குலமுறை கிளத்து படலம் - 722
இட்சுவாகு
722.
‘பிணி அரங்க. வினை அகல.
பெருங் காலம் தவம் பேணி.-
மணி அரங்கு அம் நெடு முடியாய்!-
மலர் அயனை வழிபட்டு.
பணி அரங்கப் பெரும் பாயற்
பரஞ் சுடரை யாம் காண.
அணி அரங்கம் தந்தானை
அறியாதார் அறியாதார்!
மணி - நவரத்தினங்களும்; அரங்கு - அழுத்திப்பதித்த; அம்
நெடுமுடியாய் - அழகிய பொன்முடியையுடைய சனக மன்னனே! பிணி
அரங்க - நோய் நீங்கவும்; வினை அகல - (அவற்றிற்குக்
காரணமாகிய) தீவினைகள் ஒழியவும்; பெருங்காலம் - அநேக
ஆண்டுகள்; தவம்பேணி - தவத்தை விருப்பத்தோடு செய்து; மலர்
அயனை - தாமரைப் பூவில் தோன்றிய பிரமனை; வழிபட்டு -
வணங்கி வழிபட்டு; பணி அரங்கம் - (அவன் அருளால்) ஆதி
சேடனாகிய பாம்பின் உடலை; பெரும்பாயல் - பெரிய பள்ளி
மெத்தையாக; பரஞ் சுடரை - கொண்டுள்ள ஒளிவடிவமான
திருமாலை; யாம்காண் - எம்மைப் போன்றவரும் கண்டு உய்யுமாறு;
அணி அரங்கம்-அழகிய திருவரங்க விமானத்தோடு; தந்தானை-(சத்திய
உலகிலிருந்து பூமிக்கு) கொண்டு வந்த இந்த வம்சத்தவனான
இட்சுவாகு மன்னனை; அறியாதார் - அறியாதவர்; அறியாதார் -
அறிவில்லாதவரே ஆவர்.
திருவரங்கம்: வைகுண்டம். திருப்பாற்கடல். யோகியரின் உள்ளத்
தாமரை என்னும் இவற்றைக் காட்டிலும் திருமால் மனம் உவந்து
எழுந்தருளியிருக்கும் இடமாதல் பற்றி இவ் விமானத்திற்கு ‘ரங்கம்’
(அரங்கம்) எனப் பெயர் அமைந்தது. இட்சுவாகு மன்னன்:
வைவச்சுவத மனுவின் மகனாகிய இட்சுவாகு மன்னன் பிரமனை
நோக்கிப் பலகாலம் தவம் புரிந்து அவன் அருளால் திருமாலைப்
பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளச்செய்து பிரதிட்டை செய்து
வழியாடு செய்தான். அந்த அரங்கநாதனே இரவிகுல மன்னவர்க்குக்
குலதெய்வமாக விளங்கினான். பரஞ்சுடர் - கதிரவன். சந்திரன்.
நெருப்பு என்னும் முச்சுடர்களிலும் மேம்பட்ட ஒளியுருவம். 2
