கோலங் காண் படலம் - 1208

bookmark

கழுத்தணி அணிதல்

1208.

கோன் அணி சங்கம் வந்து
   குடியிருந்தனைய கண்டத்து.
ஈனம் இல் கலங்கள் தம்மின்
   இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார்தம்
   மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது.
   தனக்கு அணி யாது மாதோ?
 
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து -
தலைவனான  திருமால்  தாங்கும்  சங்கு (இங்கு) வந்து  குடியிருந்தாற்
போன்ற   (சீதையின்)   கழுத்தில்; ஈனம்  இல்  கலங்கள்  தம்மில்
இயைவன  அணிதல்  செய்தார்  -   குற்றமற்ற    ஆபரணங்களில்
பொருந்துவனவற்றைப்  பூட்டினார்கள்; மான் அணி நோக்கினார் தம்
மங்கலக் கழுத்துக்கு எல்லாம் - மானின் விழிகளையுடைய (உலகத்து)
மங்கையர் மாங்கலிய நாணோடு கூடிய கழுத்துகளுக்கு எல்லாம்;  நான்
அணி   ஆனபோது    -    (திரு   என்னும்    அடையோடுகூடித்
திருமாங்கல்யம்        என்று)          தானே         ஓர்ஒப்பற்ற
அலங்காரமாயிருக்கும்போது;  தனக்கு  அணியாது  - தன் கழுத்துக்கு
ஏற்ற அணியாவது எது? (ஒன்றும் இல்லை.)

சீதையின்   கழுத்துக்கு  அழகுதரும்  சிறப்புடைய அணிகள் உலகில்
எதுவும்    இல்லையாயினும்.     தோழியர்    உலக     ழக்குக்கேற்ப
இருப்பனவற்றில்  சிறப்புளவற்றைப்   பூட்டினர்  என்க.    பிராட்டியின்
அவதாரம்   இலக்குமியாகிய  திருவின்   அவதாரமாதலின்.   உலகத்து
மகளிர்  கழுத்தில் அணியும் “திரு”மாங்கலியம். ஆக   இருக்கும் இவள்
கழுத்திற்கு யாரால் தகுந்த அணி அணிய இயலும் என்று   வியந்தவாறு
ஒரு    பெண்.    மணங்கொள்ளுங்     காலை.   அவள்  பொன்னும்
பொருளும்    வாழ்க்கையின்   புனிதத்  தன்மையும்  அப்பொழுதுதான்
அவள்  அடைகின்றாள்  ஆதலின்.   திருமகள்  அவளை அப்பொழுது
தான் வந்து அடைகிறாள் எனக்கருதி. மணத்திற்குத்  திருமணம்   எனப்
பெயரிட்டனர்   முன்னோர்.   அவளுக்கு   அவன்   அடையாளமாகப்
பூட்டும் மங்கல நாணிற்கு. “திரு” என்று  பெயர்  இட்டனர். மாங்கல்யம்
சூட்டுதலை.     “திருப்பூட்டு”     என்று     இன்றும்    வழங்குவர்.
இவற்றையெல்லாம் கருத்துட்  கொண்டு. “மான் அணி நோக்கினார் தம்
மங்கலக்  கழுத்துக்கெல்லாம்   தான்  அணி ஆனது” என்றார். இவளே
எல்லாப்  பெண்கள் கழுத்துக்குள்   “திருமங்கலம்” ஆம் போது. இவள்
கழுத்திற்கு   எதைப்  பூட்டுவது   என  வியந்தார்.  சீதை   திருமணச்
சடங்கில்   மாங்கலியம்   தரித்தது    கூறப்பட    வில்லையே  எனும்
வினாவிற்கு  விடைதருவார்  போல. மகளிர்  கழுத்துக்கெல்லாம். “தான்
அணி ஆனபோது. தனக்கு அணியாது?” என்று வியந்தார். 

“ஈகையரிய     இழையணிமகளிர் (புறம். 127)  எனும்  புறப்பாட்டின்
தொடருக்கு.  “பிறிதோர் அணிகலமுமின்றிக்  கொடுத்தற்கரிய  மங்கலிய
சூத்திரத்தை  யணிந்த  மகளிர்”  என  அதன்   உரையாளர்  வரைந்த
உரையும்.  “மங்கல  அணியிற் பிறிதணி மகிழாள்”  (சிலப்.  அந்தி: 50)
எனும் சிலம்பின் தொடரும் இங்கு நினைவு கூரத்தக்கன.           7