இடைக்காலப் பாண்டியர்கள்
இதே போல சங்க காலத்திற்குப் பிறகு மதுரையை ஆண்டப் பாண்டியர்களை இடைக்காலப் பாண்டியர்கள் என்று அழைத்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பின் வருமாறு
1. கடுங்கோன் கி.பி. 575-600
2. அவனி சூளாமணி கி.பி. 600-625
3. செழியன் சேந்தன் கி.பி. 625-640
4. அரிகேசரி கி.பி. 640-670
5. ரணதீரன் கி.பி. 670-710
6. பராங்குசன் கி.பி. 710-765
7. பராந்தகன் கி.பி. 765-790
8. இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
9. வரகுணன் கி.பி. 792-835
10. சீவல்லபன் கி.பி. 835-862
11. வரகுண வர்மன் கி.பி. 862-880
12. பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
இவர்களைப் பற்றியும் காண்போம் வாருங்கள்
1. கடுங்கோன்
கடுங்கோன், களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான். இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது. இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.
2. அவனி சூளாமணி
அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான். தமிழகத்தின் வட பகுதியில் அப்போது பல்லவ மன்னனாகச் சிம்மவிஷ்ணு ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்.
பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. "குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை அழித்தவன், செங்கோல் ஓச்சியவன், உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன், மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன், ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன், வீரமும், ஈரமும் புகழும் உடையவன்". இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
3. செழியன் சேந்தன்
செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான். அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான். சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது. இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும். இவன் காலத்தில் சீனநாட்டு யாத்ரீகனான யுவான் சுவாங் தமிழகத்திற்கு வந்து காஞ்சி சென்று, பின் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தான்.
4. அரிகேசரி
அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றான். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான்.
அரிகேசரி ஆற்றிய போர்கள்:
அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும். சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான் அரிகேசரி. மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள். தன்னைத் தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கூறுவது குறிப்பிடத்தக்கது.
அரிகேசரியின் சமயப் பணிகள்:
அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவனாவான். இவன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் இவனது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர். இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர். அரிகேசரியும் சிவனின்றி கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும், புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி, மங்கையர்க்கரசி, குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ரணதீரன்
ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்த பின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான். ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான்.
ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும்:
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார் (இவர் 63 நாயன்மார்களில் ஒருவர்) :-
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திரு ஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.
6. பராங்குசன்
பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராச சிம்மன் எனவும் அழைக்கப்பட்டான். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் துணையாவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான்.
பராங்குசன் ஆற்றிய போர்கள்:
கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர், நெடுவயல், பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன். பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய இரண்டாம் நந்திவர்மனும் படையுடன் வந்தான். இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது. இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மாளவ நாட்டுப் போர்:
வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.
கொங்கு நாட்டுப் போர்:
கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் கங்க அரசனான சிறீபுருசனை வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் கப்பம் கட்டினார்கள் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இவன் ஆற்றிய சைவ சமயப் பணிகள்:
கொங்கு நாட்டிற்குப் படையெடுத்து போரில் வென்ற பராங்குசன் காவிரி ஆற்றில் அமைந்திருந்த கொடுமுடிக்கு வருகை புரிந்தான். சிவபெருமானை வணங்கி பொன்னும, பொருளும் காணிக்கையாக அளித்தான். இக்குறிப்பானது வேள்விக்குடிச் செப்பேட்டில் கொடுமுடி மகுடி ஈசனை வணங்கினான். சைவ சமயத்தைப் போற்றியவன் கோயில் பணிகள் செய்தான். கொடுமுடி ஈசனுக்குப் பொன்னும், பொருளும் ஈந்தான். மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான். கொடுமுடியும் இவனது ஆட்சியில் இருந்தது அதனால்தான் இத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி எனப்பெயர் பெற்றது என பராங்குசனின் சிவபக்தியினைப் பற்றி வேள்விக்குடி செப்பேட்டிலும், கொடுமுடிக் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பராங்குசன் தனது பாட்டனைப்போலவே இரணியகர்ப்பத தானங்களும், துலாபார தானங்களும் செய்தான். இறையனார் களவியல் மேற்கோள் பாடல்கள் இவனைப் புகழ்ந்து பாடின! வீரமும், பெருமையும், புகழும் உடையவனாகத் திகழ்ந்தான் பராங்குச பாண்டியன்.
7. பராந்தகன்
பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள். கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை, திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் ஆற்றிய போர்கள்:
கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் செய்து வெற்றி பெற்றுப் பின் பொதிகைமலைத் தலைவன் ஆய்வேளையும், தகடூர் அதிகமானையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும், காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி, பயிரூர், புகழியூர் போன்ற இடங்களில் அதியமான் மரபினன் அதியமானைப் போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும், அதியமானுக்கு உதவியாக சேர மன்னன் ஒருவனும், பல்லவ மன்னன் ஒருவன் வந்ததாகவும் இவர்களைத் துரத்திய பராந்தகன் கொங்கர் கோமானை வென்று புலவரைச் சிறையில் அடைத்து கொங்கு நாட்டு ஆட்சியைப் பெற்று விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்து அவன் நாட்டிலிருந்து யானைகள், குதிரைகள், மற்றும் செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து வந்து வெள்ளூரில் பகைவரை அடக்கி தென்னாடு முழுவதனையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான் எனவும் அச்செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் ஆற்றிய பாதுகாப்புகள்:
வெற்றி பெற்ற நாடுகளையெல்லாம் பாதுகாத்தும், குறுநில மன்னர்களைக் கண்காணித்தும் வந்திருந்தான் பராந்தகன். கரவபுரம் என்ற நகரில் அகழியும், மதிலும், கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்தான் பராந்தகன். மேலும் அப்பகுதி திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை என அழைக்கப்பெற்றது என களக்குடி நாட்டுக் கவந்தபுரம் என்ற கல்வெட்டுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பராந்தகன் ஆற்றிய சமயப் பணிகள்:
பாண்டிய மன்னர் பெரும்பாலானோரும் சைவர்களாக இருந்தாலும் பராந்தகன் திருமாலை வணங்கியவனாவான். "பரம வைஷ்ணவன்தானாகி நின்றியங்கு மணிநீள் முடிநில மன்னவன்" என பராந்தகன் வைணவ சமயத்தில் வைத்திருந்த பற்றினைப் பற்றி சீவரமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டி நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த பராந்தகன் அவரிடம் அடியவராகவிருந்தான். கொங்கு நாட்டு ஆட்சியில் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோயில் எடுத்தவன் பராந்தகனே. மேலும் இவனைப் பற்றிய செப்பேடுகள் பலவும் வைணவத் தர்ம சுலோகங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் பெற்ற பட்டங்களும் பெயர்களும்:
தென்னவானவன், சீவரன், சீபினோகரன், சினச்சோழன், புனப்பூழியன், வீதகன்மசன், விநயவிச்ருதன், விக்கிரம பாரகன், வீரபுரோகன், மருத்பலன், மானியசாசனன், மநூபன், மார்த்திதவீரன், கிரிஸ்தரன், கீதகின்னான், கிருபாலயன், கிருதாபதானன், கலிப்பகை, கண்டக நிசுடூரன், கார்யதட்ணன், கார்முகப்பார்த்தன், பண்டிதவச்சலன், பரிபூர்ணன்,பாபபீரு, குணக்ராகியன், கூடநிர்ணயன், ஜதிலா, பராந்தகன், வரகுண மகாராஜா, மாறன் சடையன், நெடுஞ்சடையன் போன்ற சிறப்புப் பெயர்களையும் பட்டங்களினையும் பெற்றிருந்த பராந்தகனே அதிக சிறப்புப் பெயர்களைப் பெற்ற அரசன் என வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றான். இவன் காலத்தில் வடமொழி ஆளுமையில் இருந்தது இதனாலேயே இவனது பெயர்கள் பல வடமொழிப் பெயர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
8. இரண்டாம் இராசசிம்மன்
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான். இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள், பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை.
9. வரகுணன்
வரகுணன் கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த முதலாம் வரகுண பாண்டியன். இரண்டாம் இராசசிம்மனின் மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன். மாறன் சடையன் என்னும் வேறு பெயரும் உண்டு. வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் போர் செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.
சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் ஆட்சி:
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன. இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு திருவியலூர், திருநெய்த்தானம் ஆகிய ஊர்களிலும். இவனின் ஆறாம் மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் ஆடுதுறை, கும்பகோணம், செந்தலை ஆகிய ஊர்களிலும். இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் திருச்சிராப்பள்ளி, திருக்கோடிகா ஆகிய ஊர்களிலும் மேலும் திருச்சோற்றுத்துறையில் சில கல்வெட்டுக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் சோழ நாடு முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது. மேலும் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை மண்டலத்தினையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.
வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள்:
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் வைத்து, 125 கழஞ்சு பொன் கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான். திருநெல்வேலி அம்பாசமுத்திரக் கோயிலுக்கு 240 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
வரகுணனின் இறுதிக் காலம்:
வரகுணனின் ஆட்சி பற்றி திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தளபதி சமுத்திரம், கழுகுமலை, ஏர்வாடி ஆகிய ஊர்களில் 39.41,42,43 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் காணக் கிடைத்த விவரத்தின் படி 43 ஆண்டுகள் ஆட்சி புரிந்த வரகுணன் கி.பி.835 ஆம் ஆண்டு இறந்தான்.
10. சீவல்லபன்
சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். வரகுண வர்மன், பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர். இவனது சிறப்புப் பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீவல்லபன் ஆற்றிய போர்கள்:
புதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன் - சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான். குடமூக்கில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மாசுதர் ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்:
ஈழ நாட்டில் முதல் சேனை அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான். புத்த விஹாரங்களில் இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன் மலேயாவுக்குப் போனான். இளவரசன் மகிந்தன் இறந்தான். காசபன் ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதல் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, பிற்காலத்தில் சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது.
பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்:
சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் முதலாம் தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், நிருபதுங்கவர்மனுடன் அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான். மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் தொண்டை நாட்டினை இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் குடமூக்குப் போரில் போரிட்டான். தஞ்சை கும்பகோணம் அன்று குடமூக்கு என்றிருந்தது. நந்திவர்மனுடன் வந்த கங்கர், சோழர், கலிங்கர் ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் தன் வாகூர்ச் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான்.
நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். லால்குடி, கண்டியூர், திருச்சின்னம் பூண்டி, திருக்கோடிகா போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும். கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.
11. வரகுண வர்மன்
வரகுண வர்மன் கி. பி. 862 முதல் 880 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் என்ற பெயரையும் பெற்றிருந்த இம்மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான். பாண்டியன் சீவல்லபனின் முதலாம் மகனான இவன் தனது தந்தை கி. பி. 862 ஆம் ஆண்டு இறந்த பின்னர் பட்டம் பெற்றான். சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு பாண்டியப் பேரரசை மாயப்பாண்டியனிடமிருந்து மீட்டுக் கொண்டான். பல்லவ மன்னனான நிருபதுங்கவர்ம பல்லவனுடனான நட்பின் காரணமாக பாண்டிய, பல்லவப் போர் இவன் காலத்தில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரகுண வர்மன் ஆற்றிய போர்கள்:
கி. பி. 880 ஆம் ஆண்டில் பெரும்படையுடன் வரகுணவர்மன் சோழநாட்டின் மீது படையெடுத்து அங்கு காவிரியின் வடக்கே உள்ள மண்ணி நாட்டில் இடவை என்ற நகரை வென்றான். ஆதித்த சோழனுடன் போர் புரிந்து அவனை வெற்றி கொண்டான். இடவை நகரில் தன் பாட்டன் கட்டிய அரண்மனையினைக் கைப்பற்றினான். அபராசித வர்ம பல்லவன் வரகுண வர்மனை வெல்ல நினைத்து ஆதித்த சோழனுடனும், கங்க நாடன் பிருதிவிபதியுடனும் வந்தான். திருப்புறம்பியம் போரில் கங்கன் இறந்து சோழ, பல்லவ மன்னர்கள் வெற்றி பெற்றனர். பாண்டியன் தோல்வியுற்றான். கங்க மன்னனுக்கும். பல்லவ மன்னன் ஒருவனுக்கும் உதிரப்பட்டியிலும், கச்சியாண்டவர் கோயிலிலும் நடுகற்கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரகுண வர்மன் பற்றிக் கல்வெட்டுகளில் இருந்து காணக் கிடைக்கும் செய்திகள்:
சின்னமனூர்ச் செப்பேடு; குரைகழற்கால் அரை சிறைஞ்சக்குவலயதலந்த் தனதாக்கினவரை புரையும் மணி நெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன் எனச் சிறப்பித்துக் கூறுகின்றது.
தென்னார்க்காடு திருவதிகை வீரட்டானத்தில் உள்ள கல்வெட்டு பல்லவனும், பாண்டியனும் நண்பர்கள் எனக் கூறுகின்றது. திண்டுக்கல்லுக்கு அருகில் இராமநாதபுரத்துக் கல்வெட்டு ஆதித்த சோழனை வென்ற பாண்டியன் இடவை நகரும் அதன் சுற்று வட்டமும் ஆட்சி புரிந்தான் என்கின்றது.
வரகுணன் 13 ஆம் ஆட்சி ஆண்டில் திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்வழிபாட்டிற்கு நெல்லும், பணமும் (1400 பொற்காசுகளை) கொடுத்தான் என அக்கோயில் பாறை கல்வெட்டு கூறும்.
12. பராந்தகப் பாண்டியன்
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.
பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்:
கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். சமீபத்தில், நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இம்மன்னன், கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது.
