கைகேயி சூழ்வினைப் படலம் - 1649
நகர மக்கள் மகிழ்ச்சி
பெரும்பாலோர் மனநிலை
1649.
மாதர்கள், கற்பின் மிக்கார்,
கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்;
வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை
ஒத்தாள்; அவ் ஊர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன்
தன்னை ஒத்தார்.
அவ் ஊர் - அந்த அயோத்தி நகரத்தில் வாழும்; கற்பின் மிக்கார்
மாதர்கள் - கற்பிற் சிறந்த முதிய மகளிர்கள்; கோசலை மனத்தை
ஒத்தார் -இராமனுடையதாய் கோசலையின் மனம் போன்ற மனம்
உடையவர் ஆயினர்; வேறு உள மகளிர்எல்லாம் - மற்ற இளம்
பெண்கள் எல்லாம்; சீதையை ஒத்தார் - மகிழ்ச்சியில்சீதையைப்
போன்றவர் ஆயினர்; அன்னாள் திருவினை ஒத்தாள் - அந்தச் சீதை
இலக்குமியை ஒத்தவள்ஆயினாள்; வேதியர் வசிட்டன் ஒத்தார் -
மறையவர்கள் வசிட்டமுனிவரைப் போன்றவர் ஆயினர்; சாதுகை மாந்தர்
எல்லாம் - சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்; தயரதன் தன்னை
ஒத்தார் - தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர்.
நகர மக்கள் அவரவர் தகுதிக்கேற்ப அடைந்த மகிழ்ச்சிபொருந்திய
மனநிலை அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது. இராமன் முடுசூடுவது அரசத்
திருவைமனத்தலாதலால் அத்திருமகள் மகிழ்வதுபோலச் சீதை மகிழ்ந்தாள்
என்றார். 70
