கையடைப் படலம் - 336
இராமன் படைக்கலம் தாங்குதல்
336.
வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்
உலகம் தாங்கினான் - காக்கும் கடவுளின் அம்சமான ராமன்;
வென்றி வாள் புடை விசித்து - வெற்றியை உடைய வாளை
இடையிலே கட்டிக் கொண்டு; மெய்ம்மை போல் - என்றும் அழியாத
உண்மை போன்ற; என்றும் தேய்வு உறா தூணி யாத்து - அம்புகள்
என்றும் தேயாத அம்பறாத்தூணியைத் தோளில் கட்டி; குன்றம்
போன்று உயர் தோளில் -இரண்டு மலைகளைப் போன்று உயர்ந்த
(மற்றொரு) தோளில்; கொற்றவில் ஒன்று தாங்கினான் - வெற்றி
மிகுந்த வில் ஒன்றினையும் சுமந்தான்.
வென்றி: வெற்றி. வெல்: பகுதி. விசித்தல்: கட்டல். சிசி: பகுதி.
புடை: பக்கம். தூணியில் அம்புகள் என்றும்
அறாத்தன்மையுடைமையால் ‘’மெய்ம்மை போல் என்றும் தேய்வுறாத்
தூணி’’ என்றார். இரு குன்றம்: பெரிய மலை எனலுமாம். உலகம்
தாங்கும் உறுதி தோள்களுக்கு உண்மை பற்றி உலகம் தாங்கினான்
என்றார். உலகம் தாங்கினான் - விசித்து - யாத்து - வில் தாங்கினான்
என்க. 20
