கோலங் காண் படலம் - 1207

bookmark

குழை அணிதல்

1207.

‘வெள்ளத்தின் சடிலத்தான்தன்
   வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர.
   தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
   அல்லன்கொல்? ஆம்கொல்? என்பாள்’
உள்ளத்தின் ஊசலாடும்
   குழை நிழல் உமிழ இட்டார்.
 

வெள்ளத்தின்  சடிலத்தான்தன்  வெஞ்சிலை இறுத்த  வீரன் -
கங்கை நீர் வெள்ளத்தைத் தன் சடையிலே தரித்துள்ள  சிவபெருமானது
வலியவில்லை ஒடித்த வீரன்; தன் ஆவி சோரத்தள்ள தனிப் பெரும்
பெண்மைதன்னை -  தனது  உயிர்  சோருமாறும்  (உடல்)  தளர்ந்து
போகுமாறும்  ஒப்பற்ற  தன்  பெண்தன்மையை;  அள்ளிக் கொண்டு
அகன்ற காளை அல்லன் கொல்  ஆம்கொல் என்பாள் - கவர்ந்து
கொண்டு  அகன்ற  (கன்னிமாடத்திலிருந்து நான் பார்த்த)   இளைஞன்
அல்லனோ?     அவ்விளைஞனே    தானோ?    என்று     ஐயுறும்
சீதையினுடைய; உள்ளத்தின்  ஊசல்  ஆடும் குழை நிழல்   உமிழ
விட்டார்  -  மனம்  (அலைந்து தவிப்பது) போல.  அசைகின்ற குழை
என்னும்    காதணிகளை   ஒளியுமிழுமாறு    சீதையின்    காதுகளில்
(தோழியர்) பூட்டினர்.   

வில்     ஒடித்த வீரன். கன்னி மாடத்தில் தன் கண்வழி  நுழைந்து
இதயத்தில்    நிறைந்துள்ள    அவனே   என்பதனைத்   தெளிவாக
அறியாமையால்.  சீதை தவித்த தவிப்பினை உணர்த்துவதற்கு.  கவிஞர்
பிரானுக்கு.  காதணியின்  அசைவு  போதுமானதாயிற்று.  இந்த  ஐயம்
விடற்காக “கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்வதாக” (கம். 1153)
மேலே  கூறுவார்.  “தள்ளத்தன் ஆவிசோர” என்பதனை. “தன் ஆவி
சோரத்   தள்ள”   எனக்கூட்டுக.  இராமன்.  சீதை   பெண்மையினை
அள்ளிக்கொண்டு  போனதை.  “சிந்தையும்  நிறையும்   மெய்ந்நலனும்
பின்செல.  மைந்தனும் முனியொடு மறையப் போயினான்.”  (கம்ப. 518)
என முன்பு கூறினார். சடிலம் - சடை.                          6