கையடைப் படலம் - 335
இராமலக்குவருடன் விசுவாமித்திர முனிவன்
புறப்படுதல்
335.
கொடுத்த மைந்தரைக் கொண்டு. சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு. இனிது வாழ்த்தி. ‘மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்’ எனா.
நடத்தல் மேயினான். நவைக்கண் நீங்கினான்.
கொடுத்த மைந்தரைக் கொண்டு - தயரதன் கொடுத்த பிள்ளைகள்
இருவரையும் ஏற்றுக் கொண்டு; முந்து சிந்தை எடுத்த சீற்றம் விட்டு
- முன்னர் மனத்தில் ஏறிய கோபத்தை விட்டு: இனிது வாழ்த்தி -
மன்னனை இனிதே வாழ்த்தி: மேல் அடுத்து வேள்வி போய்
முடித்தும் நாம் என - இனிமேல் சென்று. தொடங்கிய வேள்வியை
நாம் முடிப்போம் என்று.; நவைக்கண் நீங்கினான் நடத்தல்
மேயினான் - குற்றம் நீங்கிய முனிவனாகிய விசுவாமித்திரன்
புறப்படலானான்.
கொடுத்த: அடைக்கலமாகக் கொடுத்த. கொண்டு பெற்றுக்கொண்டு
முந்து: முன் என்பதன் மரூஉ. எடுத்த: மேலெழுந்த. சீற்றம்: சினம்.
அடுத்தல். தொடங்குதல். முடித்தும். தன்மைப் பன்மை வினைமுற்று.
நடத்தல்மேயினான். நடக்கத் தொடங்கினான். நவை: குற்றம். 19
