கார்முகப் படலம் - 814
சனகன் கூறிய மொழி
814.
‘உரை செய் - எம் பெரும!
உன் புதல்வன் வேள்விதான்.
விரைவின். இன்று. ஒரு பகல்
முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல்
முழங்கு தானை அவ்
அரசையும். இவ் வழி.
அழைத்தல் வேட்கையோ?
எம் பெரும- எம் பெருமானே! உன் புதல்வன் - உன்னால்
அழைத்துவரப் பெற்ற மைந்தனது; வேள்விதான் - திருமணமானது;
விரைவின் - தாமதம் இல்லாமல்; இன்று ஒரு பகல் - இன்றைய
தினமே; முடித்தல் வேட்கையோ - நிறைவேற்ற வேண்டும் என்பது
விருப்பமா? (அல்லது); முரசு எறிந்து - மணமுரசை எங்கும் முழக்கி;
அதிர்கழல் - அதிர்கின்ற வீரக் கழலையும்; முழங்கு தானை -
ஆரவாரம் மிக்க படைகளையுமுடைய; அவ் அரசையும் - அத் தசரத
மன்னனையும்; இவ்வழி - இந்த நகரத்துக்கு; அழைத்தல் -
வரவழைத்து (திருமணத்தை) நடத்துதல்; வேட்கையோ - உமக்கு
விருப்பமா?; உரை செய் - (இவ் விரண்டினுள்) எது விருப்பம்
என்பதைச் சிந்தித்துச் சொல்க (என்று சனகன் கோசிகனை
வினவினான்.) 65
