கையடைப் படலம் - 318

bookmark

தசரதன் அரசவை யடைதல்

318.

நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது. விசும்பின் நீண்டது. ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான்.
 
நனைவரு  கற்பக நாட்டு நன்னகர்  -   அரும்புகள்  விரிகின்ற
கற்பக மரத்தை  உடைய அமரர்கள் நாட்டு நல்ல  நகரான  அமராவதி
நகரை; வனைதொழில்   மதிமிகும்  மயற்கும் - படைத்த  தொழில்
திறமும். அறிவும்   மிகுந்த  மயனுக்கும்;  சிந்தையால்   நினையவும்
அரியது -  மனத்தால்  எண்ணிப்  பார்க்கவும் இயலாததும்; விசும்பின்
நீண்டது ஓர் - வான மளவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு;  புனைமணி
மண்டபம் - மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மண்டபம்:  பொலிய
எய்தினான் - விளக்கமுறும்படி சேர்ந்தான்.

முந்திய  பாடலில்  குறிப்பிட்ட  ‘அரசர்தம்  பெருமகன்’ என்பதே
இங்குக்  கூறப்பட்ட  ‘எய்தினான்’  என்பதற்கு  எழுவாயாகும். நனை:
அரும்பு.  நல்+நகர்:  நன்னகர்  இங்கு  நன்மை  என்பது  புண்ணியம்
எனும்  பொருளின் வழங்குகிறது. மண்டபம்: அரசிருக்கை.  பொலிதல்:
சிறத்தல். மயன்: தெய்வத்தச்சன்.

அமரர்கள்   நாடான  விண்ணுலகுக்குத்   தலைநகர்  அமராவதி.
அதனைப்   படைத்த   மயனுக்கும்    நினைத்துப்   பார்க்கமுடியாத
சிறப்புடைய   மண்டபம்  என்பது   கருத்து.  ‘மயன்  வனைதொழில்’
மதிமிகும்  மயன்  என்று சிறப்பிக்கப்படுகிறான்.  மண்டபம் மன்னனது
வருகையால்   பொலிந்தது   என்பது   கருத்து.   வனை   தொழில்:
வினைத்தொகை இப்பாட்டு உயர்வு நவிற்சியணியாகும்.            2