சித்திரகூடப் படலம் - 2179
2179.
தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் கவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே.
தேக்கு அடைப் படலையின் செயிவு செய்து - தேக்க இலை
கொண்டு மேல் கூரையைச்செறிய மூடி; பின் - பிறகு; பூக் கிளர்
நாணலின் புல் வேய்ந்து- பூத்துவிளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி;
கீழ்த் தூக்கிய வேய்களின் - கீழேநிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்;
சுற்றுறச் சுவரும் போக்கி - சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து; மண்
எறிந்து - அதன்மேல் மண்ணை அடித்து; அவை -அச்சுவரை; புனலின்
தீற்றி - தண்ணீரால் மெழுகிப் பூசி.
முதலில் இலைகளை வேய்ந்து அதன் மேல் நாணற் புல்லைப்
பரப்பினான் என்க. இலைகள்நாணற்புல் விழாமல் தாங்குவன. மூங்கிற்
பிளாச்சுகளின் மேல் மண்பூசித் தண்ணீரால் மெழுகிச்சுற்றுச் சுவர்
அமைத்தானாம். ஏகாரம் ஈற்றசை. 46
