சித்திரகூடப் படலம் - 2178
இலக்குவன் அமைத்த சாலையின் அமைதி (2178-2181)
இலக்குவன் அமைத்த சாலை
2178.
நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல்நெடு முகடு ஒழுக்கி, ஊழுற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே.
நெடுங் கழைக் குறுந்துணி நிறுவி மேல் நிரைத்து - நீண்ட
மூங்கில்களின் சிறியதுண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து;
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி-வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை
நேராக நிறுத்தி; ஊழ் உற இடுங்கல் இல் கை ஏற்றிவிசித்து -
முறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி
நன்கு இறுக்கிக் கட்டி; முடங்கல் இல் வரிச்சுமேல் - வளைதல் இல்லாத
அந்தக் கட்டியவரிச்சுக்களின் மேலே; எங்கணும் - எவ்விடத்தும்; விரிச்சு
மூட்டி -விரித்து மூடு செய்து.
நீளக்கழி, குறுக்குக் கழிகள், தூலம் முதலியன கூரை வேய்வதற்கு
முன் கட்டப் பெறுவன. விரிச்சு - விரித்து. ஏகாரம் ஈற்றசை. 44
