கோலங் காண் படலம் - 1243
தயரதன் தன் மாளிகையை அடைதல்
தரசதன் முதலியோர் இருப்பிடம் செல்லலும்
கதிரவன் மறைதலும்
1243.
சொற்ற பொழுதத்து. அரசர்
கைதொழுது எழ. தன்
ஒற்றை வயிரச் சுரி கொள்
சங்கின் ஒலி பொங்க.
பொன்-தடமுடிப் புது
வெயில் பொழிதர. போய்.
நல் தவர் அனுச்சை கொடு.
நல் மனை புகுந்தான்.
சொற்ற பொழுதந்து- (இங்ஙனம் கோசிக முனிவன்) கூறிய
பொழுதில்; அரசர் கைதொழுது எழ - (தசரதன்) மற்றையரசர்
எல்லோரும் தன்னைக் கைகூப்பி அஞ்சலி செய்து எழவும்; தன்
ஒற்றை வயிரச் சுரிகொள் சங்கின் ஒலிபொங்க - தனக்கு உரிய
ஒப்பற்ற வயிரப் பூண் அணிந்த. உள்சுழிகின்ற (வெற்றிச்) சங்கின் ஒலி
பொங்கியெழவும்; பொற்றடமுடிப் புது வெயில் பொழிதரப் போய் -
பொன்னாலான (தன்) அகன்ற மணிமகுடம் இளவெயில் வீசச்சென்று;
நல்தவர் அனுச்சைகொடு நல்மனை புகுந்தான் -சிறந்த முனிவர்களின்
இசைவைப் பெற்றுக்கொண்டு (தனக்குரிய) சிறந்த மாளிகைக்குச்
சென்றடைந்தான்.
நில அரசர்கள் எழுந்து நின்று விடைதர. தவஅரசர்களைப் பணிந்து
நின்று அனுமதி வேண்டி விடைபெற்றான் எனக் கூறி. தசரதனின்
வீரமும் அருளின் ஈரமும் தோற்றுவித்த திறம் உணர்க. அனுச்சை -
அநுமதி. இசைவு. 42
