கையடைப் படலம் - 319

bookmark

தசரதன் அரியணையில் அமர்ந்த தோற்றம்

319.

தூய மெல் அரியணைப் பொலிந்து
   தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத்
   திரியும் சாரணர்.
‘நாயகன் இவன்கொல்?’ என்று
   அயிர்த்து. நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று
   ஐயம் நீங்கினார்.
 
சேய்இரு விசும்பிடை - உயர்ந்த பெரிய வானத்திடத்தே; திரியும்
சாரணர்  -  (நிகழ்ச்சிகளை  ஆராய்ந்தறியத்  திரியும் தேவதூதர்கள்;
நாயகன்  இவன்கொல்  என்று  அயிர்த்து  -  நமது தலைவனான
இந்திரன்    இவந்தானோ  என்று  தயரதனைக்  கண்டு  சந்தேகித்து;
நாட்டம்  ஓர் ஆயிரம்  இல்லை  என்று  -  கண்கள்  ஓராயிரம்.
காணப்படவில்லை  என்றெண்ணி;  ஐயம்  நீங்கினார்  -  அவர்கள்
கொண்ட   சந்தேகம்   நீங்கினாராக;  தூயமெல்  அரி  அணை -
தூய்மையும்  மென்மையும்   உடைய  சிங்காதனத்திலே;  பொலிந்து
தோன்றினான்  - பொலிவுற்று விளங்கினான்.

அரியணை:   சிங்காதனம்.  சேய்+இரு  சேயிரு:  உயர்ந்த  பெரிய
என்பது  பொருள்.  சாரணர்:  தூதுவர்.  நாயகன்:  தலைவன்.  கொல்:
ஐயத்தை   உணர்த்தும்.   நாட்டம்:   கண்கள்.   இந்திரன்  கௌதம
முனிவனது  சாபத்தால் ஆயிரம் கண் பெற்றவன் என்பது  அகலிகைப்
படலத்துச்  செய்தி.  இரண்டு  பாடல்களாலும்  தயரதன்  இந்திரனுக்கு
ஒப்பானவான்  எனக்  கூறப்பட்டது.  இந்திரனுக்கு  ஆயிரம்  கண்கள்
தயரதனுக்கு  இரண்டே  என்பதைத்  தவிர  பிற செல்வம்  அதிகாரம்.
அழகு.   வலிமை  இவற்றால்  இந்திரனுக்கு  ஒப்பானவன்    தயரதன்
என்பதை விளக்கி உரைத்தார் என்க.                          3