கைகேயி சூழ்வினைப் படலம் - 1632
யானைகள் துயிலெழல்
யானைகள் துயில் ஒழிந்து எழுதல்
1632.
சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த
இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,
யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று
நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’
என்பனபோல் எழுந்தன - யானையே.
யானை - யானைகள்; சேமம் என்பன பற்றி - தமக்குப்
பாதுகாப்பான கூடங்களில்பொருந்தி; அன்பு திருந்த இன்துயில்
செய்தபின் - இராமபிரானிடத்து அன்பு மிக இனிதுதூக்கத்தைச் செய்த
பின்பு; வாம மேகலை மங்கையொடு - அழகிய மேகலை அணிந்த சீதை
யோடு; யாரும் மறக்கிலா நாம நம்பி - எவரும் மறக்க முடியாத
திருப்பெயரை உடைய இராமபிரான்; வனத்துள் நடக்கும் என்று -
காட்டிற்குச் செல்வான் என்று; நடுங்குகின்ற மனத்தவாய்- வருந்துகின்ற
நெஞ்சையுடையவனவாய்; ‘யாமும் இம் மண் இறத்தும் - நாமும் இந்த
நாட்டைவிட்டுச் செல்வோம்;’ என்பன போல் - என்று கூறுவன போல;
எழுந்தன -கிளம்பின.
யானைகள் எழுந்ததை, இராமபிரான் நாட்டை விட்டுக் காட்டுக்குச்
செல்லப் போவதனால் நாமும்இந்நாட்டைவிட்டுச் செல்வோம் என எழுந்தது
போலத் தோன்றியது என்கிறார். இது தற்குறிப்பேற்றஅணி. சேமம் - கூட்டு
மிடம்; கூடம். வாமம் - அழகு. மேகலை - எண்கோவை மணி. யானை -
பால்பகாஅஃறினைப் பெயர். 53
