குட்டுவன் கோதை

bookmark

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது.

புறநானூற்றுப் பாடலில் புலவர் இவனைக் 'கடுமான் கோதை' எனக் குறிப்பிட்டு இவன் சிறந்த குதிரைவீரன் என்பதையும், பரிசிலர் இவன் கோட்டைக்குள் எளிதாகப் புகலாம் என்றும், ஆனால் அதே சமயத்தில் புலிக் குகைக்குள் இடையன் புகமுடியாதது போல பகை நாட்டு மன்னர்கள் நுழையமுடியாது எனக் கூறி, இவனது ஆற்றலையும், கொடைத்திறத்தையும் ஒருங்கே எடுத்து உரைக்கிறார்.