கோலங் காண் படலம் - 1242

bookmark

திருமணம் நாளை எனல்

1242.    

‘வாளை உகள. கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ. மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை’ என. ‘உற்ற பகல்’ நல் தவன் உரைத்தான்.
 
வாளை உகள வாளை மீன்கள்துள்ளிக் குதிக்க; கயல்கள் வாவிபடி
மேதி மூளைமுதுகைக் கதுவ - (அஞ்சிய) கயல் மீன்கள்.  நீர்நிலையில்
கிடந்த  எருமைகளின்  தலையையும். முதுகையும் கவ்வ; மூரிய  வரால்
மீன் -  வலிமை வாய்ந்த வரால் மீன்கள்; பாளை விரியக் குதிகொள்
பண்ணை வளநாட் - பாளைகள்  விரியும்படி (கமுக  மரத்தில் தாவிக்)
குதிக்கின்ற  வயல்  வளமுடைய கோசல நாட்டு  மன்னனே!; உற்றபகல்
நாளை என நல் தவன் உரைத்தான் -திருமணத்திற்குப்  பொருந்திய
நாள்  நாளையாகும் என்று  நல்லதவம் மிகுந்த விசுவாமித்திர முனிவன்
உரைத்தான்.                                               41