கோலங் காண் படலம் - 1216

bookmark

விழிகட்கு மையிடுதல்

1216.    

நஞ்சினோடு அமுதம் கூட்டி
   நயனங்கள் ஆன என்ன.
செஞ்செவே நீண்டு. மீண்டு.
   சேயரி சிதறி. தீய
வஞ்சமும் களவும் இன்றி.
   மழை என மதர்த்த கண்கள்.
அஞ்சன நிறமோ? அண்ணல்
   வண்ணமோ? அறிதல் தேற்றாம்.
 
நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள் ஆன என்ன - நஞ்சை
இடையே   வைத்துச்   சுற்றிலும்   அமுதினை   வைத்து   ஆனவை
போன்றவை   (பிராட்டியின்)    கண்கள்  என்று  கூறுமாறு   இருந்து;
செஞ்செவே நீண்டு  மீண்டு சேயரி சிதறி -கோணல் எதுவும் இன்றி.
நேராகச்  சென்று.  திரும்பி.  சிவந்த இரேகைகள் சிந்தப் பெற்று; தீய
வஞ்சமும் களவும்  இன்றி மழை  என  மதர்த்த  கண்கள் - தீய
வஞ்சனையும்  கள்ளத்தனமும்  இல்லாமல்.  மழை  போலக்  குளிர்ந்த
சீதையின்  கண்களில்; அஞ்சனநிறமோ?  அண்ணல்  வண்ணமோ?
அறிதல்தேற்றாம்  -   (அப்பொழுது)  தோழியர்  இட்டது  அஞ்சன
வண்ணத்தையா?  அல்லது இராமபிரானின் மேனி நிறத்தையா?  எனத்
தெளிவாக எம்மால் அறியக் கூடவில்லை.  

உகந்தார்க்கு அமுதாகவும். உகவாதார்க்கு நஞ்சாகவும் அமைந்தன
தேவியின்  விழிகள்.  இராமனுக்கு  அமுதாக  இருந்த  அவ்விழிகள்.
இராவணணுக்குத்   “திட்டியின்   விடம்   (கம்ப.   7351)  ஆவதை
உரைப்பதே  இக்காவியம்  ஆவது  உணர்க.  மேல் கன்னிமாடத்தில்.
அண்ணலும்  நோக்கி.  அவளும் நோக்கியபோது (கம்ப. 514). அவள்
விழிகளில்  அவன்  கருமை  நிறம்  நிறைந்தது என நினைவூட்டுவார்
போல.  ‘அண்ணல் வண்ணமோ?’ எனக் கூறினார் எனலுமாம். மகளிர்
விழிகளில்   நஞ்சும்   அமுதும்  கலந்துள்ளன  என்பதை.  “நஞ்சும்
அமிர்தமும் போல் குணத்த” (சீவக. 167) எனவும். “நஞ்சினும் கொடிய
நாட்டம்  அமிர்தினும்  நயந்து நோக்கி” (கம்ப. 896) எனவும் வருவன
காண்க.   பிராட்டியின்   கண்களின்   அக  அழகும்  புற  அழகும்
இப்பாடலில்  வருணிக்கப்பட்டுள்ள  திறம்  காண்க.  இராமபிரானைத்
தவிரப்  பிறரிடத்தில் பொது நோக்கமே கொண்டு. சிறப்பு நோக்காகிய
காதல்   நோக்கு   இல்லாமையை.   “வஞ்சமும்   களவும்   இன்றி”
என்பதனால்    சுட்டினார்.    இராம   பிரானைக்   கன்னிமாடத்திற்
கண்டபோதிருந்து.  அவன் வடிவமும் வண்ணமுமே அவள் விழிகளில்
நிறைந்து  வழிந்தமையால்  அவ்விழிகள் அவன் நிறம் பெற்றனவோ?
என  வியந்தார்.  “அவர்தம்  நீல  நிறத்தை  எல்லோரும்  நினைக்க.
அதுவாய் நிரம்   பியதோ?”   (கம்ப. 546)    என்பார்    முன்னும்.  
செஞ்செவே   நீண்டு  -  கோணுதலின்றி   நீண்டு.    “செஞ்செவே 
கமலக்கையால்   தீண்டலும்” (கம்ப. 896) என்பார் முன்பும்.       15