சங்ககாலப் பாண்டியர்
சேர சோழ பாண்டியர் தமிழ்நாட்டைச் சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசர்கள். இவர்களை மூவேந்தர் என வழங்குகிறோம். இவர்கள் ஆண்ட நிலப்பகுதியை முறையே சேரநாடு, சோழநாடு, பாண்டிய-நாடு எனக் குறிப்பிடுகிறோம். இவற்றை இருப்பிடம் நோக்கிக் குடபுலம், குணபுலம், தென்புலம் எனச் சங்ககாலத்திலேயே வழங்கிவந்தனர். இதில் சங்கம் அமைத்து தமிழை வளர்த்த புகழ் பெரும் பாலும் சங்க காலப் பாண்டியர்களைத் தான் சேரும் எனலாம். சங்க காலப் பாண்டியர்களுள் முடத்திருமாறன், மதிவாணன், பசும்பூண் பாண்டியன், பொற்கைப் பாண்டியன், இளம் பெருவழுதி, அறிவுடை நம்பி, பூதப் பாண்டியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன், கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, உக்கிரப் பெருவழுதி, மாறன் வழுதி, நல்வழுதி, குறுவழுதி,
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, நம்பி நெடுஞ்செழியன் ஆகியவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள். இவர்களைப் பற்றிக் கல்வெட்டு கூறும் செய்திகளைக் காண்போம் வாருங்கள்.
(1) முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
(2) மதிவாணன்
மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி, கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
(3) பசும்பூண் பாண்டியன்
பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன்.
பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.
(4) பொற்கைப் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
இவன் பொற்கை பெற்ற வரலாறு:
மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன்.
(5) இளம் பெருவழுதி
இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறர்க்கு உரியவனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்பு உடையவனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் திகழ்ந்தான். இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன. புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் வேறு, பரிபாடல் நூலிலுள்ள பாடலைப் பாடியவர் வேறு என்பது அறிஞர்கள் கருத்து. அப்பாடல்களின் மூலமாக இவனைப் பற்றி அறிய முடிகிறது.
(6) அறிவுடை நம்பி
அறிவுடை நம்பி பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி. இம்மன்னனைப் பற்றி புறம்-188, அகம்-28, குறுந்தொகை-230, நற்றிணை-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.
(7) பூதப் பாண்டியன்
பூதப்பாண்டியன் என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது. இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழி கொண்டவன். இவனுடைய மனைவி கோப்பெருங்கோப்பெண்டு என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர்.
(8) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன்.
அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு:
கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் "பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை உயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!" என மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.
(9) வெற்றிவேற் செழியன்
வெற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் என்பதனை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) போன்றன கூறுவது குறிப்பிடத்தக்கது.
இவன் சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு:
இவன் காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாமல் இருந்தது. குடிமக்கள் ஆடு,மாடுகளினை வளர்க்க முடியாமல் துன்புற்றனர். வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. இதனைப் பார்த்த நன்மாறனும் கண்ணகியின் சாபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என உணர்ந்து கண்ணகிக்கு விழா எடுத்தான். அவ்விழாவிற்குப் பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. வற்கடம் நீங்கியது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர். பாண்டியன் சித்திர மாடத்து உயிர் துறந்தான். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புகழப்பட்டான்.
நன்மாறனின் சிறப்பைப் பற்றி மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவ்வாறு பாடுகின்றார்.
"ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கை தகை மாண்வழுதி
வல்லைமன்ற! நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும! பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனோர்க்கே!”
—(புறம்-59)
பாடாண் திணைப் பாட்டாக விளங்கும் இப்பாடலில் "அழகான கண்டோர் மயங்கும் மார்பை உடையவன். வெற்றி மாலை அணிந்தவன். நீண்ட கைகளை உடையவன். கை நீண்டிருப்பது ஆண்மைக்குரிய அங்க இலக்கணம்! தகுதியான நல்ல குணங்களை எல்லாம் பெற்றவன். வலிமையானவன். விரும்பி பிறர்க்களிப்பான். பொய் உரையாதவன். பகைவரிடம் கோபம் உடையவன். பகைவர்களுக்குச் சூரியன் போன்றவன். எங்களுக்குத் திங்கள் போன்றவன்" எனப் புகழ்ந்து பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார்.
(10) கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம். பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம். வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
"சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.
"வடபுல மன்னர் வாட அடல் குறித்து - இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!"
என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.
(11) உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார். கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். அந்த வேங்கைமார்பன் ஆண்ட ஊரை இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம். இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். உக்கிரமாக போர் செய்யும் குணத்தைக் கொண்டவன் என்பதால் "உக்கிரப் பெருவழுதி" என அழைக்கப்படுவதாக புறநானூற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இவன் சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த ஔவையார் இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இறையனார் களவியல் உரையில் இவன் உக்கிரப் பெருவழுதி என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
(12) மாறன் வழுதி
மாறன் வழுதி சங்ககால பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான். குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான். பாண்டியன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன்.
(13) நல்வழுதி
நல்வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப் பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில்
"தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க - நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!" என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவன் அரசாண்டதற்கு சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயர் ஒட்டாக வருவதை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு அரசனாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
(14) குறுவழுதி
குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். பெரும் பெயர் வழுதியின் இளவல் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. இவரது பெயர் குறுவழுதியார் என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் என்றும், அண்டர் மகன் குறுவழுதி என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் விளக்கம்:
அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது. இதில் வரும் 'மகன்' என்னும் சொல் முறைப்பெயர் அன்று. ஆண்மகன், பெருமகன், திருமகன் போன்ற சொற்களில் பின்னொட்டாக அமைந்துள்ள மகன் என்னும் சொல்லைப் போன்றது. வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.
(15) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து "நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர். ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!" எனப் புறம்-56 இல் பாடியுள்ளார்.
(16) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம். அவ்வாறு போர்க் கலையை விளையாட்டாகப் பழகியவன்.
நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு
கருணை உள்ளம்
போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.
ஆட்சி
(1) உழவர்க்குக் ‘காவுதி’ என்னும் பட்டம் வழங்கியவன்
(2) சிறந்த போர் விரர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூ (இக்காலப் பத்மஸ்ரீ போன்றது) சூட்டிப் பாராட்டியவன்.
(3) பழிக்கு அஞ்சுபவன். ஈகையால் வரும் புகழை விரும்புபவன்.
(4) அறங்கூறு அவையம் நிறுவி நீதி வழங்கியவன்.
(5) ஆட்சிக்கு உதவியாக ‘நாற்பெருங்குழு’ வைத்திருந்தவன்.
(6) ஐம்பெருங்குழுவாக ஐந்து அரசர்களை வைத்துக்கொண்டு அரசாண்டவன்.
(7) கண்ணுள் வினைஞர் (ஓவியர்), கம்மியர் முதலான கலைஞர்களைப் போற்றியவன்.
(8) மதுரையில் ‘ஓண நன்னாள்’ (திருவோணத் திருநாள்) கொண்டாடியவன்.
இவனது நாட்டுப் பரப்பு
பண்டைய தமிழகம் முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
தந்தை மதுரையிலிருந்து ஆண்டபோது இவன் கொற்கையில் இளவரசனாக இருந்து தந்தைக்குப் பின் மதுரையில் முடிசூடிக்கொண்டான். இவனது நாட்டுப் பரப்பில் இருந்தன எனச் சில ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதுவெள்ளில், பெருங்குளம் ,நெல்லின் அள்ளூர்,சிறுமலை,பொதியில் முதலானவை.
(17) வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார். இவனைப் பற்றி வேறு எந்தத் தகவல்களும் இல்லை.
(18) நம்பி நெடுஞ்செழியன்
நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார். அதில் "செய்தக்க எல்லாம் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?' என இப்புலவர் வருந்திக் கூறிகிறார்.
இவனைப் பற்றிய குறிப்புகள்
தோளில் காப்பு அணிந்திருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான். பகைவரைப் பூண்டோடு அழித்தவன். நண்பர்களுக்கு உயர்வளித்தவன். வலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான். யாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான். தேரிலும், யானைமீதும் உலா வருவான். பாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான். ஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.
