குருவிடம் தனது சந்தேகங்களை கேட்கும் மைத்ரேய முனிவர்
குருவிடம் தனது சந்தேகங்களை கேட்கும் மைத்ரேய முனிவர்சூரியன் ஆகாயத்தில் எழுந்து கொண்டிருந்த நேரத்தில் பராசர முனிவர் காலையில் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது அவ்விடத்திற்கு மைத்ரேய முனிவர் தனது குருநாதரை காண்பதற்காக வந்திருந்தார். தன்னுடைய குருநாதரை கண்டதும் அவரை வணங்கி நின்றார்.குருநாதரான பராசர முனிவர், அதிகாலைப் பொழுதில் தன்னுடைய சீடன் தன்னை காண வந்திருக்கின்றார் என்றால் அவருடைய மனதில் பலவிதமான எண்ணங்களும், ஐயங்களும் ஏற்பட்டிருக்கும் என்பதை அவரை வணங்கிய விதத்திலிருந்து கண்டறிந்தார். பின்பு குருநாதர் தனது சீடனை நோக்கி மனதில் என்ன குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றாய். ஏதேனும் ஐயம் உள்ளதா? என்று வினாவினார்.மைத்ரேய முனிவரும் தனது குருநாதரை வணங்கி ஆம் குருநாதரே! அனைத்து வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும் தங்களிடமிருந்து நான் கற்றறிந்தேன். இன்று பல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் பலர் எம்மை பாராட்டுவதற்கு முதன்மை காரணமே தங்களிடம் நான் கற்றதே ஆகும் என்று கூறினார்.குருவும் தனது சீடனை நோக்கி சாஸ்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், யாமறிந்த செய்திகளையும் உமக்கு எடுத்து கூறினோம். ஆயினும் அவைகள் உண்மை வந்தடைய வேண்டும் என்பது இருந்ததினால் மட்டுமே உம்மால் அதை முழுமையாக கற்றறிய முடிந்தது என்று கூறினார். சீடரும் தமக்கு கலைகளை கற்றுக்கொடுத்த குருவை வணங்கி பின்பு குருவே எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை பற்றி தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறினார்.குருவும் உமது சந்தேகங்களை எடுத்துரைப்பாயாக! எம்மால் முடிந்த அளவு அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றேன் என்று கூறினார்.குருவே! தர்மங்கள் பல அறிந்தவரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த உலகம் எவ்விதத்தில் உண்டாகியது? இனி வரப்போகின்ற நாட்களில் இந்த உலகம் தன்னை எவ்விதத்தில் மாற்றிக்கொள்ள இருக்கின்றது? என்பதையும் இந்த உலகம் எதன் சொரூபமாக விளங்குகின்றது?உலகம் எப்படி உருவாயிற்று?எங்கே இருக்கின்றது?பஞ்சபூதங்கள் எப்படி உருவானது?அவைகள் எவ்விதத்தில் நம்மை கட்டுப்படுத்துகின்றன?மேலும் தேவதைகள், உயிரினங்கள் முதலியவற்றின் உற்பத்திகளையும், படைப்பு தொழிலானது எப்படி தோன்றியது? என்பதையும்இந்த உலகத்தில் இருக்கக்கூடிய கடல்கள், மலைகள் எவ்விதத்தில் தோன்றி இருக்கின்றன? என்பதையும்அவைகள் பூமியில் இருக்கக்கூடிய நிலைகளை பற்றியும்..பூமிக்கு வெளிச்சத்தை அளிக்கக்கூடிய சூரியன் மற்றும் சந்திர கோள்களின் நிலைகளை பற்றியும்..அவர்களுடைய அளவுகளை பற்றியும்..தேவர்களுடைய அம்சங்களை பற்றியும்..மனுக்கள், மனுவந்தாரங்ளையும், மகா கல்பங்களையும், நான்கு யுகங்களின் பிரிவுகளையும், அவைகளுடைய முடிவு நிலைகளையும், ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய தர்மங்களையும் நான் அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் கொண்டிருக்கின்றேன்.முனிவர்களில் சிறந்தவரே! தேவர்கள், வேந்தர்கள், முனிவர்கள் முதலியவர்களின் வரலாறுகளையும், ஒவ்வொரு குலத்தினர் செய்ய வேண்டிய குல தர்மங்களையும், பிரம்மச்சரியம் முதலான தர்மங்களையும், வசிஷ்ட முனிவரின் பேரனான எனது குருநாதரே! தாங்களே எமக்கு மேற்கண்ட ஐயங்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்று வேண்டி நிற்கின்றேன் என்று கூறினார்.அதற்கு பராசரர், மைத்ரேய முனிவரை நோக்கி பின்வருமாறு தமக்கு அறிந்த விஷயங்களை எடுத்துரைக்க துவங்கினார்.
