பண்டையத் தமிழர் அணிகலன்கள்

bookmark

பண்டைய காலத்தில் அழகு என்பது ஒன்றுக்கு இருக்கக்கூடிய ஓரு பண்பியல்பு. அதை மனிதர் உணர்வது ஒரு மகிழ் அனுபவம். அந்தவகையில் "அழகியல்" என்பது அழகை உருவாக்கும், அல்லது வெளிப்படுத்தும், ரசிக்கும் ஓர் அணுகுமுறையைச் சுட்டுகிறது. ஓவியம், இசை, கதை, கவிதை, சிற்பம், கட்டிடம், மெய்யியல், நுட்பம் என்று அனைத்திலும் அழகியல் இருக்கும். இத்துறைகளில் தமிழர் அழகை ஆக்கும் வெளிப்படுத்தும் ரசிக்கும் அணுகுமுறையைத் தமிழர் அழகியல் குறிக்கின்றது.

தமிழர் அழகியலில் அணிகலன்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம் தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களையே நம் தமிழ் மக்கள் அதிகம் விரும்பி அணிந்து உள்ளனர். அவற்றிற்கு அப்படி ஒரு மதிப்பைக் கொடுத்து உள்ளனர். அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இவ்விரண்டையும் குறிக்கும். இப்படியாகத் தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம்.

பொருளாதார ரீதியிலும் தமிழர் தமது சேமிப்பை பொன் நகைகளாக மாற்றி வைத்தனர். நீண்ட காலமாக பொன் பணத்துக்கு ஈடாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று அமெரிக்க டாலர் ஒழுங்குடைமை இருப்பதால், இந்த செயற்பாடு அல்லது வழக்கம் சேமிப்பை தகுந்த வகையில் முதலீடு செய்து வருவாய் ஈட்ட தடையாக இருப்பதாகவும் பொருளியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றார்கள்.

தமிழர் அணிகலன்கள் வரலாறு

முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்". அத்துடன் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்.

நகை அணி வகைகள் : தமிழர்களின் நகை அணிகள் அல்லது வகைகள் கீழ்காணும் பல்வேறு விதமாக வகைப்படுத்தப் படுகின்றன. அவைகள் தலை அணிகள், காதணிகள், கழுத்தணிகள், இடையணிகள், கையணிகள், விரலணிகள், காலணிகள் ஆகும்.

தமிழர்கள் அணிந்து வந்த நகைகளின் பெயர் வருமாறு:-

பண்டைய தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகள்

தலையணி என்பன தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப்பூ, அடுக்குமல்லிப்பூ, இலை, அரசிலை, இராக்குடி, இலம்பகம், கடிகை, கன்னசரம், குச்சம், குஞ்சம், கொண்டைத்திருகு, கோதை, சடாங்கம், சடைநாகம், சடைத்திருகு, சந்திரப்பிரபை, சரம், சுடிகை, சுட்டி, சுரிதம், சூடிகை, சூடாமணி, சூடை, சூட்டு, சூரியப்பிரபை, சூழி, சூளாமணி, சேகரம், சொருகுப்பூ, தலைப்பாளை, தெய்வ உத்தி, தலைப்பட்டம், பதுமம், பிறை, புல்லகம், பூரப்பாளை, பொலம்பூந்தும்பை, பொற்பூ, பொற்றாமரைப்பூ, பொன்வாகை, பொன்னரிமாலை, மாராட்டம், முகசரம், முஞ்சம், வயந்தகம், வலம்புரி, திருகு பூ போன்றவையே.

அதுபோலக் காதணி என்பன தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், டோலாக்கு, தண்டட்டி போன்றவையே.

அதுபோலக் கழுத்தணிகள் என்பன கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை, பவளத்தாலி போன்றவை ஆகும்.

அதுபோலப் புய அணிகலன்கள் என்பன கொந்திக்காய் என்று அறியப்படும்.

கை அணிகலன் என்பன காப்பு, கொந்திக்காய்ப்பூ போன்றவை ஆகும்

அதுபோலப் பண்டையத் தமிழர்களின் கைவிரல் அணிகலன்கள் என்பன சிவந்திப்பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ போன்றவை ஆகும்.

பண்டையத் தமிழர்களின் கால் அணிகலன்கள் என்பன மாம்பிஞ்சுக் கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய்க் கொலுசு போன்றவை ஆகும்.

பண்டையத் தமிழர்களின் கால்விரல் அணிகள் என்பன கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி போன்றவை ஆகும்.

மேற்கண்ட அனைத்தும் பெண்களின் அணிகலன்கள் ஆகும். இனி ஆண் மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் பின்வருமாறு:-

ஆண்களின் அணிகலன்கள் எனப்படுவன வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் போன்றவை ஆகும்.

பண்டைய தமிழ்ப் பெண்கள் பயன்படுத்திய நகைகளின் பட்டியல் பின்வருமாறு:-

நெற்றிப் பட்டம், சடைநாகம், மூக்குத்தி, தோடு, கடுக்கன், தொங்கட்டான், சங்கிலி, அட்டியல், தாலி, பாம்படம், பதக்கம், காப்பு,  வளையல், மோதிரம், ஒட்டியானம், வளை, சதங்கை, காற் சங்கிலி, சிலம்பு, மெட்டி போன்றவை ஆகும்.