இடத்தை அறிந்து கொண்டாள். அத்துடன் அந்தச் சிறையின் சாவியையும் ஜா ஃ பர் கான் அசந்து இருக்கும் நேரத்தில் அவனிடம் இருந்து எடுத்துக் கொண்டாள். மது வகைகளை தனது கைகளால் அவன் போதும் போதும் என்று சொல்ல அதிகதிகமாக பருகச் செய்தாள். அதனால் ஜா ஃ பர் கான் மதுவில் மயங்கி விழுந்தான். அப்போது நள்ளிரவு வேளை சிந்துபாத் இருக்கும் இடத்தை பதுங்கிப் பதுங்கி சென்று அடைந்தாள் தையபா.
"நமது தலைவரை மீறி யாரால் இந்தத் தீவுக்குள் அவ்வளவு எளிதாக வர முடியும்?" என்ற நம்பிக்கையில் அலட்சியமாக தூங்கினர் சிறைக் காவலர்கள். இப்படியாக சூழ்நிலை அனைத்துமே தையபாவிற்கு சாதகமாக இருக்க மெல்லச் சென்று சிறைக் கதவை திறந்து சிந்துபாத்தை விடுவித்தாள் தையபா. தனக்கு உதவி செய்த தையபாவை பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டான் சிந்துபாத். அவளையும் தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டான். அவளும் அதற்கு சம்மதித்தாள். இருவரும் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.
அடுத்த நாள் காலை தையபாவை தேடினான் ஜா ஃ பர் கான். அவள் காணப்படாததால் அதிர்ந்தான். இந்த சமயத்தில் கொள்ளைக் கூட்டத்தில் இருந்த ஒருத்தன் ஓடி வந்து ஜா ஃ பர் கானிடம் மீண்டும் துருக்கி மன்னன் ஷா ஆலம் படைகளை அனுப்பி இருப்பதை ஒற்றர்கள் மூலமாக அறிந்து கூறினான். இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியும் ஜா ஃ பர் கானுக்கு அன்றைய தினம் வந்து சேர்ந்தது. அது தான் சிந்துபாத் தப்பித்த தகவல். அதனைக் கேட்டு ஜா ஃ பர் கானின் கண்கள் சிவந்தது. சிந்துபாத்தை பாதுகாக்கத் தவறிய தனது ஆட்களையே அவன் கொன்று தீர்த்தான். உடனே சிந்துபாத்தையும், தையபாவையும் தேடி இழுத்துவருமாறு தனது ஆட்களை ஜா ஃ பர் கான் பணித்தான். அதன் படியே அவனது ஆட்கள் அனைவரும் அவ்விருவரையும் தேடி தீவுக்குள் பல திசைகளில் சென்றனர்.
இதனைப் பற்றி ஏற்கனவே முன்குறித்து அறிந்திருந்த சிந்துபாத் ஜா ஃ பர் கானின் ஆட்களை கொல்ல ஆங்காங்கே பலதரப்பட்ட மரணப் பொறிகளை ஏற்பாடு செய்து வைத்து இருந்தான். அதற்கு அவனுடன் இருந்த தையபாவும் உதவினாள்.
ஆனால் அதில் வெகு சிலரே சிக்கிக் கொண்டு இறந்தனர். பெரும்பான்மையான கொள்ளையர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சிந்துபாத்தையும், தையபாவையும் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துபாத்தும் எவ்வளவு நேரம் தான் ஓடிக் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் கொள்ளையர்களின் ஒரு குழுவினரிடம் சிந்துபாத்தும், தையபாவும் சிக்கிக் கொண்டனர். எனினும் சிந்துபாத் தீரத்துடன் போரிட்டான். அனைத்துக் கொள்ளையர்களையும் கொன்று குவித்தான். இனியும் அந்தத் தீவில் இருப்பது ஆபத்து என்று முடிவு செய்த சிந்துபாத் படகு ஏதேனும் வராதா என்ற எண்ணத்தில் கடற்கரையை நோக்கித் தையபாவுடன் ஓடினான்.
அந்த சமயத்தில் துருக்கி அரசர் ஷா ஆலமின் படைகள் பலதரப்பட்ட படகுகளில் வந்து வேக வேகமாக அந்தத் தீவின் கரைகளில் இறங்கியது. சிந்துபாத் அவர்களின் கண்களில் பட அவனும் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவன் தான் போல, என்று நினைத்து அம்புகளால் அவனைத் தாக்கத் தொடங்கினர். ஆனால், உடன் ஒரு பெண் இருப்பதை கண்ட தளபதி தாக்குதலை உடனுக்குடன் நிறுத்தினான். சிந்துபாத்தும் தான் எண்ணற்ற படைவீரர்களால் சூழப்பட்டதால் வேறு வழி இன்றி கைகளை தூக்கி சரணாகதி அடைவது போல நின்றான். ஷா ஆலமின் ஆட்கள் சிந்துபாத்தையும், தையபாவையும் கைது செய்து விசாரித்தனர். அனைத்து விஷயங்களையும் சிந்துபாத் தளபதிக்கு புரியும் படியாக எடுத்து உரைத்தான். அதனைக் கேட்ட தளபதி சிந்துபாத்தின் நிலையை புரிந்து கொண்டார். சிந்துபாத் கொள்ளையர்களின் படை பலம் மற்றும் ஆயுத பலத்தை தளபதியிடம் எடுத்து உரைத்தார். அத்துடன் கொள்ளையர்களை குழுக்களாகச் சென்று சுற்றிவளைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் செய்வது தான் சிறந்தது என்று சிந்துபாத் கூற. படைத்தளபதி சிந்துபாத்தின் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு தனது படகுகளை மறைத்து வைத்தார். அனைவரும் இரவு வரும் வரையில் வியூகம் அமைத்துக் காத்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரமும் வந்தது. சிந்துபாத், தையபா வழி காட்ட இந்த முறை கொள்ளைக்கூட்டம் இருக்கும் இடத்தை சரியாக அடைந்தனர் ஷா ஆலமின் ஆட்கள். அத்துடன் அவ்விடத்தை சுற்றி வழைத்தனர். ஏற்கனவே தங்களுக்குள் ஒருவராக ஊடுருவி இருந்த ஜா ஃ பர் கானின் உளவாளிகளை கண்டு பிடித்து தீர்த்துக் கட்டி இருந்தார் தளபதி. அதனால் ஷா ஆலமீன் வீரர்கள் தீவுக்கே வந்து விட்டனர் என்ற செய்தியை அதுவரையில் கூட அறியாமல் இருந்தனர் கொள்ளையர்கள். இரவு வேளையாக வேறு இருந்ததால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனைப் பயன்படுத்தி ஷா ஆலமீன் படை வீரர்கள் கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். அம்பு மழை பொழிந்தார்கள். அதில் யுத்தம் செய்யாமலேயே எண்ணற்ற கொள்ளையர்கள் உறக்கத்திலேயே இறந்தனர். சுதாரித்துக் கொண்ட எஞ்சிய கொள்ளையர்கள் ஆயுதம் எடுப்பதற்குள் அவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இருந்தும் சமாளித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். கொள்ளையர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஷா ஆலமீன் வீரர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். வாள் வீச்சில் சிறந்த சிந்துபாத், தளபதியிடம் இருந்து ஒரு வாளை பெற்றுக் கொண்டு கொள்ளையர்களுடன் கடுமையாகப் போராடினான். அதனைக் கண்ட தளபதி வியந்து போனார். சிந்துபாத்தின் வாள் சுழன்ற வேகத்தில் எண்ணற்ற கொள்ளையர்களின் தலைகள் உருண்டது. ஒரு கொள்ளையன் வஞ்சகமாக சிந்துபாத்தை கொல்ல நினைத்து பின்புறத்தில் இருந்து விஷம் தடவிய கத்தியை வீச அதனைக் கண்ட தையபா வேறு வழி இன்றி தனது உடலில் அந்தக் கத்தியை பெற்றுக் கொண்டாள். அதைப் பார்த்த சிந்துபாத் துடித்துப் போனான். ஆனால், கத்தி ஆழமாக தையபாவின் உடலை பதம் பார்த்து இருந்ததால் ஜாஃ பர் கானை சிந்துபாத் கொல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை பெற்றுக் கொண்டு சிந்துபாத்தின் மடியிலேயே இறந்து போனாள் தையபா. இனியும் ஜாஃ பர் கானை விட்டு வைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த சிந்துபாத் அவனைத் தேடிச் சென்றான். இறுதியில் கண்டடைந்தான். சிந்துபாத்தைக் கண்ட ஜாஃ பர் கான் பற்களை நற நறவென்று கடித்தபடி, ”சிந்துபாத் இத்தனைக்கும் நீ தான் காரணமாக இருப்பாய். உன்னை விடப் போவதில்லை” என்று கூறியபடி கடுமையாக சிந்துபாத்தை தாக்கினான். இருவருக்கும் இடையில் பல பணி நேரங்களுக்கு வாள் சண்டை நடந்தது. இறுதியில் படுகாயங்கள் அடைந்து களைத்துப் போன ஜாஃ பர் கானின் தலையை துண்டித்து ஷா ஆலமீன் தளபதியிடம் கொண்டு சென்று கொடுத்தான் சிந்துபாத். தங்களுக்கு பல வருடங்களாக சவாலாக இருந்து, பெரும் தொல்லையை கொடுத்து வந்த மிகப் பெரிய கொள்ளையனான ஜாஃ பர் கான் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்ட மாத்திரத்தில் தளபதியால் அதனை நம்ப இயலவில்லை. எனினும், ஜாஃ பர் கானின் வெட்டப்பட்ட தலை தான் அவன் இறந்ததற்கு சாட்சி என்கிற நிலையில் தளபதி கொள்ளைக் கூட்டத்து தலைவனின் மரணத்தை உறுதி செய்தார். சிந்துபாத்தை பாராட்டினார். இறுதியில் ஜாஃ பர் கானின் கூட்டத்தில் இருந்த அனைத்துக் கொள்ளையர்களையும் கண்டம் துண்டமாக வெட்டி எறிந்தார் தளபதி. அது தான் அரச கட்டளையும் கூட. அத்துடன் வணிகர்கள் மற்றும் சிறைப்பட்டு இருந்த ஏனைய கைதிகளையும் விடுவித்தார். சிந்துபாத்துடன் வந்த வணிகர்களை பத்திரமாக அவர்களது பொருள்களுடன் மீட்டு எடுத்து அதனை அவர்களிடமே ஒப்படைத்து பாக்தாத் அனுப்பி வைத்தார் தளபதி. அந்தக் கப்பலிலேயே சிந்துபாத்தின் வியாபாரப் பொருள்களும் பாக்தாத்திற்கு அனுப்பப்பட்டது. தளபதியிடம் சிந்துபாத்தின் பொருள்களையும் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதாக வாக்களித்தனர் வணிகர்கள். மறுபுறம், சிந்துபாத்தை ஷா ஆலமிடன் அழைத்துச் சென்று, அவன் செய்த வீர தீரச் செயல்களை மன்னரிடம் கூற வேண்டும் என்று துருக்கியின் தளபதியார் கொண்ட சித்தத்தால் சிந்துபாத்தை துருக்கி தேசத்திற்கு அழைத்துச் சென்றார்.
இதற்கிடையில் அதற்குள் ஜாஃபர் கான் இறந்த விஷயம் ஷா ஆலமிற்கு ஒற்றர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது. ஒரு கொடிய கொள்ளையன் இறந்து விட்ட செய்தியை கேட்டு துருக்கி மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக வர்த்தகர்களுக்கு இந்தச் செய்தி தேனாகத் தித்தித்தது.
மறுபுறம், சிந்துபாத்துடன் துருக்கியை அடைந்த தளபதியை மக்கள் வரவேற்றுக் கொண்டாடினர். ஷா ஆலம், தனது தளபதியை புகழ்ந்து பாராட்டினார். ஆனால், பெருந்தன்மை கொண்ட அந்தத் தளபதியோ,"அத்தனை புகழும் இறைவனையும் அதற்கு அடுத்தபடியாக இந்த சிந்துபாத்தையும் தான் போய் சேர வேண்டும்" என்று மன்னரிடம் கூறி. சிந்துபாத்தின் ஒவ்வொரு வீர தீரச் செயல்களையும் மன்னரிடம் எடுத்து உரைத்தார். அதனைக் கேட்ட சுல்தான் சிந்துபாத்தின் வீரத்தை புகழ்ந்து உரைத்தார். அத்துடன் சிந்துபாத்திற்கு எண்ணற்ற நவ ரத்தினங்களையும், தங்கக் கட்டிகளையும் பரிசாகக் கொடுத்து, தனது நண்பரான பாக்தாத்தின் கலீபாவிடம் சிந்துபாத்தை பாராட்டி ஒரு பாராட்டுப் பத்திரத்தை எழுதிக் கொடுத்து அனுப்பினார். மேலும், பெரும் மரியாதையுடன் ஒரு சொகுசுக் கப்பலில் ஏற்றி சிந்துபாத்தை மன்னர் அவரது செலவிலேயே பாக்தாத் நகரத்திற்கு அனுப்பி வைத்தார். அந்தக் கப்பலும் சில தினங்களில் பாக்தாத் நகரத்தை அடைந்தது.
அந்தக் கப்பல் பாக்தாத் நகரத்தை அடைவதற்குள்ளாக (சிந்துபாத்துடன் முன்பு ஒரே கப்பலில் சென்று கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டு) தளபதி மூலமாக முன்னதாகே பாக்தாத் நகருக்கு அனுப்பப்பட்ட வணிகர்கள் சிந்துபாத்தின் பெருமைகளை நாடெங்கிலும் பரப்பி வைத்திருந்தனர். அதனால் பாக்தாத் வந்து இறங்கிய சிந்துபாத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவன் புகழை பாடித் துதித்தனர். சிந்துபாத்தும் தான் வந்து இறங்கிய கையோடு முதல் வேளையாக கலீபாவை சென்று பார்த்தார். துருக்கி மன்னர் தனக்கு அளித்த பாராட்டுப் பத்திரத்தை மன்னரிடம் சமர்ப்பித்து மகிழ்ந்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த பாக்தாத்தின் கலீபா, சிந்துபாத்திற்கு "பாக்தாத் சிங்கம்" என்னும் விருதை அளித்தார். அது பாக்தாத்தில் சிறப்பாக செயலாற்றிய ராணுவ வீரர்களுக்கு மட்டுமே அன்றைய காலகட்டத்தில் அளிக்கப்பட்டு வந்து அந்நாட்டின் உயரிய விருது. எனினும் சிந்துபாத்திற்கு அந்த விருதை மனமுவந்து (அவன் ராணுவத்தில் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக) அளித்து அவனை சிறப்பான முறையில் கௌரவித்தார் பாக்தாத் மன்னர்.
இப்படியாக சிந்துபாத்தின் ஐந்தாவது பயணம் அவனுக்கு மிகப் பெரும் வெற்றியை தந்தது. துருக்கி மன்னர் ஷா ஆலம் கொடுத்த பரிசுகளே சிந்துபாத்தின் பத்து தலைமுறைக்கு வரும் என்கிற நிலையில், பாக்தாத்தின் கலீபாவும் நாட்டின் பெருமையை தமது வீரத்தால் உலகிற்கு புரிய வைத்த சிந்துபாத்திற்கு ஏராளமான பொன்னையும், பொருளையும் அள்ளி, அள்ளிக் கொடுத்து அவனை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கச் செய்தார். இது தவிர வணிகர்கள் சிந்துபாத்தை சந்தித்து அவர்கள் விற்ற சிந்துபாத்தின் பொருள்களுக்கு உரிய நியாயமான தொகையையும் அவனிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதன் மதிப்பு மட்டும் நாற்பது லட்சம் தினார்கள் ஆகும். அந்தக் காலத்தில் பாக்தாத்தின் ஒரு தினார் என்பது முப்பது வெள்ளிக்கு சமம். இப்படியாக சிந்துபாத்தின் ஐந்தாவது பயணம் அவனுக்கு செல்வச் செழிப்பை பெற்றுத் தந்தது. அதனைக் கொண்டு அவனது அரண்மனையை விஸ்தரித்தான். மன்னரின் அரண்மனையை விட சிந்துபாத்தின் மாளிகை அழகுடன் காணப்பட்டது கண்டு, மன்னரே ஆச்சர்யம் கொண்டார். அத்துடன் தான் செய்து வந்த தருமங்களையும், தானங்களையும் அதிகரித்தான் சிந்துபாத். அதனால் ஏழை மக்கள் பலர் அவனை வாழ்த்தினர். தினம் நான்காயிரம் ஏழைகளுக்கு விருந்தளித்தான். இதனால் மக்கள் சிந்துபாத்தை பெருமைப்பட பார்த்தனர். எனினும், சிந்துபாத்தின் மனம் தனக்காக அன்று உயிரையே கொடுத்த தையபாவையும் நினைத்து அழாமல் இல்லை.
