கார்முகப் படலம் - 800

bookmark

800.    

‘எங்கு நின்று எழுந்தது. இந்த
   இந்து? வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று. அனங்கன் எய்த
   அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல்
   விடம் பொழிந்தது; என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று;
   அகம் களங்கம் இல்லையே!
 
என்    நெஞ்சு- எனது மனத்திலே; உலாவந்து -  உலாவி வந்து;
அங்கு  -  அந்த  இடத்திலே;  இயன்று - அச்செயலோடு  பொருந்தி;
அனங்கன்  எய்த   -  மன்மதன்  செலுத்திய;  அம்பின்  வந்த  -
அம்பினால் உண்டான; சிந்தைநோய்- மன நோயானது; பொங்குகின்ற
-   பெரிதும்   வெளிப்படும்  இடமான;   கொங்கைமேல்  -  (என்)
தனங்கள்மேல்; விடம் பொழிந்தது - நஞ்சினை ஊற்றியது; என்னினும்
-  என்றாலும்;  கங்குல் வந்த - (இது) நேற்றிரவில் தோன்றி வருந்திய;
திங்கள்  அன்று  -  சந்திரன் அன்று; அகம் - (ஏனென்றால்)  இதன்
மத்தியில்;  களங்கம்  இல்லை -  களங்கம் காணப்படவில்லை;  இந்த
இந்து  -  இந்தச்  சந்திரன்; எங்கு நின்று - எங்கிருந்து; எழுந்தது -
வந்ததோ? (தெரியவில்லை)

உரு   வெளிப்பாட்டில் இராமனது முகச் சந்திரன் தோன்ற அதனால்
உண்டான    துயரத்தைச்     சீதை    வெளிப்படுத்துகிறாள்.   அவள்
முகச்சந்திரனைப்  பார்த்து  இது  நஞ்சு    பொழிந்ததனாலும் நடுவிலே
களங்கத்தைப்  பெறவில்லை    ஆதலாலும்  இது  நேற்றிரவு தோன்றிய
சந்திரன் அன்று; இந்தச் சந்திரன்  இரவு  அல்லாத இப்போது எவ்வாறு
தோன்றியதோ என்று வருந்துகின்றாள்.                          51