சிந்துபாத்தின் முதல் கப்பல் பயணம்

சிந்துபாத்தின் முதல் கப்பல் பயணம்

bookmark

சிந்துபாத் தனக்குத் தெரிந்த சில நல்ல வர்த்தகர்களின் உதவியுடன் தான் வியாபாரத்திற்கு வாங்கிய வணிகப் பொருள்களையும் ஏற்றிக் கொண்டு தனது முதல் கப்பல் பயணத்தை தொடங்கினான்.

சில் என்று தென்றல் தழுவ பாய்மரத்தின் உதவியுடன் கப்பல் கடலின் அலைகளில் மெல்ல நகரத் தொடங்கியது. வெற்றி அடைந்த அரசனை அரண்மனைக்குள் வரவேற்கும் பணிப் பெண்களைப் போல, கடலில் மிதந்த கப்பலை வரவேற்றது நிலவின் ஒளி. அதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் வானில் தோரணமாய் காட்சி அளித்தது விண்மீன்களின் கூட்டம். இந்நிலையில் கப்பலில் ஆடல், பாடல்களுடன் இனிய கானம் ஒலிக்க. அதற்கு நடனம் ஆடுவது போல துள்ளி எழுந்தன கடல் வாழ் உயிரினங்கள் சில. இக்காட்சிகள் அனைத்தும் சிந்துபாத்தின் மனதைக் கவர்ந்தது. அதில் அவன் மனம் நெகிழ்ந்தது. அதனால் அவன் நா கவிதை பாடியது. இப்படியாக ஆடல், பாடல் என்ற விதத்தில் அந்த இரவு அற்புதமாகக் கழிந்தது.

அடுத்த நாள் காலையும் மெல்ல விடியத் துவங்கியது. சூரியனின் கதிர்கள் வானத்தில் வர்ண ஜாலத்தை நிகழ்த்திய தருணம் சிந்துபாத் கண் விழித்தான். அந்த அற்புதமான காட்சியை கண்டு ரசித்தான். அன்றும் கப்பலில் அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று தான் இருந்தனர். இப்படியே மூன்று நாட்கள் கடந்தது. இறுதியில் கப்பல் ஒரு குட்டித் தீவை அடைந்து நின்றது. அவ்விடத்தில் கப்பலின் நங்கூரம் பாய்ச்சப்பட்டது. கப்பலில் இருந்து தீவுக்கு இறங்கி வர வேண்டுமே, அதற்காக சில பலகைகளை கப்பல் தலைவன் பரப்ப, அதன் மீது பத்திரமாக இறங்கி தீவுக்குள் நடந்தனர் வர்த்தகர்கள். அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான் சிந்துபாத். சிந்துபாத்தைப் பொறுத்தவரையில் இவை அனைத்துமே அவனுக்குப் புதிய அனுபவம் தான்.

அந்தக் குறிப்பிட்ட குட்டித் தீவில் இறங்கியதும் அவரவர், அவரவர் பணியை பார்க்கத் தொடங்கினார்கள். சிலர் குமுட்டி அடுப்புகளைப் பற்ற வைத்து தீ மூட்டினார்கள்; சிலர் துணிமணிகளை துவைக்க ஆரம்பித்தார்கள். மறுபுறம் கப்பல் பணியாளர்களோ எந்த விதமான கவலையும் இன்றி உண்பதிலும், உல்லாசமாகக் குடித்து ஆடிப் பாடி மகிழ்வதிலும் நேரத்தை செலவு செய்தார்கள்.

இவ்விதமாக அனைவரும் அவரவர் பணிகளை ஆள் நடமாட்டம் இல்லாத அந்தக் குட்டித் தீவில் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் அவர்களுக்குள் ஒருவன் மூச்சிரைக்க திடீரென்று பயந்து அலறி இப்படியாகக் குரல் கொடுக்கத் தொடங்கினான். "உடனே அனைவரும் கப்பலுக்கு சென்று விடுங்கள்; உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் நாம் அனைவரும் அழிந்து விடுவோம். காரணம் இந்தத் தீவின் பெயர் "மரணத் தீவு". இப்போது தான் இந்தத் தீவைப் பற்றிய செய்தியை அங்கு இருக்கும் ஒரு கல் வெட்டில் படித்தேன். உண்மையில் இது "இவான்" என்ற பூதத்திற்கு சொந்தமான தீவு. அவனுக்கு உணவே இந்தத் தீவில் தஞ்சம் அடையும் நம்மைப் போன்ற அப்பாவி மனிதர்கள் தான். அவன் இந்நேரம் மனித நடமாட்டத்தையும், மனித வாடையையும் உணர்ந்து இருப்பான். அந்த "இவான்" எழுந்து நம்மை எல்லாம் உண்பதற்குள் நாம் இங்கு இருந்து ஓடி விட வேண்டும்" என்று கதறியபடி கூறிக் கொண்டு இருந்தான்.

அதைக் கேட்டு அங்கு கூடி இருந்த வணிகர்கள் அனைவரும் முதலில் பரிகாசம் செய்தனர். அவர்கள் யாருமே அந்தச் செய்தியை உண்மை என்று நம்பவில்லை. அந்த நேரத்தில் திடீர் என்று அந்தத் தீவு நில நடுக்கம் வந்தது போலக் குலுங்கத் தொடங்கியது. வணிகர்கள் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது எங்கிருந்தோ ஒரு சிரிப்பு ஒலி பயங்கரமாகக் கேட்டது. ஒரு பெரிய உருவம் கொண்ட பூதம் அவ்விடத்தில் வந்தது. அதன் உயரம் ஆகாயத்தை தொடும் அளவுக்கு இருந்தது. அந்த பூதத்தைக் கண்ட வணிகர்கள் அனைவரும் வேகமாக கப்பலை நோக்கி ஒடத் தொடங்கினார்கள். எல்லோரும் கப்பலை நோக்கி ஒரே நேரத்தில் ஓடியதால் கூட்ட நெரிசலில் கீழே பலர் விழுந்தனர். அவர்களை அந்தப் பூதம் பிடித்து நற நறவென்று கடித்துக் குதறி சதை வேறு எலும்பு வேறு ரத்தம் வேறாக பிரித்து எறிந்தது. அதைக் கண்ட வணிகர்கள் மேலும் அலறியபடி கப்பலில் ஏறத் தொடங்கினார்கள். சிலரோ கப்பலில் ஏறும் சமயத்தில் கீழ் இருந்த பலகைகள்  கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்படிக் கடலில் தவறி விழுந்தவர்களுள் சிந்துபாத்தும் ஒருவன். ஆனால் அந்தக் கப்பல் தலைவனோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் எஞ்சிய வணிகர்கள் மட்டும் கப்பலில் ஏற அதி விரைவாக அந்தக் கப்பலை கடலில் செலுத்தத் தொடங்கினான். மறுபுறம் அந்தப் பூதத்திற்கு போதும், போதும் என்ற அளவுக்கு நர மாமிசம் கிடைத்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அது கப்பலை தொடருவதை நிறுத்திக் கொண்டது. சந்தோஷமாக உண்டு கழித்த பூதம் மீண்டும் அந்தத் தீவில் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பியது. உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? இதில் பூதம் மட்டும் விதி விலக்கா என்ன? உண்ட களைப்பில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தது பூதம். பூதத்தின் நிலை இப்படி இருக்க சிந்துபாத்தின் நிலையையும் அவனுடன் சேர்ந்து கடலில் விழுந்த மற்ற வணிகர்களின் நிலையையும் பற்றி விரிவாகப் பார்போம் வாருங்கள்.

கடலில் விழுந்த பெரும்பாலான வணிகர்கள் வயோதிகர்கள் என்பதால் அவர்கள் கடலில் விழுந்த மாத்திரத்தில் குளிர் தாங்க முடியாமல் செயலற்று இறந்தார்கள். இன்னும் பலர் நீச்சல் அடிக்க முயற்சி செய்து கடல் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் மூழ்கியே போனார்கள். ஆனால் சிந்துபாத்தின் நல்ல நேரம் கப்பலில் இருந்து மரத் தொட்டிலைப் போன்ற அமைப்பு கொண்ட ஒரு மரக் கட்டை கடலில் விழுந்து அவன் அருகே மிதந்து வர, அதனை இறைவனின் கருணையாக நினைத்து மிகப் பத்திரமாக பிடித்துக் கொண்டு அதன் துணையால் நீந்தத் தொடங்கினான்.

மறுபுறம், சிந்துபாத் ஏறிவந்த கப்பல் அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த வணிகப் பொருட்களுடன் வெகு தூரம் சென்று அவனது பார்வையில் இருந்து மறைந்தது. எனினும், உயிராவது பிழைத்ததே என்று நினைத்து மனதார இறைவனுக்கு நன்றி சொன்னான் சிந்துபாத். பிறகு அந்த மரக் கட்டையின் உதவியுடன் நீந்தத் தொடங்கினான். பிறக்கும் போதே "பாபாஜானின்" ஆசிர்வாதத்தை பெற்ற சிந்துபாத்துக்கு காற்றும், கடல் அலைகளும் கூட கை கொடுத்து இறுதியில் ஒரு அழகான தீவின் கரைகளில் கொண்டு போய் அவனைச் சேர்த்தது.

நீண்ட நேரம் கடலில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட சோர்வும், பசியும், தாகமும் சிந்துபாத்தை படாத பாடு படுத்தியது. தண்ணீரில் கிடந்த வண்ணம் துழாவித் துழாவி அவனது கால்களும் உணர்வு இன்றி மரத்துப் போய் இருந்தது. எனினும் அந்நிலையிலும் மன உறுதி கொண்ட சிந்துபாத் மெல்ல நகர்ந்து தீவின் கரையில் காணப்பட்ட ஒரு அடர்ந்த மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்து படுத்துக் கொண்டான். அப்படிப் படுத்த சிந்துபாத் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து அவனை அறியாமல் உறங்கவும் தொடங்கினான். இரவு நேரம் நெருங்க, நெருங்க ஈரப் பதம் கலந்து வெளிவந்த குளிர் காற்று சிந்துபாத்துக்கு சாமரம் வீசியது. கடலில் மிதந்து வந்த சமயத்தில் கடல் மீன்கள் கடித்த ரணத்திற்கு அந்தக் குளிர்ந்த காற்றே அரும் மருந்தாக இருந்தது. இப்படித் தான் சிந்துபாத் இனிமையாக அன்றைய இரவு இயற்கையின் மடியில் உறங்கிக் கழித்தான்.

இந்நிலையில் மெல்ல, மெல்ல காலைப் பொழுதும் புலரத் தொடங்கியது. அதன் காரணமாகக் கிளை அகன்று சிறகு விரிக்கும் பறவைகளின் காலை இசை வானில்

எழுந்தது. அத்துடன் ஆதவன் தனது ஒளி மிகுந்த கதிர்களால் நிலவுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

ஆதவனின் கதிர்களை கிரகித்துக் கொண்ட கடல் அன்னை புன்னகைத்தது போலக் காட்சி தந்தாள். உலகின் காரிருளை போக்கிய ஆதவன் தனது வெப்பக் கதிர்களால் சிந்துபாத்தின் உறக்கத்தையும் சுட்டு எரித்தான். அதனால் சிந்துபாத் கண் விழித்தான். அவனுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த அவனது வலிகளும் உயிர் பெற்றன. சிந்துபாத்தின் கால்கள் இரண்டும் அப்போது வீங்கி இருந்தது. அந்நிலையிலும் கூட, மெல்ல நடக்க முடியாமல் நடந்து அத்தீவுக்குள் பிரவேசித்தான். அவன் மீது இரக்கம் கொண்ட ஒரு மரம் தனது கிளைகளில் ஒன்றை ஊன்று கோலாக அவனுக்குக் கொடுக்க அதனைப் பிடித்துக் கொண்டு அதன் துணையுடன் மெல்ல நடக்கத் தொடங்கினான். அதைக் கண்ட இன்னொரு மரம் தன் பங்கிற்கு தன்னிடம் இருந்த கனிகளை அவனுக்கு உதிர்த்துக் கொடுத்தது. அதனை உண்டு சிந்துபாத் பசி ஆறினான். இப்படியாக மனிதன் மறந்து போன மாண்புகளை அத்தீவில் இருந்த மரங்கள் நினைவுபடுத்தின. இது தவிர அந்தத் தீவில் கிழங்கு வகைகளுக்கும், தென்ன மரங்களுக்கும் கூட குறைவு இல்லை. இயற்கை எழில் கொஞ்சிய அந்தத் தீவில் நன்னீர் ஊற்றுகளும் அதிகம் காணப் பட்டன. சுருங்கச் சொன்னால் மனிதனின் காலடித் தடம் படாத தீவு அல்லவா? அதனால் இறைவன் படைத்த போது இருந்த அதே அழகுடன் இப்பொழுதும் அது காணப்பட்டது. மேலும் அந்தத் தீவில் காணப்பட்ட பச்சிலைகள் சிந்துபாத்தின் ரணங்களுக்கு மருந்தாக இருந்தன. அதனால் ஓரிரு தினங்களில் சிந்துபாத் தனது பூரண பலத்தை மீண்டும் பெற்றான். எனினும் சிந்துபாத்தின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் நிழல் ஆடியது. இருக்கிற பொருளை வைத்துக் கொண்டு நிம்மதியுடன் ஊரிலேயே வாழ்ந்து இருக்கலாமே! இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இங்கு இருந்து இனி எவ்வாறு தப்பித்து சொந்த ஊருக்குப் போவது? என்று நினைத்து, நினைத்துக் கண் கலங்கித் தவித்தான் சிந்துபாத். ஒரு உவமைக்காக பேச்சு வழக்கத்தில் "கண்களைக் கட்டி காட்டில் விடுவது” என்பார்கள் பெரியோர்கள். அந்த நிலையை சிந்துபாத் இப்போது தனது நிஜ வாழ்க்கையில் அப்படியே அனுபவித்தான். இப்படியாக சில நாட்கள் அந்தத் தீவிலேயே கழித்தான் அவன்.

ஒரு நாள் அந்தத் தீவில் இருந்த ஒரு உயர்ந்த மரத்தின் மீது பழங்கள் பறிக்க ஏறினான் சிந்துபாத். சற்று தொலைவில் அவன் கண்களுக்கு ஏதோ கோபுரம் போலத் தெரிந்தது. எனினும் அந்தக் கோபுரத்தின் உச்சியில் கூம்பு ஏதும் காணப்படவில்லை. அது சிந்துபாத்துக்கு மிகவும் விச்சித்திரமாகப் பட்டது. அந்த விசித்திரம் அவனது ஆர்வத்தை தூண்டியது. மரத்தில் இருந்து பழங்களைப் பறித்துக் கொண்டு வேகமாக இறங்கிய சிந்துபாத் விரைந்து அந்த கோபுரம் இருக்கும் திசை நோக்கி நடக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் எதை கோபுரம் என்று நினைத்தானோ அவ்விடத்தை அடைந்த போது தான் சிந்துபாத்துக்கே புரிந்தது அவன் நினைத்தது தவறு. அது உண்மையில் ஒரு கோபுரமே அல்ல, அது ராட்ச பறவை ஒன்றின் முட்டை என்று. உண்மையை உணர்ந்த சிந்துபாத் விரைவாக அவ்விடம் விட்டு நகர முயற்சி செய்தான். அப்போது திடீர் என்று ஒரு இருள் எங்கும் படர்ந்தது. சூரியனை மறைக்கும் பேரிருளாக அது தோன்றியது. என்ன இது இவ்விதம் திடீர் என்று சூரியன் மறைக்கப் படுகிறதே என்று பார்த்தால், வானத்தில் ஒரு மிகப் பெரிய பறவை தோன்றியது. உண்மையில் அது கற்பனைக்கும் அப்பாற் பட்ட ஒரு பெரிய பறவை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப் பட்ட அந்தப் பறவை அந்த மூட்டையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட சிந்துபாத் விரைந்து சென்று மறைந்து கொண்டான். மறுபுறம் அந்த ராட்சஸ பறவை அதன் முட்டை மீது பக்குவமாக அமர்ந்து அடை காக்கத் தொடங்கியது.

ஒரு பெரிய பாறையின் இடுக்கில் மறைந்து கொண்டு அக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த சிந்துபாத்தின் மூளை மிக வேகமாக வேலை செய்தது.

"எப்படியும் இந்தப் பறவை தாம் இட்ட முட்டையின் மீது சில மணி நேரம் அமர்ந்து அடைகாத்து விட்டுத் தான் செல்லும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆடைகளை உடன் இந்த அங்க வஸ்த்திரத்தின் உதவியுடன் கயிறு போல ஆக்கி நமது உடலை அந்த ராட்சஸ பறவையின் கால்களுடன் சேர்த்து உறுதியாகக் கட்டிக் கொள்வோம். நிச்சயம் இந்தப் பறவை பறந்து வேறு இடத்திற்கு செல்லும். அப்போது பறவையின் கால்களில் கட்டி இருக்கும் நம்மையும் கூட இப்பறவை சுமந்து செல்லும். ஆயிரம் யானைகளின் தோற்றம் கொண்ட இந்தப் பறவைக்கு அதன் கால்களில் நாம் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவா போகிறது? மேலும், இந்தப் பறவை நம்மை எங்காவது ஒரு இடத்தில் பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்கும். அந்த இடம் இதைப் போல ஒரு அத்துவானமான தீவாக இருக்காது. நிச்சயம் நம்மை இறைவன் கை விட மாட்டார்” என்றெல்லாம் எண்ணிக் கொண்ட சிந்துபாத் உடனுக்குடன் தனது புத்தியில் உதித்த அந்தத் திட்டத்தை செயல் படுத்தத் தொடங்கினான். ஒரு வழியாக தன்னிடம் இருந்த தலைப் பாகை உட்பட அனைத்து ஆடைகளையும் கயிறு போல ஆக்கி அந்த ராட்சஸ பறவையின் கால்களுடன் தனது உடலை உறுதியாகப் பிணைத்துக் கொண்டான். சிந்துபாத்தின் திட்டப்படியே எல்லாம் நடந்தது.

சிந்துபாத் நினைத்தது போலவே அந்தப் பறவை பேரிரைச்சலுடன் தனது சிறகை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. சிந்துபாத் அந்த ராட்சஸ பறவையின் கால்களை பத்திரமாகப் பிடித்துக் கொண்டான். அத்துடன் அவனது ஆடையும் கழண்டு நழுவாமல் பார்த்துக் கொண்டான். நடப்பது நடக்கட்டும். எல்லாமே ஆண்டவன் செயல் என்ற எண்ணமுடன் சற்று தைரியத்தை வர வழைத்துக் கொண்டான் சிந்துபாத்.

மறுபுறம் அந்த ராட்சஸப் பறவை தான் புறப்பட்ட இடத்தில் இருந்து தொலைவாக உள்ள ஒரு மலையை அடைந்து ஒரு பாறையின் மீது அமர்ந்தது. இந்தத் தருணத்திற்காகத் தான் சிந்துபாத்தும் காத்துக் கொண்டு இருந்தான். அந்த ராட்சஸப் பறவை பாறையின் மீது அமர்ந்த சிறிது நேரத்திற்கு உள்ளாகத் தனது உடம்போடு உள்ள கட்டை- முடிச்சை அவிழ்த்து விட்டு, சிந்துபாத் அந்த இடத்தை விட்டே சென்று விட்டான். அத்துடன் அந்தப் பறவையின் கண்களுக்கு அகப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணமுடன் ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைந்தும் கொண்டான்.

அந்த அத்வான இடமும் அங்கு இருந்த மலைகளும் சிந்துபாத்துக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. மேலும் முன்பு தான் தனித்து விடப் பட்டு இருந்த அந்தத் தீவிலாவது சுனைகள், பழங்கள், கிழங்குகள் என்று ஏராளமான பொருட்கள் உண்ணக் கிடைத்தது. ஆனால், தற்போது சிந்துபாத் வந்து இறங்கிய அந்த மலையில் இவை எதுவுமே காணப் படவில்லை. அதனால் நிம்மதி இழந்து தவித்தான் சிந்துபாத். எனினும் தனக்காக ஆண்டவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்தி வைத்து இருப்பார் என்று உறுதியாக நம்பினான். அந்த நம்பிக்கையில் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு விட்டு கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான் சிந்துபாத்.

சிந்துபாத் நடந்து சென்ற பாதையில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அந்தக் காட்டாற்றின் மணலில் பலதரப்பட்ட நவ ரத்தினங்களைக் கண்டான். அவை அனைத்தும் சூரிய ஒளியில் மின்னியபடி சிந்து பாத்தின் கண்களை கூசச் செய்தது. இந்த வைரங்களை எல்லாம் நமது கண்களில் காட்ட வேண்டும் என்பதற்க்காகத் தான் அந்த ராட்சஸப் பறவை நம்மை இந்த மலையில் கொண்டு வந்து விட்டது போலும் என்று எண்ணியவனாய், வேண்டிய மட்டும் வைரங்களை வாரி எடுத்துக் கொண்டான். அவை அனைத்தையும் பல மூட்டைகளாகக் கட்டிக் கொண்டான். அதற்கு மேல் தன்னால் சுமக்க முடியாது என்ற நிலையில் இறைவனுக்கு நன்றி கூறியபடி நடக்கத் தொடங்கினான். பல தொலைவை கடந்தான். இறுதியில் சிந்துபாத் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தான். அந்தப் பள்ளத்தாக்கில் பொல்லாத விஷத் தன்மை கொண்ட பாம்புகள் காணப்பட்டன. சிந்துபாத்தின் நல்ல நேரம் அந்தப் பாம்புகள் அவனை எதுவுமே செய்ய வில்லை. சிந்துபாத்தும் அந்தப் பாம்புகளை ஒரு தொந்தரவும் செய்யவில்லை. நேரம் இருட்ட, இருட்ட சிந்துபாத்தின் மனதை பயம் கவ்வியது. இதற்கு மேல் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான். சிந்துபாத்தின் கண்களில் ஒரு குகை தென்பட்டது. அதைக் கண்ட சிந்துபாத் முதலில் அந்தக் குகைக்குள் மிருகம் ஏதேனும் இருக்குமா? என்று சந்தேகித்தான். பிறகு பொறுமையாக சத்தம் போடாமல் உள்ளே சென்று அங்கு எந்த மிருகமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு குகையின் வாயில் கதவை உள்ளே இருந்தபடி ஒரு பெரும் பாறாங்கல்லைக் கொண்டு வேறு ஏதும் மிருகங்கள் வராத படி நன்றாகக் கஷ்டப்பட்டு நகர்த்தி மூடினான். அவன் வெகு தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட அசதியில் அந்தக் குகையிலேயே தூங்கினான். அடுத்த நாள் காலை சூரியன் உதித்ததை உறுதி செய்த பிறகு தான் சிந்துபாத் அந்தக் குகையை விட்டே வெளியே வந்தான். அப்படி வந்தவன் மீண்டும் தனது பயணத்தை நெடும் தூரம் தொடர்ந்தான்.

அவனது பயணம் அவனை வயல் வெளி நிறைந்த ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டது. அங்கு பல தரப்பட்ட குதிரைகளின் நடமாட்டம் காணப்பட்டது. தூரத்தில் ஒரு வெள்ளைக் குதிரை கட்டப்பட்டு இருந்தது. அது ஒரு பெண் குதிரை. அதன் அருகில் இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள். சந்தேகமே இல்லை அவர்கள் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து ஆனந்தம் கொண்டான் சிந்துபாத். விரைந்து அப்புதிய மனிதர்கள் இருக்கும் அவ்விடம் நோக்கி நகர்ந்தான்.

சிந்துபாத்தை பார்த்த அப்புதியவர்கள் இருவரும் கடல் ஓராமாகக் காணப்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் இருந்து புதிதாக ஒரு மனிதன் வெளி வருவதை பார்த்து முதலில் யார் என்று தெரியாமல் அதிர்ந்து போயினர். மறுபுறம், புதியவர்கள் இருவரையும் நெருங்கிய சிந்துபாத் அவர்களிடம் நயமாகப் பேசத் தொடங்கினான். தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களிடம் கூறி தான் அந்தத் தீவுக்கு வந்து சேர்ந்த சோகக் கதையையும் தெரிவித்தான். இப்படியாக சிந்துபாத்தின் கதையை முழுவதுமாகக் கேட்ட அந்தப் புதியவர்கள் இருவரும் இப்படியெல்லாம் கூட உலகத்தில் நடக்குமா? என்ற ரீதியில் திகைத்து நின்றனர்.

பிறகு அவ்விருவரும் சிந்துபாத்தின் மீது கருணை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உணவை அவனுக்கும் கொடுத்து உதவினார்கள். அதற்கு ஈடாக சிந்துபாத் தன்னிடம் இருந்த விலை மதிக்க முடியாத நவ ரத்தினக் கற்களில் சிலவற்றைக் கொடுத்து தன்னை இந்தத் தீவில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். நவ ரத்தினக் கற்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அப்புதியவர்கள் இருவரும் சிந்துபாத்துடன் இன்னும் அதிகம், அதிகமாக நட்பு கொண்டார்கள். அத்துடன் அவனது கரத்தைப் பற்றி தங்களுடன் வரும் படியாகக் கூறினார்கள். சிந்துபாத்தும் அவர்களது அன்புக்கு இசைந்து அவர்களுடன் சென்றான். புதியவர்கள் இருவரும் அவனைத் தாங்கள் பிரத்யேகமாக ஏற்கனவே தங்க அமைத்து இருந்த மிகப் பெரிய பதுங்குக் குழிக்குள் அழைத்து சென்று அங்கு காணப்பட்ட ஒரு உயரமான திண்டில் சிந்துபாத்தை அமரச் செய்தார்கள். சிந்துபாத் அந்தப் புதியவர்களிடம் அவர்களைப் பற்றிய தகவல்களை கேட்கத் தொடங்கினான். அவர்களும் மறுக்காமல் சிந்துபாத்தின் மீது தாங்கள் கொண்ட அன்பினால் தங்களைப் பற்றி கூறத் தொடங்கினார்கள்.

"அன்பரே! நாங்கள் இருவரும் இங்கு திரியும் குதிரைகளை பிடித்து பழக்கப்படுத்தி அவைகளை நல்ல விலைக்கு அரசர்கள் மற்றும் பிரபுக்களிடம் கொண்டு சென்று விற்பவர்கள். அதற்காகத் தான் வெளியில் இருக்கும் வெள்ளைப் பெண் குதிரையை கட்டி வைத்து உள்ளோம். நாங்களோ இது போன்ற பதுங்குக் குழிகளில் மறைந்து கொள்வோம். இருட்ட, இருட்ட இந்தப் பெண் குதிரையின் வாசனையை உணர்ந்து இந்த வனத்தில் இருக்கும் பொலி குதிரைகள் சில இவ்விடம் வரும். அவைகள் இந்தப் பெண் குதிரையுடன் சில கணங்களிலேயே சேர்ந்து கூடி மகிழும், பின்னர் இந்தப் பெண் குதிரையை தங்களுடன் கூட்டிக் கொண்டு செல்ல முயலும். பெண் குதிரையும் அந்த  ஆண் குதிரைகளுடன் புறப்பட சித்தம் கொள்ளும். ஆனால், நாங்கள் பெண் குதிரையை கட்டி வைத்து இருக்கும் பலமான கயிறின் பிடியில் இருந்து அவற்றால் விடு பட இயலாமல் தவிக்கும். இந்தப் போராட்டத்தில் கயிறுடன் நாங்கள் பிணைத்து இருக்கும் இந்த மணி அடிக்கத் தொடங்கும். அத்துடன் வலியின் காரணமாக அந்தப் பெண் குதிரையின் கனைப்பு சத்தமும் பலமாகக் கேட்கும். உடனே நாங்கள் பதுங்குக் குழிகளில் இருந்து வெளிவந்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் ஆயுதங்களின் உதவியால் ஆண் குதிரைகள் சிலவற்றை சேதாரம் இல்லாமல் பக்குவமாகத் தாக்கி அவைகளை பத்திரமாகப் பிடித்துக் கொள்வோம். அதே போல, பெண் குதிரையும் ஆண் குதிரைகளுடன் கூடியதால் விரைவில் குட்டிகள் போடும். அவற்றையும் நாங்கள் நல்ல விலைக்கு விற்று விடுவோம். எங்களைப் போல இன்னும் பலர் இந்தக் கடற்கரை ஓரமாக இதற்காகவே பதுங்குக் குழிகள் அமைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓர் இரு நாளில் கப்பல்கள் வந்தவுடன் அதில் நாங்கள் எங்கள் குதிரைகளுடனும், பிடிபட்ட குதிரைகளுடனும் ஏறிக் கொண்டு எங்கள் இருப்பிடம் திரும்பி விடுவோம். அப்போது தாங்களும் எங்களுடன் வரலாம். பிறகு அங்கிருந்து தங்களது சொந்த நாட்டுக்குச் செல்லலாம்" என்று கூறி முடித்தனர்.

அப்புதியவர்கள் இருவரில் ஒருவர் இவ்வாறு கூறிய மாத்திரத்தில் அதனைக் கேட்ட சிந்துபாத் ஆனந்தம் கொண்டான். இப்படியாக மூவரும் பேசிக் கொண்டு இருந்த சமயம். இருள் மெல்ல அந்த வனத்தைக் கவ்வியது. பெண் குதிரை ஒன்று ஆதரவு இன்றி தனியே நிற்பதைக் கண்ட அப்பகுதி ஆண் குதிரைகள் சில விரைந்து வந்து அப்பெண் குதிரையுடன் கூடி மகிழ்ந்தன. பிறகு அவைகள் அந்தப் பெண் குதிரையை அழைத்துச் செல்ல முயற்சிகள் செய்தன. பெண் குதிரையும் ஆண் குதிரைகளுடன் செல்லத் தீர்மானித்தது. ஆனால், அது கட்டி வைக்கப் பட்டு இருந்ததால் எவ்வளவு முயற்சி செய்தும் கூட அந்தக் கயிறை அதனால் அறுக்க முடியவில்லை. அப்போராட்டத்தில் வலி தாங்காமல் அந்தப் பெண் குதிரை பலமாகக் கணைக்கத் தொடங்கியது. பெண் குதிரையின் கணைப்பை கேட்டு உணர்ந்த குதிரை வியாபாரிகள் இருவரும் கையில் ஆயுதங்களுடன் அவ்விடம் ஓடி வந்து பெரும் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஆங்காங்கே மறைந்து இருந்து வியாபாரிகளும் வெளி வந்து அக்குதிரைகளை தாக்கி முன்னேற விடாமல் பிடித்துக் கட்டினார்கள். பிறகு வந்த வேலை முடிந்த மாத்திரத்தில் அனைவரும் கப்பலுக்காக காத்துக் கொண்டு இருந்தனர். குறித்த நேரத்தில் அவ்விடத்திற்கு சிறு கப்பல்கள் பல வந்தது. அதில் ஒவ்வொன்றிலும் தாங்கள் பிடித்து வைத்து இருந்த குதிரைகளுடன் ஏறிக் கொண்ட குதிரை வியாபாரிகள் பத்திரமாக முன்பே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து பெரிய கப்பலை அடைந்தனர். அவர்களுடன் சிந்துபாத்தும் பத்திரமாக முன்பு தான் சேகரித்த நவரத்தின மணிகளுடன் அந்தக் கப்பலில் ஏறினான். பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பெரிய கப்பல் புறப்படத் தயார் ஆனது.  அப்போது சிந்துபாத்தை பார்த்த குதிரை வியாபாரிகள் சிலர் அவனை யார் என்று வினவ, முன்பு சிந்துபாத்துக்கு அடைக்கலம் கொடுத்த அந்தப் புதியவர்கள் இருவரும் மற்ற வியாபாரிகளிடம் சிந்து பாத்தின் கதையை விளக்கமாகக் கூறி முடித்தனர். அக்கதையைக் கேட்ட குதிரை வியாபாரிகள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். இப்படிக் கூட உலகத்தில் நடக்குமா? என்று ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைத்தனர். பிறகு அன்புடன் அனைவரும் சிந்துபாத்திற்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர். அவர்கள் அனைவரும் இனிமையாக பிரதி பலன் பார்க்காமல் சிந்துபாத்திடன் அன்பாகப் பழகினர். சிந்துபாத் அவர்கள் அனைவருக்குமே தான் கொண்டு வந்து இருந்த நவ ரத்தினங்களில் சிலவற்றை பரிசாகக் கொடுத்தான். முதலில் அதனை வாங்க மறுத்த குதிரை வியாபாரிகள் பிறகு சிந்துபாத் வற்புறுத்தியதன் காரணமாக சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டனர். அதனால், மேலும் சிந்துபாத்துடன் நன்கு பழகினர்.

ஓர் இரு தினங்களில் அந்தக் கப்பல் "அபூ சிம்பல்” என்ற துறைமுகத்தை அடைந்தது. அவ்விடத்தில் குதிரைகளுடன் இறங்கிய வியாபாரிகள் சிந்துபாத்தையும் பத்திரமாக இறக்கி விட்டனர். சில காலங்கள் அந்தக் குதிரை வியாபாரிகளுடனேயே தங்கி இருந்த சிந்துபாத் அவர்களிடம் இருந்து குதிரைகள் மீது ஏறி அமரப் பயன்படும் சேணத்தை செய்வது பற்றிக் கற்றுக் கொண்டான். அதில் அவன் நன்றாகத் தேர்ந்தும் விட்டான். மேலும் பலதரப்பட்ட குதிரைகளைப் பற்றியும் நிறைய தெரிந்து கொண்டான்.

பிறகு சிந்துபாத் தன்னிடம் இருந்த நவ ரத்தின மணிகளை அங்கு வந்த பிற நாட்டு வர்த்தகர்களிடம் விற்று அதற்கு ஈடாக எண்ணற்ற பொற்காசுகளை பெற்றுக் கொண்டான். இவ்வளவு தூரம் சிந்துபாத் நவ ரத்தினங்களை பல விதங்களில் செலவழித்தும் கூட அவனிடம் மேலும் பல மூட்டைகளில் நவ ரத்தினங்கள் குவிந்து கிடந்தன. தன்னிடம் எண்ணற்ற பொற்காசுகள் சேர்ந்த மாத்திரத்தில் தனக்குத் தேவையான பொற்காசுகளை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சிய பொற்காசுகளைக் கொண்டு பல நல்ல காரியங்களை அவ்வூரில் செய்யத் தொடங்கினான். ஏழைப் பெண்கள் பலருக்கு அவனது சொந்தச் செலவிலேயே திருமணம் செய்து வைத்தான். அங்கு இருந்த மற்ற வியாபாரிகளின் உதவியுடன் இலவச அன்னச் சத்திரங்கள் பலவற்றை அமைத்தான். மருத்துவர்கள் பலரை நியமித்து அவன் செலவிலேயே இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கச் செய்தான். இப்படியாக சிந்துபாத் செய்த எண்ணற்ற நல்ல காரியங்கள் அந்த நாட்டின் மன்னரான "பாஸல் இக்பால்” அவர்களின் காதுகளை எட்டியது. அவர் சிந்துபாத்தை உடனடியாகக் காண விரும்பினார். தனது சேவகர்களை அழைத்து தகுந்த மரியாதையுடன் சிந்துபாத்தை அழைத்து வரச் செய்தார். சேவகர்கள் சிந்துபாத்தை அழைக்க, சிந்துபாத்தும் மன்னரைக் காணச் சென்றான். சிந்துபாத்தின் தோற்றம் மன்னரை மிகவும் கவர்ந்தது. அவனது உருவத்தை வைத்தே இவன் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவன் என்பதை மன்னர் அறிந்து கொண்டார். மன்னர் மீது தான் கொண்ட பேரன்பை வெளிப்படுத்த சிந்துபாத்தும் தன்னிடம் இருந்த நவ மணிகளில் சிலவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக் கொண்ட மன்னர் மிகவும் மனம் மகிழ்ந்தார். அந்த நவ மணிகளின் ஒளியால் அந்த அரண்மனையே பிரகாசித்தது என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு விலை உயர்ந்த நவ மணிகளை சிந்துபாத் எப்படிப் பெற்றான் என்ற கதையை மன்னர் கேட்க, சிந்துபாத்தும் தன் கதையை விரிவாகக் கூறி முடித்தான். அதனைக் கேட்ட மன்னர் சிந்துபாத்தை தனது உற்ற நண்பனாக ஆக்கிக் கொண்டார். சிந்துபாத்தும் மன்னருக்கு மிக நெருக்கமாக ஆனான். மன்னரின் அரசவையில் இருந்த பிரபுக்களுடன் அன்பாகப் பழகினான். படைத் தளபதிகளுக்கு உரிய மரியாதையை அளித்தான். அதனால் அனைவருமே சிந்துபாத்தை பெரிதும் விரும்பினார்கள். ஒரு கட்டத்தில் சிந்துபாத் அந்தப் படைத் தளபதிகளிடம் இருந்து வாள் பயிற்ச்சியை கற்றுத் தேர்ந்தார். மேலும் எண்ணற்ற பல போர் கலைகளை குறுகிய காலத்திலேயே சிந்துபாத் கற்றுத் தேர்ந்தார்.

இப்படி இருக்கும் சமயத்தில் மன்னர் பாஸல் இக்பாலின் அரண்மனைக்கு ஒரு வினோதமான வழக்கு வந்தது. ஒரு விலை உயர்ந்த ஜாதிக் குதிரைக்காக இருவர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இருவருமே அந்தக் குதிரை தங்களுடையது என்று உரிமை கொண்டாடினர். அத்துடன் அந்த இருவருமே ஒரே மாதிரியான தகவல்களை சொன்னதால் மன்னர் பாஸல் இக்பால் செய்வதறியாது தவித்தார். அப்போது சிந்துபாத் மன்னரின் அனுமதியுடன் வழக்கை விசாரிக்க முன்வந்தார். இறுதியில், சற்று நேரம் யோசித்த சிந்துபாத், ”இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும். அது வரையில் குதிரை எங்கள் மன்னரின் அரண்மனையில் தான் இருக்கும்” என்று கூறி அந்த இருவரையும் அனுப்பி வைத்தார். சிந்துபாத் அவ்வாறு சொன்னதைக் கேட்ட அரசர், அவனைத் தனியாக அழைத்து அவனது மனக் கருத்தை அறியத் தொடங்கினார்.

அப்போது சிந்துபாத் மன்னரிடம், ”அரசர் பெருமானே! இவர்கள் இருவருமே தனித் தனியே அழைத்து விசாரித்தும் கூட ஒரே மாதிரியான பதிலைத் தான் சொல்கிறார்கள். அதனால் இந்தக் குதிரைக்கு யார் உண்மையான சொந்தக்காரர் என்பதை இனி நம்மால் சொல்ல முடியாது. அந்தக் குதிரை தான் சொல்ல வேண்டும்” என்றார்.

"சிந்துபாத் குழப்பாதே! குதிரை எப்படிச் சொல்லும்” என்றார் மன்னர் பாஸல் இக்பால்.

"இப்போது சொல்லும் பாருங்கள்” என்று சிரித்துக் கொண்டே சிந்துபாத் குதிரை அருகில் சென்றான் அதன் கட்டை அவிழ்த்து விட்டான். பிறகு அதனை ஒட்டிவிட்டான். பிறகு சேனை வீரர்களுடன் அந்தக் குதிரையை பின் தொடர்ந்து சென்றான். வேகமாக ஓடிய குதிரை ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்று கனைத்தது. உடனே வீரர்கள் சென்று அந்த வீட்டின் கதவை தட்ட அதன் உரிமையாளர் மெல்ல வந்து கதவைத் திறந்தார். அவர் வேறு யாரும் இல்லை காலையில் குதிரையை தன்னுடையது என்று உரிமை கொண்டாடிய அந்த இருவரில் ஒருவர் தான். அந்த உயர் ரக குதிரை அவரிடமே ஒப்படைக்கப் பட்டது. பொய் வழக்கு தொடர்ந்தவன் விஷயம் அறியாமல் அடுத்த நாள் காலை அரண்மனைக்கு வந்தான். அவனுக்கு நூறு பிரம்பு அடிகள் கொடுக்கப்பட்டது. வலி தாங்க முடியாமல் உண்மையை ஒத்துக் கொண்டு மன்னரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரும் அவனை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இறுதியில் சிந்துபாத்திடன் அவன் எவ்வாறு உண்மையைக் கண்டு பிடித்தான் என்று கேட்க. சிந்துபாத் சிரித்துக் கொண்டே, "மன்னர் மன்னவா! குதிரைக்கு அதன் எஜமானர் மீது தான் பற்று அதிகம். எங்கு சென்று சுற்றினாலும் இறுதியில் தனது எஜமானர் இடம் தான் அக்குதிரை வரும். அதே வழியை பின்பற்றித் தான் நேற்று இரவு அந்தக் குதிரையை அவிழ்த்து விடச் சொன்னேன். அந்தக் குதிரையும் நான் நினைத்தபடியே அதன் உண்மையான எஜமானர் வீட்டை அடைந்து கனைத்தது. அதனை வைத்துத் தான் உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தேன்” என்று கூறினான்.

"பலே சிந்துபாத்! பலே! நீ சாதித்து விட்டாய்” என்று கூறி பூரித்துப் போன மன்னர் சிந்துபாத்துக்குப் பரிசுகள் பல கொடுத்து அவனை அந்நாட்டின் நீதிபதியாக உயர்த்தினார். அத்துடன் அவன் வசிக்க மிகப் பெரிய அரண்மனையையும் கட்டிக் கொடுத்தார். மேலும் பல புதிய பதவிகளும் சிந்துபாத்தை தேடி வந்ததால் அந்த ஊரில் மன்னருக்கு நிகரான அந்தஸ்தை பெற்றான் சிந்துபாத். அந்த ஊருக்கு வரும் முக்கியஸ்தர்கள் யாராக இருந்தாலும் முதலில் சிந்துபாத்தைக் கண்ட பிறகே மன்னரைக் கண்டு வந்தனர்.

சிந்துபாத்தின் பணி யாதெனில் தினமும் காலை மன்னரைக் காணச் செல்ல வேண்டும். நீதி பரிபாலனம் தவிர மன்னர் கொடுக்கும் மேலும் பல முக்கியப் பொறுப்புகளை கண்காணிக்க வேண்டும். இப்படியே சில காலங்கள் கடந்தது.

ஒரு நாள் சிந்துபாத்தை அழைத்த மன்னர் "உடனே தாங்கள் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வணிகர்கள் சிலர் நியாயமாக நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பொய்க் கணக்கு எழுதி ஏய்க்கின்றனர். அந்தக் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு நீதியின் முன் அவர்களை இழுத்து வாருங்கள்” என்று பணித்தார்.

சிந்துபாத்தும் சில முக்கிய அதிகாரிகளுடன் வீரர்கள் பின் தொடர துறைமுகத்திற்கு திடீர் விஜயம் செய்தார். மன்னர் கூறியபடி அனைத்து வியாபாரிகளின் கணக்கையும் அவர்கள் கப்பல்களில் கொண்டு வந்த பண்டங்களையும் ஆராய்ந்தார். அவர் நடத்திய நீதி விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வரியை வணிகர்கள் சிலர் வேண்டும் என்றே ஏமாற்றி இருப்பதை கண்டறிந்து அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் சிந்துபாத். உடனுக்குடன் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது வணிகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது துறைமுகத்திற்கு ஒரு பெரிய கப்பல் வந்து நின்றது. அந்தக் கப்பலில் இருந்தும் சரக்குகள் இறக்கப் பட்டன. அதையும் சென்று பார்வை இட்டார் சிந்துபாத். அந்தக் கப்பல் தலைவன் சிந்துபாத்தை பற்றி அறிந்ததும் ஓடி வந்து வணங்கி நின்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். அவனைப் பார்த்த சிந்துபாத்," சரக்குகள் இவ்வளவு தானா? இன்னும் தரை இறக்கப் பட வேண்டிய சரக்குகள் ஏதேனும் உண்டா?" என்று கேட்கவும், அவன் இவ்வாறு பதில் கூறத் தொடங்கினான்.

"ஐயனே! இன்னும் கொஞ்சம் சரக்குகள் கப்பலில் உள்ளன. அந்தச் சரக்குகளின் உரிமையாளர், நாங்கள் வந்த வழியில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிர் இழந்து விட்டதாகக் கருதப் படுகிறார். ஆகவே, இந்தச் சரக்குகளை நாங்கள் போகும் வழியில் விற்று பாக்தாத்தில் உள்ள அவருடைய உறவினர்களிடம் அந்தப் பணத்தை ஒப்படைக்க வேண்டும்" என்றான்.

உடனே, சிந்துபாத் அந்தக் கப்பல் தலைவனிடம் "அந்த வர்த்தகரின் பெயர் என்ன?" என்று கேட்டதும், உடனே அந்தக் கப்பல் தலைவன் "பாக்தாத் நகரத்தை சேர்ந்த சிந்துபாத்" என்று கூறினான்.

அதனைக் கேட்ட சிந்துபாத் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாய், "தலைவரே என்னை அடையாளம் தெரிகிறதா? தாங்கள் சொன்ன அந்த சிந்துபாத் நான் தான். வரும் வழியில் ஒரு தீவில் பூதம் துரத்தியதில் பலர் கடலில் விழுந்து உயிர் துறந்தனர் அல்லவா?. ஆனால் இறைவனின் கிருபையால் எப்படியோ நாம் மட்டும் ஒரு மரத்துண்டின் மூலமாக பிழைத்துக் கொண்டேன். அதன் பின்னர் ஆண்டவன் அருளால் பலதரப்பட்ட பயணங்களுக்குப் பிறகு மன்னர் "பாஸல் இக்பால்” அவர்கள் மூலமாக ஒரு அருமையான நட்பு கிடைத்தது. இப்போது அந்த நல்ல நட்பின் விளைவாக நான் நீதிபதி பதவியில் அமர்ந்து நீதி பரிபாலனை செய்து வருகிறேன்” என்று சுருக்கமாகத் தனது கதையை கூறி முடித்தான்.

மறுபுறம் அந்தக் கப்பல் தலைவனும் சிந்துபாத்தை அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ந்தான். பிறகு அந்தக் கப்பல் தலைவன் சிந்துபாத்திடம்,” சிந்துபாத் அவர்களே! ஆண்டவன் உங்களுடன் தான் இருக்கிறார். அதனால் தான் உயிர் பிழைத்து இவ்வளவு தூரம் வந்து உள்ளீர்கள். இவ்வளவு ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளீர்கள். மேலும் நீங்கள் தொலைத்த உங்களது பொருள்களும் உங்களிடமே வந்து சேர்ந்து உள்ளது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்” என்று புகழ்ந்து பேசினார். பிறகு சிந்துபாத்தின் பொருள்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டன.

பிறகு மன்னர் கொடுத்த வேலையை முடித்த சிந்துபாத் தனது வர்த்தகப் பொருள்களுடன் மன்னரைக் காணச் சென்றார். மன்னரிடம் விஷயத்தைக் கூறினார். அதனைக் கேட்ட மன்னர் உண்மையில் சிந்துபாத் அதிர்ஷ்டசாலி தான் என்று அவையில் கூறி அவரை ஆறத் தழுவி மகிழ்ந்தார். மேலும் பரிசுகள் பல கொடுத்து சிந்துபாத்தை பாராட்டினார்.

பிறகு சிந்துபாத் தனது பொருள்களில் விலை உயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்தார். சிந்துபாத் நினைத்ததை விட அதிகம் அதிகமாக பொருள்களை சம்பாதித்தார். இறைவனுடைய கருணையுடன் அதிர்ஷ்டமும் சிந்துபாத்திற்கு துணை நின்றது. அதனால் தான் சிந்துபாத் விஷயத்தில் எல்லாமே இனிதாக நடந்து முடிந்தது. பிறகு பாக்தாத் செல்ல வேண்டும் என்ற ஆசை சிந்துபாத்தின் மனதை வருடியதால் அவன் மன்னனிடம் விடை பெற்று தனது சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தான். மன்னரே தன்னுடைய பாதுகாப்பில் அதிலும் தன்னுடைய செலவில் சிந்துபாத்தை பாக்தாத் நகரம் வரையில் அனுப்பி வைத்தார். ஏராளமான பொருள்களுடனும் தான் முன்பு கண்டெடுத்த நவ இரத்தின மணிகளுடனும் சிந்துபாத் பாக்தாத் நகரத்தை அடைந்தான். அங்கு அவனுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாக்தாத் நகரத்தை அடைந்த மாத்திரத்தில் சிந்துபாத் தனது அரண்மனையை விரிவு படுத்தினான். தனது கடன்களை அடைத்தான். தனது தந்தையின் சொத்துக்களை மீட்டு எடுத்தான். அப்பொழுதும் கூட அவனிடம் இருந்த செல்வங்கள் குறையவில்லை. சிந்துபாத்திடம் பாக்தாத் மன்னரிடம் இருக்கும் செல்வத்திற்கு நிகரான செல்வம் இருந்தது. அதனை அறிந்த பாக்தாத் மன்னர் சிந்துபாத்தை அழைத்து விருந்தும், விருதுகளும் உடன் கொடுத்து அதன் கூடவே "பாக்தாத்தின் கடலோடி சிந்துபாத்” என்ற பட்டத்தையும் அளித்து மகிழ்ந்தார். சிந்துபாத் செல்வம், செல்வாக்குடன் புகழின் உச்சியை அடைந்து இருந்தான். பணம் வந்து விட்டால் சாதாரண மனிதன் கூட சும்மா இருக்க மாட்டான் அல்லவா? அப்படி இருக்க இந்த விஷயத்தில் சிந்துபாத் மட்டும் விதி விலக்கா என்ன? மிகப் பெரிய ஒரு ஆடம்பரக் கப்பலை தனக்கென அதிக விலை கொடுத்து வாங்கினான். அதனைக் கொண்டு மீண்டும் இந்த உலகை சுற்றி வர விருப்பம் கொண்டான். அந்த விருப்பத்தை நிறைவேற்ற அவனது மனம் துடித்தது. ஒரு நல்ல நாளில் தனக்கு நம்பிக்கையான வேலை ஆட்கள் நூறு பேருடன் தனது அடுத்தக் கட்ட கடல் பயணத்தை தொடங்க ஆயத்தம் ஆனான்.