கைகேயி சூழ்வினைப் படலம் - 1644
சூரியன் தோன்றுதல்
1644.
தூபம் முற்றிய கார் இருட் பகை
துள்ளி ஒடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்றென
சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத்
திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன், குண குன்றிலே.
தூபம் முற்றிய - புகைபோல எங்கும் சூழ்ந்த; கார் இருள் பகை
துள்ளி ஓடிட-கரிய இருளாகிய பகை குதித்து ஓடிப்போகவும்; உள் எழும்
தீபம் முற்றவும்- வீடுகளின்உள்ளே எரிகின்ற விளக்குகள் எல்லாம்; நீத்து
அகன்றென - ஒளியைத் துறந்து மழுங்கியபோல; சேயது ஆர் உயிர்
தேய - தன் குலத்தில் பிறந்த தயரதனது அரிய உயிர் மெலியும்படி; வெம்
பாபம் முற்றிய பேதை செய்த - தீவினை முதிர்ந்த கைகேயி புரிந்த;
பகைத் திறத்தினில்- பகைச் செயலால்; வெய்யவன் - சூரியன்; குண
குன்றின் - கிழக்கு மலையில்; கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன் - சினம் முதிர்ந்து மிகவும் செந்நிறம்கொண்டவன் போலக்
காணப்பட்டான்.
சூரியன் கிழக்கு மலையில் சிவந்து தோன்றியதனைத் தன் குலத்தில்
பிறந்த தயரதனது உயிர்ஒடுங்குமாறு கேடு சூழ்ந்த கைகேயியின்மீது கோபம்
கொண்டவன் போலத் தோன்றினான் என்றது ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.
குண குன்று - கதிரவன் எழும் கிழக்கு மலை. குணக்கு - கிழக்கு 65
