சிந்துபாத்தின் ஆறாவது கப்பல் பயணம்
ஐந்து பயணங்களின் மூலமாக சிந்துபாத்திற்கு பெரும் சொத்துக்கள் சேர்ந்தன. சொத்துக்கள் மட்டுமா? புகழும் கூடத் தான். அதனால், தனது ஆறாவது கப்பல் பயணத்திற்கு ஆயத்தம் ஆனான் சிந்துபாத். அதன் பொருட்டு அதற்குத் தேவையான வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் குவித்தான். பிறகு ஆட்களை வைத்து துறைமுகத்திற்கு அனைத்தையும் கொண்டு சென்றான். அங்கு சக வணிகர்களின் சரக்குகளுடன் தனது சரக்குகளையும் கப்பலில் ஏற்றினான். அதனைப் பார்த்த வியாபாரிகளுள் சிலர் சிந்துபாத்தை வரவேற்றனர். இன்னும் சிலர்," சிந்துபாத்! தங்களுக்குத் தான் இறைவன் அனைத்தையுமே அருளி விட்டாரே! இன்னும் ஏன் சிரமப்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும்?" என்று கேட்க. அதற்கு சிந்துபாத் பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்தார். அப்போது அந்தக் கப்பலை இயக்க இருக்கும் கப்பல் தலைவன் சிந்துபாத்தைக் கண்டதும் அகம் மகிழ்ந்து வரவேற்றான். அத்துடன் அங்கு கூடி இருந்த வியாபாரிகளிடம், "எனது கடல் பயண அனுபவத்தை விட, சிந்துபாத்தின் அனுபவம் மிகப் பெரியது" என்று கூறி உவகை கொண்டான்.
அதனைக் கேட்ட சிந்துபாத் கப்பல் தலைவரிடமும் கூடி இருந்த மற்ற வியாபாரிகளிடமும்," கப்பல் பயணம் வெற்றி பெறுவது என்பது உண்மையில் நம்முடைய கையில் இல்லை; எத்தனை தான் அனுபவம் இருந்தாலும் ஆண்டவன் அருள் இருந்தால் தான் நாம் நினைத்தது போன்று செல்ல முடியும். ஆகவே, இதில் அனுபவம் ஒன்றும் முக்கியம் அல்ல. ஆண்டவனின் அருள் தான் மிக முக்கியம். அவர் மனது வைத்தால் தான் நம்மைத் துன்பங்கள் வராமல் காத்தருள முடியும்" என்று மிகவும் பணிவாகக் கூறினான். அதனை அங்கிகரிப்பது போல அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும் தலை அசைத்தனர்.
இதற்கிடையில் கப்பல் கிளம்பும் நேரமும் வந்தது. கப்பல் தலைவன் அதற்குண்டான சமிக்ஞைகளை செய்ய சிறிது நேரத்தில் கப்பல் தனது பயணத்தை துவக்கியது. சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு கப்பல் "ஜமூர்" என்னும் இடத்தை அடைந்தது. அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தை நடத்தினர். நிறையப் பொருள்களை ஈட்டினர். பிறகு மீண்டும் தங்களது கப்பல் பயணத்தை தொடர்ந்தனர். இப்படியாக பல தீவுகளை கப்பல் கடந்து சென்றது. வியாபாரமும் செழிப்பாக நடந்து வந்தது. ஒவ்வொரு துறை முகத்திலும் கொழுத்த ஆடு, மாடுகளையும் உணவுக்காக கப்பலில் ஏற்றினர் மாலுமிகள். பெரும்பாலும் அனைவரும் அசைவ உணவையே விரும்பியதால் அதிக அளவில் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டன. அதன் மாம்சக் கழிவுகள் நிரம்பி வழிந்ததால், அதனை கடலில் விட்டு வந்தனர். இப்படித் தான் "சாபா" என்னும் தீவை அடையும் சமயம் அதிகளவில் மாமிசக் கழிவுகளை கடலில் விட்டனர் மாலுமிகள். அந்த குறிப்பிட்ட கடற் பகுதி, மிகுந்த ஆபத்தான கடற் பகுதி. காரணம் அங்கு சுறா மீன்கள் அதிக அளவில் காணப்பட்டன. அவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான உருவத்தைக் கொண்டு இருந்தன. மாம்சக் கழிவுகளால் கடலில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து ரத்த வாடை வருவதை உணர்ந்த அந்த மீன்கள் உடனே அந்த வாடையை பிடித்தபடி கடலில் கப்பல் இருக்கும் இடத்தை நெருங்கியது. அத்துடன் அந்தக் கப்பலை சுற்றி அதிகளவில் சுறா மீன்கள் வட்டமிட்டன. இதனை கவனிக்காத கப்பல் ஊழியர்கள் மேலும், மேலும் கழிவுகளை கடலில் கொட்டி வந்தனர். அந்த வாடையால் வெறி அடைந்த சுறா மீன்கள் வேகமாக வந்து கப்பலையும் தாக்கின. அந்தக் கப்பல் ஒரு கணம் நிலை குலைந்தது. கப்பலின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. அது வரையில் கூட யாருக்கும் எதுவும் புரியவில்லை.
ஆனால் சிந்துபாத்தோ கடல் அலைகளின் மீது சுறா மீன்களை கண்ட மாத்திரத்தில் அனைத்தையும் யூகித்துக் கொண்டு கப்பல் கழிவுகள் வெளியேற்றப் படுவதை உடனே நிறுத்துமாறு மாலுமிகளிடம் கூறினான். அத்துடன் கப்பல் தலைவனிடம் இவ்விஷயத்தை பற்றிக் கூறி உடனே கப்பலை அங்கிருந்து வேகமாக செலுத்தும் படிக் கூறினான். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த கப்பல் தலைவன் உடனே மாலுமிகளின் உதவியால் கப்பலை அதிவேகமாக செலுத்த ஆணையிட்டான். கப்பலும் சற்று தூரத்தில் இருந்த "சாபா" தீவை நோக்கி விரைந்து செலுத்தப்பட்டது. மறுபுறம், மாலுமிகளில் சிலர் கப்பலை தடுக்க முயன்ற சுறாமீன்களை வேறு வழி தெரியாமல் வேட்டை ஆடத் துவங்கினர். இதனால் சுறா மீன்களில் சில செத்து கடலில் மிதந்தன. அதன் ரத்தம் வெள்ளமென கடலில் பாய்ந்தன அந்த ரத்த வாடைக்கு கடலுக்கு அடியில் இருந்த மேலும் பல பெரிய திமிங்கலங்கள் அலைகளின் மேல் எழுந்தன. அவைகள் கப்பலை விடாமல் துரத்திச் சென்று தாக்கின. கப்பல் பல முனைகளில் இருந்து தாக்கப்பட்டது. அதனைக் கண்ட அனைவரும் நடு, நடுங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். கப்பல் தலைவனோ தைரியமாக நிலமையை சமாளித்து வேகமாக கப்பலை செலுத்தக் கூறினான். இதன் காரணமாக அந்தக் கப்பல் அதி விரைவாக செலுத்தப் பட்டதால் சுராமீன்களால் அதனை வெகு தூரம் வரையில் தொடர இயலவில்லை. இந்தப் பதற்றத்தில் கப்பல் "சாபா" தீவை அடையும் சமயம். ஒரு பெரும் பாறையில் மோதி சுக்கல், சுக்களாக உடைந்தது. கப்பலில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அவ்வாறு தத்தளிக்கும் சமயத்தில் கூட தாங்கள் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தும் தண்ணீரோடு போனாலும் போகட்டும், தங்களது உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் அனைவரும் எண்ணினார்கள். இன்னும் சொல்லப் போனால் இறைவனிடமும் அதைத் தான் வேண்டினார்கள். ஆனால் சிந்துபாத் உட்பட சிலரைத் தவிர மற்றவர்களின் விதி உண்மையில் மோசமாகத் தான் இருந்தது. சிலர் கடலில் விழுந்த மாத்திரத்தில் குளிரில் நடுங்கித் தவித்தனர். அந்தக் குளிரே அவர்களை நீந்த விடமால் கொன்றது. இன்னும் சிலரை கடல் மீன்கள் இழுத்துச் சென்றன. வெகு சிலரே, கப்பலில் இருந்து மிதந்து வந்த உடைந்த துண்டுகளை பிடித்த படி நீந்தி "சாபா" தீவை அடைந்தனர்.
"சபா" தீவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு மிகப் பெரிய தீவு நாடாகும். "லைப்பி" என்னும் நதி அந்தத் தீவை இரு பகுதியாக பிரித்துள்ளது. அதில் ஒரு பகுதி வனம் நிறைந்த பகுதி. அது மட்டும் அல்ல மிகுந்த ஆபத்தான பகுதி. இன்னொரு பகுதி மக்கள் வசிக்கும் நகரத்து பகுதி. "லைப்பி" என்றால் துயரம் என்று பொருள். அதாவது அந்த நதியில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் வந்து மக்களுக்கு பெரும் துயரத்தை அளிக்கும் என்பதால் அதனை "லைப்பி" என்றே அழைத்து வந்தனர் மக்கள்.
சிந்துபாத்தும் அவனுடன் கடலில் மிதந்து வந்தவர்களும் அந்தத் தீவின் ஆபத்தான வனப் பகுதியில் தான் கால் வைத்தனர். ஊருக்குள் செல்ல வேண்டும் என்றால் பல மைல்களை கடந்து "லைப்பி" என்னும் நதியை அடைந்து ஓடத்தின் மூலம் அதனையும் தாண்டிச் சென்றால் தான் உண்டு. வேடிக்கை என்னயென்றால் "லைப்பி" ஆறில் பெரும்பாலும் ஓடப் போக்குவரத்து ஏதும் இருக்காது. அதற்குக் காரணம் அந்த ஆற்றின் வேகம் தான். இதனை யார் சிந்துபாத்துக்கு சொல்ல முடியும்? அவனுக்கோ அந்தத் தீவை பற்றி எதுவுமே தெரியாது. இந்நிலையில் வேறு வழி தெரியாமல் உடன் வந்த வணிகர்களுடன் கால் போன போக்கில் அந்தத் தீவுக்குள் நடந்து சென்றான் சிந்துபாத்.
அப்போது தூரத்தில் ஒரு பெரிய குகை உள்ளே தீப்பந்தங்களுடன் தென்பட அங்கு சென்று பார்க்கலாம் என்று சிந்துபாத்தும் அவன் உடன் வந்தவர்களும் முடிவு செய்து அந்தக் குகையை அடைந்தனர். அப்போது அந்தக் குகையில் இருந்து நிர்வாணமான மனிதர்கள் சிலர் வெளி வந்தனர். சிந்துபாத்தையும் உடன் மற்ற வர்த்தகர்களையும் கண்ட அந்த நிர்வாண மனிதர்கள் அவர்களிடம் எதையுமே பேச வில்லை. ஆனால், நாகரிகம் இல்லாத அந்த மக்கள் வர்த்தகர்கள் உட்பட சிந்துபாத்தையும் சேர்த்து சிறைபிடித்து தங்களது மன்னரிடம் கொண்டு சென்று நிப்பாட்டினார்கள்.
அவர்களது அந்த மன்னனும் நிர்வாணமாகத் தான் காணப்பட்டான். அந்த மன்னனை சுற்றியும் கருப்பு நிறப் பெண்கள் சேவகம் செய்து கொண்டு இருந்தனர். அந்த மன்னன் சிந்துபாத்தையும் மற்ற வணிகர்களையும் கண்ட மாத்திரத்தில் அவர்கள் அனைவரையும் அமரும் படியாக செய்கை காட்டினான். அதன்படியே அனைவரும் அமர்ந்தனர். அப்போது மற்றொரு நிர்வாண மனிதன் உணவைக் கொண்டு வந்து வர்த்தகர்கள் முன் வைக்கவும் சிந்துபாத்தைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த உணவை உட்கொண்டார்கள். ஆனால், சிந்துபாத்தை நிர்வாண மனிதர்கள் உணவு உன்னச் சொல்லி அடித்தும் கூட அவன் அதனை உண்ண மறுத்துவிட்டான். மன்னனோ! சிந்துபாத்தை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றபடி செய்கை காட்டிக் கூறினான். இந்நிலையில் உணவு உண்டவர்கள் அனைவருமே ஒரு வித மயக்க நிலையை அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கண் விழித்தனர். அப்போது அந்த நிர்வாண மனிதர்கள் அவர்களின் மேல் ஆடைகளை அகற்றி "கொக்கோ" எண்ணெய்யை கலந்த ஒரு பானத்தை குடிக்கக் கொடுத்தார்கள். சிந்துபாத்தையும் இந்த முறை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்கள் அந்த நிர்வாண மனிதர்கள். வேறு வழி இன்றி இந்த முறை சிந்துபாத்தும் அந்த பானத்தை குடித்தான். அந்த பானத்தை குடித்த மாத்திரத்தில் அவர்கள் அனைவருக்கும் இன்னும் அதிக, அதிகமாகப் பசித்தது. அதனால் மீண்டும் அந்த நிர்வாண மனிதர்கள் கொண்டு வந்து கொடுத்த அடுத்த கட்ட உணவை உண்டார்கள். சிந்துபாத்துக்கு பசி அதிகமாக எடுத்தது தான் இருந்தாலும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான். ஆனால், தங்களை கட்டுப்படுத்த முடியாத மற்ற வணிகர்கள் அதிக அளவில் நிர்வாண மனிதர்கள் கொடுத்த உணவை உண்டதால் அவர்களின் கண்கள் சொருக ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் நினைவாற்றலையும் அடியோடு இழந்து விட்டார்கள். சிந்துபாத் ஓரளவு சுய நினைவுடன் தான் இருந்தான். என்ன நடக்கிறது என்பதை அமைதியாக கவனித்தான்.
அந்த நிர்வாண மனிதர்கள் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதை சிந்துபாத் அறிந்து கொண்டார். மயங்கி விழுந்த வர்த்தகர்களுள் கொழுத்த ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவனைக் கொன்று அவனது மாமிசத்தை சமைத்து மன்னருக்கு அளித்து, தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். சிந்துபாத் ஒல்லியாக இருந்ததால் அவனை அவர்கள் எதுவும் செய்யவில்லை. வேறு வழி இல்லை என்றால் கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர். இப்படியாக சிந்துபாத்தின் கண்ணுக்கு முன்னாலேயே தினம் ஒருவரை கொன்று மன்னருக்கும் விருந்து படைத்து தாங்களும் உண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டால் தானும் குண்டாகி விடுவோமோ என்ற பயத்தில் சிந்துபாத் அவர்கள் கொடுத்த உணவை ஒரு வேலை மட்டும் கால் வயிறு அளவே உண்டு வந்தான். உயிர் வாழ வேண்டுமே? அதற்காகத் தான் அதனைக் கூட அவன் உண்ண வேண்டி இருந்தது. ஒவ்வொரு முறையும் பசி தன்னை வதைக்க இந்த நிலை தனக்கு தேவையா? என்று மனதினில் கூறி நொந்து வந்தான் சிந்துபாத். இப்படியாக சிந்துபாத் பல நாட்கள் கால் வயிறு மட்டுமே உணவு உண்டு வந்ததால் இன்னும் அதிகமாக மெலிந்தான். எலும்பும், தோலுமாக ஒட்டிய தசையுடன் காணப்பட்டார்.
ஒரு கட்டத்தில் சிந்துபாத்துடன் வந்த வணிகர்கள் அனைவரையுமே தினம் ஒருவராக கொன்று தின்று முடித்தனர் நிர்வாண மனிதர்கள். இறுதியில் சிந்துபாத் மட்டும் தான் எஞ்சி இருந்தான். அவனைக் கண்ட மன்னன், "இவனைக் கொன்றால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது?” என்று யோசித்தவனாய் சிந்துபாத்தை மேலும், கீழுமாக பார்த்தான். வெறுப்பில் சிந்துபாத்தை நாலு அடி, அடித்து தனது சேவர்களிடம்,"இவனைப் போன்ற ஆட்களை இனி பிடித்து வந்தால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். இவன் இனி எனது கண்ணிலேயே படக் கூடாது. எங்காவது கொண்டு சென்று விட்டு வாருங்கள்" என்று கூறி நாய், நரிகளை விரட்டுவது போல சிந்துபாத்தை விரட்டி அனுப்பி விட்டான். மன்னர் திட்டியதால் கோபம் அடைந்த நிர்வாண மனிதர்கள் அதற்குக் காரணமான சிந்துபாத்தை அடித்து இழுத்துச் சென்று அருகில் இருந்த "லைப்பி" நதிக் கரையில் விட்டுவிட்டு வந்தனர்.
தான் உயிருடன் திரும்புவோம் என்பதை சிந்துபாத்ததே நினைத்துப் பார்க்க வில்லை. செழிப்பான "லைப்பி" நதிக் கரையில் இருந்த பழங்களை உண்டு பசியை போக்கிக் கொண்டான். பிறகு எங்கே அந்த நிர்வாண மனிதர்கள் மனம் மாறி மீண்டும் வந்து விடுவார்களோ என்ற பயம் அவனது மனதைக் கவ்வியது. காட்டு வன விலங்குகளின் கர்ஜனை வேறு அவனை பயமுறுத்தியது. மாலை வரும் வேளை, இனியும் அவ்விடத்தில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்த சிந்துபாத் உடனடியாக அவ்விடத்தை வீட்டுக் கிளம்ப எண்ணினான். ஆற்றை தவிர அவனுக்கு அப்போதைக்கு தப்பிச் செல்ல வேறு மார்க்கம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தான்.
முன்னொரு முறை, இதே போன்ற சூழ்நிலையில் தான் ஒரு ஓடத்தின் மூலம் ஆபத்தில் இருந்து மீண்டது அவனது நினைவிற்கு வந்தது. அதன் படியே இப்போதும் ஒரு ஓடத்தை தயார் செய்ய நினைத்தான் சிந்துபாத். ஒரு கட்டு மரத்தைக் கட்ட வேண்டும்; அதில் ஏறி ஆற்றின் வேகத்தில் சென்றால் எங்காவது ஒரு நகரத்தை நிச்சயமாக அடையலாம் என்ற நம்பிக்கை தோன்றவும் அவ்வாறே அங்கிருந்த மரங்களை வெட்டி அதனை உறுதியாகக் கட்டி ஒரு தெப்பத்தை செய்தான். இப்போது சிந்துபாத்தின் ஒரே கவலை தண்ணீரின் வேகத்திற்கு அந்தத் தெப்பம் ஈடு கொடுக்க வேண்டுமே என்பது தான். அதற்காக ஒரு பச்சை மரத்தில் உள்ள பட்டையை உரித்து அதனை நாராக்கி நன்றாக இறுக்கமாக தெப்பத்தில் கட்டினான். இனிமேல் அந்தத் தெப்பம் நிச்சயமாக ஆற்றின் வேகத்தை தாங்கும் என்ற நம்பிக்கை சிந்துபாத்திற்கு வந்தது. அப்படி ஒரு நம்பிக்கை பூரணமாக அவனுக்கு வந்த பின்னர் தான் தெப்பத்தை மெதுவாக இழுத்துச் சென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு ஆற்றில் தள்ளி அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டான். உடனே அந்தத் தெப்பம் அடுத்த சில கணங்களில் அந்த காட்டாற்று வெள்ளத்தில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டது. எனினும், தண்ணீர் சில இடங்களில் அந்தத் தெப்பத்தை புரட்டி எடுத்தாலும் சிந்துபாத் தனது கைப் பிடியை மட்டும் தளர்த்தவில்லை. இந்தத் தெப்பத்தை விட்டால் தனக்கு வாழ்வே இல்லை என்று சிந்துபாத்தின் மனம் எண்ணியது தான் அதற்குக் காரணம். மறுபுறம் அந்தத் தெப்பம் வேகமான அந்த ஆற்றில் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது.
அந்த ஆறு ஒரு மலையை ஒட்டிச் சென்று கொண்டு இருந்தது. சிந்துபாத் தெப்பத்தை நிறுத்திவிட முயன்றான். எனினும் ஆற்றின் வேகத்தில் அவனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. பின்னர் அந்த ஆறு ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்தது. தெப்பத்தை பலமாகப் பிடித்துக் கொண்டு இருந்ததால் பாய்ந்த வேகத்தில் நல்ல காலமாக சிந்துபாத்துக்கு அடி ஒன்றும் படவில்லை. இப்படிப் பல விதமான சாகசங்களை செய்த அந்தத் தெப்பம் கடைசியாக ஒரு பெரிய பட்டினத்தின் கரையை அடைந்தது. ஆற்றின் மறுபுறம் கரையில் நின்ற மக்கள் தெப்பத்தில் இருந்து கைகாட்டிய சிந்துபாத்தைப் பார்த்து விட்டார்கள். உடனே அவர்கள் கையில் வைத்திருந்த வடம் போன்ற கயிற்றை வீசி எறியவும் கயிற்றைப் பலமாகப் பிடித்துக் கொண்ட சிந்துபாத்தை அந்த நல்ல உள்ளம் படைத்தவர்கள் சிலர் சேர்ந்து இழுத்துக் கரை சேர்த்து விட்டார்கள். களைப்பினால் அவர்களது நடுவில் பிணம் போலக் கிடந்த சிந்துபாத்துக்கு மருத்துவர்களை அழைத்து வைத்தியம் பார்த்தனர் அங்கு கூடி இருந்த மக்கள் சிலர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் களைப்பு நீங்கிய சிந்துபாத்தை அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு வயதானவர் மெல்ல தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பிறகு தன்னுடைய பணியாளனை அழைத்து முதலில் சிந்துபாத்தை குளிக்கக் கூட்டிச் செல்லக் கூறினார். சிந்துபாத் குளித்து முடித்ததும் அந்தப் பணியாளனே சிந்துபாத் உடுப்பதற்கு ஏதுவான நல்ல ஆடைகளுடன் தயாராக நின்றான். சிந்துபாத் ஆடைகளை உடுத்தி அந்தப் பெரியவர் பக்கம் வந்து நன்றி கூறவும் முதலில் அவனை உட்காரச் சொன்னார் அவர்.
பின்னர் சிந்துபாத்திற்கு நல்ல சுவையான உணவு வகைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. "நன்றாகச் சாப்பிடுங்கள்; கலைத்துப் போய் இருப்பீர்கள்" என்று அன்புடன் கூறி சிந்துபாத்தை சாப்பிட வைத்தார் அந்தப் பெரியவர். பிறகு தனது அரண்மனை போன்ற இல்லத்திலேயே ஒரு அறையில் சிந்துபாத்தை அந்தப் பெரியவர் தங்க வைத்தார். சிந்துபாத் அந்த அறையிலேயே தூங்கி ஓய்வெடுத்தான்.
அடுத்த நாள் காலை விடிந்ததும் சிந்துபாத்தை அந்தப் பெரியவர் வந்து மரியாதை நிமித்தமாகப் பார்த்தார். அத்துடன் சிந்துபாத்திடம்," தங்களது தெப்பம் அணைத் தடுப்புச் சுவரில் நின்று விட்டது. அதனை நமது இளைஞர்கள் கொண்டு வந்து விட்டார்கள்" என்று கூறினார்.
அதனைக் கேட்ட சிந்துபாத்," அந்தத் தெப்பம் தான் என்னை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது. உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை" என்று கண்ணீர் பெருக்கெடுக்கக் கூறினான்.
"தாங்கள் நன்றி கூற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை; இப்போது உங்களுக்கு ஓய்வு தான் அதிகம் தேவை; அதனால் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு வேண்டிய உதவிகளை இவர்கள் செய்வார்கள்" என்று கூறி தனது வேலைக் காரனையும், அவனுடைய மனைவியையும் காட்டி விட்டுச் சென்றார் அப்பெரியவர். மறுபுறம், சிந்துபாத் அந்தப் பெரியவர் தன்னிடம் விடை பெற்றுச் சென்ற மாத்திரத்தில் எதையோ எண்ணியவனாகப் படுத்திருந்து அவ்விதமே கண்ணயர்ந்து விட்டான்.
இப்படியாக சிந்துபாத் அந்தப் பெரியவரின் வீட்டில் தான் சுகமாக ஓர் இரு நாட்கள் தங்கி இருந்தான். அந்தப் பெரியவரும் சிந்துபாத்தை தனது மகனாகவே பாவித்து நல்ல முறையில் நடத்தி வந்தார். இப்படியாக மூன்றாவது நாளும் இனிதே கழிந்தது. நான்காம் நாள் சிந்துபாத்தை பார்க்க வந்த அந்தப் பெரியவர். சிந்துபாத் உற்சாகமாக காணப்படுவதை பார்த்து இறைவனுக்கு நன்றி கூறினார். மேலும் சிந்துபாத்திடம்," சந்தோஷம் தானே மகனே! உனக்கு ஒன்றும் குறை இல்லையே! இன்றைய தினம் சாயங்காலம் நாம் கடைத் தெருவுக்குப் போக வேண்டும்; நீ ஏறி வந்தாயே தெப்பம் அதனை ஏலம் விட வேண்டும்; அதற்காகத் தான் உன்னை கூப்பிடுகிறேன்" என்றார்.
"அந்தத் தெப்பம் என்ன விலை பெறப்போகிறது?. அதைப் போய் யார் வாங்கப் போகிறார்கள்?" என்று அந்தப் பெரியவரைப் பார்த்து அலட்சியமாகக் கேட்டான் சிந்துபாத்.
"மகனே! விஷயம் தெரியாமல் நீ பேசுகிறாய். நீ தெப்பமாக கட்டி ஏறிப் பயணித்த மரங்களில் பாதிக்கு மேல் சந்தன மரங்கள் தான். அது இப்போது காய்ந்து மெருகுடன் காணப்படுகிறது. விற்றால் நல்ல விலைக்குப் போகும். அதனால் தான் அதனை விற்க ஏற்பாடு செய்து இருக்கிறேன். நியாயப்படி அது உன்னுடையது அதனால் நீயும் என்னுடன் வர வேண்டும்" என்று அந்தப் பெரியவர் சிந்துபாத்திடம் மறுமொழி கூறவும். அதனைக் கேட்ட சிந்துபாத் ஆச்சர்யம் அடைந்தான். தப்பித்தால் போதும் என்ற பதற்றத்தில் அவன் வனத்தில் இருந்து முறித்தும், பிளந்தும் எடுத்த மரங்களில் பெரும்பாலும் அனைத்தும் சந்தனக் கட்டைகள் என்பது அப்போது தான் அவனுக்கே புரிந்தது.
பிறகு அந்தப் பெரியவருடன் கடைத் தெருவுக்குச் சென்றான் சிந்துபாத். அங்கு அந்தச் சந்தன மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி ஏலம் விடுவதற்கு தயாராக வைத்திருந்தனர். அந்தப் பெரியவர் தலைமையில் ஏலம் துவங்கியது. ஏலம் கேட்டவர்கள் ஆயிரம் தினார் வரையில் கேட்டார்கள். அதற்கு மேல் யாரும் கேட்கவில்லை.
"என்ன மகனே! இதன் விலை இப்போதைக்கு இவ்வளவு தான் போகும். இதனை விற்று விடலாமா அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.
அதற்கு சிந்துபாத் அந்தப் பெரியவரிடம்," தங்களது கிடங்குக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்; அத்துடன் நான் உங்களிடம் இதனை விற்று விட்டதாகவே இருக்கட்டும்" என்று மறுமொழியாகக் கூறினான்.
சிந்துபாத் அவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்தப் பெரியவர் உடனே அங்கு நின்ற தனது பணியாளர் ஒருவரிடம் தன்னுடைய கிடங்கு ஏதேனும் ஒன்றில் கொண்டு சென்று அந்த சந்தனக் கட்டைகளை வைக்கச் சொன்னார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஆயிரம் தினாரை ஒரு பையில் போட்டு அந்தரங்கமான ஒரு இடத்தில் வைத்துப் பூட்டிச் சாவியை சிந்துபாத்திடம் கொடுத்தார். ஆனால், சிந்துபாத்தோ அதனை வாங்கவில்லை," நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று அந்தப் பெரியவரிடம் கொடுத்து விட்டான்.
அன்றைய தினமும் சிந்துபாத் நன்றாக உண்டும் ஓய்வு எடுத்தும் அந்தத் தனி அறையில் இருந்து வந்தான். மறுநாள் மாலையில் சிந்துபாத்துடன் தோட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த அந்தப் பெரியவர் மெல்ல தான் அது வரையில் மனதில் கேட்கத் தயங்கிய விஷயத்தை சிந்துபாத்திடம் சொல்லத் தொடங்கினார்.
"மகனே, நான் உன்னிடம் எனது மனம் திறந்து இதனைக் கூறுகிறேன். உன்னை நான் கண்ட முதல் நாளிலேயே உன்னை எனக்கு நன்றாகக் பிடித்துப் போய் விட்டது. எனக்கு மகன் யாரும் இல்லை; ஒரே ஒரு மகள் தான். அவளை உனக்கு மணம் செய்து கொடுக்க எண்ணுகிறேன்; இதனை நீ மறுக்க மாட்டாயே" என்றார்.
சிந்துபாத்தின் கரங்களைப் பற்றியவராய் இவ்விதம் கூறவும், சிந்துபாத் அவருடைய கைகளை அவ்விதமே தனது கண்களில் ஒற்றிக் கொண்டு, தன்னைப் பற்றியும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பாம்பு கடித்த இறந்த விஷயத்தையும் அந்தப் பெரியவரிடம் கூற. அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அந்தப் பெரியவர். மேலும் மீண்டும், மீண்டும் சிந்துபாத்தை தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே குறிக்கோளுடன் இருந்தார் அவர். ஒரு கட்டத்தில் சிந்துபாத் அந்தப் பெரியவரின் பேச்சிற்கு இணங்கி, "எல்லாமே தங்களது விருப்பம் போலவே நடக்கட்டும். எனக்குத் தங்களின் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தான்" என்று கூற அதனைக் கேட்ட அந்தப் பெரியவர் அகம் மகிழ்ந்தார்.
பிறகு மீண்டும் சிந்துபாத்திடம், "மகனே எனது ஒரே மகளின் வாழ்வு உன்னிடம் தான் உள்ளது. அவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள். நீ அவளை மணந்து கொள்வதன் மூலம். நீ என் அன்பு மகனாகக் கூட இருந்து எனது சொத்துக்களை அதிகாரம் செய்யலாம். மேலும் இந்தப் பெரிய வீடும், சொத்துக்களும் அவளுக்குத் தான்; அவளை மணந்து கொள்வதன் மூலம் உனக்குத் தான் எனது அத்தனை ஆஸ்திகளும் வந்து சேரும்" என்றார்.
அதனைக் கேட்ட சிந்துபாத்," ஐயா பெரியவரே! நிரந்தரம் இல்லாத தன்மை கொண்ட இந்தச் சொத்துக்களுக்காக உங்களது மகளை நான் மணந்து கொள்ளவில்லை. உங்களது அன்பை என்னால் மீற முடியாது. பாக்தாத்தில் எனக்கும் நிறைய சொத்துக்கள் உண்டு; ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் பணத்தை விட வலிமை வாய்ந்தது அன்பும், தர்மமும் தான். அதனால் தான் நான் பிறந்தது முதற்கொண்டு அதனையே எனது முக்கியக் குறிக்கோளாக போற்றி வருகிறேன்" என்று மறுமொழி கூறினான்.
அதனைக் கேட்ட அந்தப் பெரியவர் சிந்துபாத்தின் நல்ல குணத்திற்கு அவன் கூறிய அந்த சொற்களையே சாட்சியாக ஆக்கிக் கொண்டு, உடனுக்குடன் தனது மகளை சிந்துபாத்திற்கு மணம் முடித்து வைத்தார். அந்தப் பெரியவரின் மகள் பெயர் "நதாஷா".
நதாஷா பணக்கார வீட்டில் பிறந்து இருந்தாலும் நல்ல குணத்துடன் தான் இருந்தாள். அவள் சிந்துபாத்தை நல்ல விதத்தில் கவனித்து வந்தாள். அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே வைத்து ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.
மறுபுறம், தனது பெண்ணிற்கு நல்ல பையனை திருமணம் செய்து கொடுத்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் நதாஷாவின் திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் அந்தப் பெரியவர் இறந்து போனார். நதாஷா தனது தந்தையின் திடீர் மரணத்தால் ஆறாத துயர் அடைந்தாள். சிந்துபாத் அவளை தேற்றி ஆறுதல் அளித்தான்.
அதன் பின்னர் சிந்துபாத்தின் மனைவிக்கு அங்கு இருக்க விருப்பம் இல்லை; தனது கணவருடன் பாக்தாத்திற்க்கே சென்று விட வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். எனவே, அவளுடைய சொத்துக்கள் அனைத்தும் விற்கப்பட்டன. கப்பலில் ஏறி சிந்துபாத்துடன் தனது பயணத்தை தொடர்ந்தாள் நதாஷா. கப்பல் பயணத்தை மட்டும் அல்ல, வாழ்க்கை பயணத்தையும் சேர்த்துத் தான்.
சில மாதங்களில் அந்தக் கப்பலும் பாக்தாத் நகரத்தை அடைந்தது. சிந்துபாத்தை பார்த்த அந்த ஊர் மக்கள் அவனை வரவேற்றனர். சிந்துபாத்திற்கு திருமணம் நடந்ததை எண்ணி அவனது நண்பர்கள் பூரித்தனர். தனது இல்லம் வந்து சேர்ந்த சிந்துபாத் தனது மாளிகையை நதாஷாவுக்கு சுற்றிக் காண்பித்தான். அந்த மாளிகையின் அழகில் நதாஷா தனது மனதையே பறி கொடுத்தாள். பிறகு நண்பர்கள், அதிகாரிகள், வியாபாரிகள் உட்பட மேலும் பல பெரிய மனிதர்களை வர வழைத்து மிகப் பெரிய திருமண விருந்தை ஏற்பாடு செய்து நடத்தினான் சிந்துபாத். அதில் கலந்து கொண்ட அனைவரும் சிந்துபாத்தை வாழ்த்தினர்.
பொதுவாக சிந்துபாத் தனது கடல் பயணத்தின் இறுதியில் ஏராளாமான செல்வத்துடன் திரும்புவது வழக்கம் தான். ஆனால், இந்த முறை செல்வத்துடன் சேர்த்து ஒரு அழகிய பெண்ணையும் மணம் முடித்து அழைத்து வந்திருப்பது கண்டு சிலர் பொறாமையும் அடைந்தனர். இப்படியாக சிந்துபாத்தின் ஆறாவது கப்பல் பயணமும் இனிதாகவே முடிந்தது.
