கைகேயி சூழ்வினைப் படலம் - 1631
பறவைகளின் ஒலி
1631.
தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி,
மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின்
நின்று சிலம்புவ -
கேகயத்து அரசன் பயந்த விடத்தை,
இன்னது ஓர் கேடு சூழ்
மா கயத்தியை, உள் கொதித்து,
மனத்து வைவன போன்றவே.
தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் -
மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால்
குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற
பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய
சிற்றிடையையுடைய; மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச்
சிலம்புகள்போலிருந்து; சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன்
பயந்த விடத்தை -கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை;
இன்னது ஓர்கேடு சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த; மா
கயத்தியை - மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து - உள்ளம்
புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை
ஒத்திருந்தன; ஏ -அசை.
பறவைகள் விடியற்காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு
அவளைத் தம்மனத்தினுள் வைவது போலும் என்றார். இது தற்குறிப்பற்ற
அணி, கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார்.
கயத்தி - கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள்
செயலின் கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை 52
