சங்க காலத்தில் வழங்கப்பட்ட விருதுகள் ஒரு பார்வை
சங்ககால அரசர்கள் சிறப்பாகக் கடமையாற்றுபவர்களுக்கும், சிறந்த கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர். அவர்கள் தந்த விருதுகள் பின்வருமாறு
1.எட்டி
2.ஏனாதி
3.காவிதி
4.கிழார்
5.கிழான்
6.குவளை விருது
7.தலைக்கோல்
8.தாமரை விருது
9.மாராயம்
வாருங்கள் இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:-
1. எட்டி விருது
எட்டி என்பது சங்ககால விருதுகளில் ஒன்று. சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் இது வழங்கப்பட்டது. எட்டிய நிலங்களில் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கிட்டும்படி செய்பவன் எட்டி. இந்த எட்டி என்னும் சொல் இக்காலத்தில் செட்டி என மருவி வழங்குகிறது.
தொல்காப்பியம் இதனை அழகாக சுட்டிக் காட்டுகிறது. இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் எட்டிப்பூ, எட்டிப்புரவு என எடுத்துக்காட்டுத் தருகிறார். யாழிசையில் சிறந்து விளங்கும் பாணனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப்பூ வழங்கப்பட்டது போல சிறந்த வணிகனுக்குப் பொன்னால் செய்த எட்டிப்பூ வழங்கி அரசன் சிறப்பித்தான் எனத் தெரிகிறது.
எட்டிப்பூ – எட்டி விருது பெற்றவனுக்கு வழங்கப்பட்ட பூ
எட்டிப்புறவு – எட்டி விருது பெற்றவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலம்
காவிதிப்பூ, காவிதிப்புறவு என்பன காவிதி விருது பெற்ற உழவனுக்கு வழங்கப்பட்டவை. இவற்றை இங்கு ஒப்புநோக்கிக் கொள்வது நன்று.
2. ஏனாதி
ஏனாதி என்பது சேனாபதியைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்ச்சொல். போரில் மதிலின் மீது ஏறுதல் ‘ஏணி’ எனப்படும். இதனைத் தொல்காப்பியம் "மடையமை ஏணிமிசை மயக்கம்" எனக் குறிப்பிடுகிறது. இது உழிஞைத்திணையின் துறைகளில் ஒன்று.
ஏ என்னும் சொல் அம்பைக் குறிக்கும்.
ஏ+ஆதி=ஏனாதி. இதில் ‘ன்’ என்பது சாரியை.
ஆ+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.
இவற்றைப் போலக் கா என்பது கான் என்றும், ஊ என்பது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
வில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்.
இதே போலத் தான் காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம். எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.
எட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்றும் இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.
3.காவிதி
காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக் கொள்வானாய் வழங்கப்பட்ட விருதின் மருவிய பெயரே காவிதி.
4.கிழார்
கிழார், கிழான் என்னும் சொற்கள் உரிமை பூண்டவரைக் குறிக்கும். பெண் ஒருத்திக்கு உரிமை பூண்டவனை அகத்திணை இலக்கணம் ‘கிழவன்’, ‘கிழவோன்’ என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன. நிலத்துக்கு உரியவனைத் திருக்குறள் கிழவன் எனக் குறிப்பிடுகிறது.
இந்தக் கிழார் என்னும் உரிமைப்பெயர் ஊரின் பெயரோடு புணரும்போது எல்லா இடங்களிலும் இனவொற்று மிகாமல் புணர்ந்துள்ளது. எனவே ஊரின் பெயர் ஊரிருள்ள மக்களைக் குறிக்கும் உயர்திணைப் பெயர் எனத் தெரியவருகிறது. இந்த வகையில் அரிசில் கிழார் என்றால் அரிசில் என்னும் ஊரில் வாழும் மக்களுக்கு உரியவர் எனப் பொருள்படும். இது இவருக்கு மக்கள் வழங்கிய விருது.
அரசன் ஓர் ஊரின் நிலம் முழுவதையும் வழங்கி, இறையிலியாக அதனை கிழார் பெருமகனாருக்கு உரிமையாக்கியதால் ‘கிழார்’ எனச் சிறப்பிக்கப்பட்டார் எனக் கொள்வாரும் உளர். ஆயின், இது அரசனால் வழங்கப்பட்ட விருது. செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு ஊர் வழங்கியதை எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சிக்குக் கொள்ளலாம்.
5.கிழான்
சங்ககால அரசர்களில் சிலரும், வள்ளல்களில் சிலரும் கிழான், கிழவன், கிழவோன் அவர்களுடைய நாட்டின் தலைநகரின் அல்லது வாழ்ந்த ஊரின் பெயரோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் கிழார் போல அந்த ஊருக்கு உரியவர்கள். இந்த உரிமை அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒன்று, இந்த உரிமை அந்த ஊர் அல்லது நாட்டு மக்களால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது பேரரசன் ஒருவன் இந்த உரிமையை வழங்கியிருத்தல் வேண்டும்.
வேறுபாடு
கிழான் முதலானோர் அரசன் அல்லது வள்ளல்.
கிழார் என்போர் புலவர்கள்
6. குவளை விருது
சங்ககால மன்னர்கள் வழங்கிய விருதுகளில் ஒன்று தாமரை. இது விறலி, பாடினி முதலான பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. கொல்லிமலையை ஆண்ட ஓரி அரசன் இந்த விருதினை வழங்கியதாகப் புலவர் வன்பரணர் குறிப்பிடுகிறார்.
இந்த விருதை விளக்கும் பாடல்களும் சங்க கால நூல்களில் காணக்கிடைக்கிறது. அதன் அடிப்படையில் இந்தப் பூ குளத்துக் குளிர்ந்த நீரில் பூக்காது. தலையில் சூட்டப்படும் ஒருவகை அணிகலன். வெண்ணிற வெள்ளி நாரால் தொடுக்கப்பட்டது என விளக்கப்படுகிறது.
7.தலைக்கோல்
தலைக்கோல் என்பது அரசன் கையில் வைத்திருக்கும் செங்கோல் போன்றதொரு கோல். சிலப்பதிகாரக் காலத்துச் சோழ வேந்தன் இதனை ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு வழங்கிச் சிறப்பு செய்தான். இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்திரன் மகன் சயந்தன். இவன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாக மாறினான். சோழன் அதனை வெட்டித் 'தலைக்கோல்' செய்துகொண்ட பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற்றான் என்னும் செய்தி சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.
8. தாமரை விருது
சங்ககால அரசர்கள் சிறந்த யாழிசைக் கலைஞர்களை போற்றிப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையை விருதாக வழங்கினர். சங்ககாலத்துக் காஞ்சி அரசன் தொண்டைமான் இளந்திரையன் தன்முன் பின்னணி இசைக்கருவிகளுடன் யாழிசை மீட்டித் தன் திறமையை வெளிப்படுத்திய இசைக் கலைஞனுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்து உள்ளான். அந்தத் தாமரை பாணன் தலையில் மேக வெளிக்கு இடையே தோன்றும் நிலாப் போல இருந்ததாம். இக்கருத்தை கீழ்க்கண்ட சங்க காலப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
வண்டு மொய்க்காத தாமரையாம்.
நெருப்பில் பூத்ததாம். (நெருப்பில் புடமிட்டுச் செய்யப்பட்டதாம்)
9.மாராயம்
மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது.
மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான்.
சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர்.
எ. கா. வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.
