குலமுறை கிளத்து படலம் - 724

bookmark

கடல் கடைந்த காவலன்

724.

‘அரைசன் அவன் பின்னோரை.
   என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி
   இவர் குலத்தோன் ஒருவன்காண்-
நரை திரை மூப்பு இவை மாற்றி
   இந்திரனும் நந்தாமல்.
குரை கடலை நெடு வரையால்
   கடைந்து. அமுது கொடுத்தானும்.
  
அரைசன்    - அந்தக் ககுத்த மன்னனது; அவன் பின்னோரை -
குலத்தில்     பின்பு    தோன்றிய    அரசர்களை;      அளப்பு  -
(இத்தன்மையுடையவர்  என்று)  அளவிட்டுச் சொல்லுதல்;  என்னாலும்
அரிது  -  என்னாலும் முடியாது; நரை - முடி வெளுத்தலும்; திரை -
உடம்பின்  தோல்  சுருங்குதலும்;  மூப்பு - (இவற்றிற்குக் காரணமான)
முதுமைத்  தன்மையும்;  இவை  - என்னும் இவற்றை; மாற்றி - நீக்கி;
இந்திரனும் - தேவேந்திரனும்;  (மற்ற  தேவர்களும்);    நந்தாமல் -
சாகாதபடி;  குரைகடலை - ஒலிக்கின்ற பாற்கடலை; நெடுவரையால் -
பெரிய  (மந்தர) மலையால்;  கடைந்து   -   கடைந்து;   அமுது
கொடுத்தானும்  -  (அதிலிருந்து) தேவர்களுக்கு அமுதத்தை எடுத்துக்
கொடுத்தவனும்;  உரை  குறுக  - (மொழியில்) சொற்கள் குறையும்படி.
நிமிர் கீர்த்தி- மிகுதியான புகழையுடைய; இவர் குலத்தோன் - இந்த
மைந்தர்களது  குலத்தில்  உதித்த;  ஒருவன்  காண்  - ஓர் அரசனே
ஆவான். 

உரை     குறுக   நிமிர்கீர்த்தி - இக்    குமாரர்களின் பெரும்புகழ்
சொல்லுக்கு  அடங்காது.  அதாவது   இவர்களின்  புகழைக் கூறுவதற்கு
வேண்டிய   சொற்கள்  உலகிலே  இல்லை    என்பது.  இந்திரனும்  -
எச்சவும்மை. உயர்வு சிறப்பும்மை.                               4