கோலங் காண் படலம் - 1215

bookmark

சிலம்பு அணிதல்

1215.    

ஐய ஆம் அனிச்சப் போதின்
   அதிகமும் நொய்ய. ஆடல்
பை அரவு அல்குலாள்தன்
   பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச்
   சேர்த்திய சிலம்பு. ‘சால
நொய்யவே; நொய்ய’ என்றோ.
   பலபட நுவல்வது? அம்மா!
 
பை  அரவு  அல்குலாள்  தன்  பஞ்சின்றிப் பழுத்த பாதம் -
பாம்பின் படம்  அனைய  அல்குலையுடைய  சீதையினது.  செம்பஞ்சுக்
குழம்பு ஊட்டப்படாமலேயே (சிவப்பு) முற்றிய திருவடிகள்;  ஐய  ஆம்
அனிச்சப் போதின்  அதிகமும்  நொய்ய -  (மலர்களிலேயே  மிக)
மென்மையதாகிய  அனிச்சமலரினும்  மிகவும்   மென்மையான;  செய்ய
பூங்  கமலம்  மன்னச்  சேர்த்திய  சிலம்பு  பலபட நுவல்வது  -
செந்தாமரை   மலர்    போன்றுள்ள   அந்த  மெல்லிய   பாதங்களில்
நிலைத்திருக்கத்  (தோழியர்)  சேர்த்திய அச்சிலம்பென்னும்  காலணிகள்.
பலுமுறை  (இடைவிடாது)   ஒலிப்பது;   சால  நொய்யவே  நொய்ய
என்றோ? - (பிராட்டியின்  திருவடிகள்) மிகவும் மெல்லியன! ஓ மிகவும்
மெல்லியன (அறிந்து செயல்படுங்கள்) என்று அறிவிப்பது தானோ?   

அம்ம     -  வியப்பிடைச்சொல்.  தற்குறிப்பேற்றவணி.  சிலம்பின்
ஒலிக்குப்  புதுப்பொருள்  கற்பித்தவாறு.  மெல்லிய அனிச்ச  மலரினும்
மெல்லியன  மகளிர்  பாதம்  என்பதனை. “அனிச்சமும்  அன்னத்தின்
தூவியும்  மாதர்  அடிக்கு  நெருஞ்சிப்  பழம்”  (திருக்.  1120)  எனும்
திருக்குறளும்  கூறும்.  பொருளின்  மென்மை     புரியாமல்.   அன்பு
காரணமாகப் பெருஞ்சுமை யேற்றித் துன்பம்   விளைத்து   விடாதீர்கள்
என்று    கூறுவதாகச்   சிலம்புகள்  ஒலித்தமைக்கு  அழகிய  காரணம்
கற்பித்தார்.     “மோப்பக்    குழையும்    அனிச்சம்”    (திருக்.  90)
எனுமிடத்தே.   அனிச்சத்தின்   மென்மை குறித்திருப்பதையுணர்க.  14