கைகேயி சூழ்வினைப் படலம் - 1625
கைகேயி கூற்று (1625-1626)
கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல்
1625.
ஆழிப் பொன் - தேர் மன்னவன்
இவ்வாறு அயர்வு எய்தி,
பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப்
புரள் போழ்தில்,
“ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல்,
உயிர் மாய்வென்;
பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள்,
பகை அற்றாள்.
ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால்
ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித்
தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன்
தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்)
உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி
பொன் தார் மன்னவ - பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த
அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று
உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர்
மாய்வென் - நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -.
இப்பாட்டு, கைகேயியின்கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும்
விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய
உன் கடமை ஆகும்.அதனைச் செய்க என்னும் கருத்தைக் காட்டுகிறது. ஆழிப் பொன் தேர் மன்னவன்என்பதில்தசரதன் என்பதன் பொருள் அடங்கியிருக்கிறது. பூழி - புழுதி. பசை - ஈரம், இரக்கம். 46
