கார்முகப் படலம் - 801
801.
‘அடர்ந்து வந்து. அனங்கன். நெஞ்சு
அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்நின்று
வெந்திடாது எழுந்து. வெங்
கடம் துதைந்த காரி யானை
அன்ன காளை தாள் அடைந்து.
உடன்தொடர்ந்து போன ஆவி
வந்தவா என்? - உள்ளமே!
உள்ளமே - என் மனமே; அனங்கன் - மன்மதன்; நெஞ்சு
அழன்று - மனம் கொதிக்குமாறு; அடர்ந்து வந்து - நெருங்கி வந்து;
சிந்தும் அம்பு எனும் விடம் - நஞ்சு தோய்ந்த அம்பு; குடைந்த -
குடைதலினால்; மெய்யின் நின்று - உடம்பினுள்நிலைத்து; வெந்திடாது
எழுந்து - வெந்தழியாமல் வெளிப்பட்டு; வெங்கடம் துதைந்த -
வெப்பமான மதநீர் பெருகும்; காரி யானை அன்ன - கறுத்த
யானையைப் போன்ற; காளை தாள் அடைந்து - காளை போன்ற
பிரானுடைய திருவடிகளைச் சரணடைந்து; உடன் தொடர்ந்துபோன -
அவனோடு தொடர்ந்து சென்ற; ஆவி - என் உயிரானது; வந்தவா -
திரும்பி வந்த விதம்; என் - என்னவோ?
‘அனங்கன் எய்த அம்பால் வெந்த உடம்பிலிருந்து தான்
வேகாதிருக்கத் தப்பி வந்த என்னுயிர் தொடர்ந்து சென்று இராமன்
திருவடியைச் சரணடைந்தும் இப்போது துன்பப் படுமாறு
திரும்பிவந்ததே! இது வியப்பாக உள்ளது’ என்று இரங்கிக் கூறுகிறாள்
சீதை. 52
