கார்முகப் படலம் - 798

bookmark

798.    

‘பஞ்சு அரங்கு தீயின் ஆவி
   பற்ற. நீடு கொற்ற வில்
வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க.
   வெய்ய காமன் எய்யவே.
சஞ்சலம் கலந்தபோது.
   தையலாரை. உய்ய வந்து.
“அஞ்சல்! அஞ்சல்!” என்கிலாத
   ஆண்மை என்ன ஆண்மையே?
 
வெய்ய  காமன் - கொடுமையுள்ள மன்மதன்; நீடு கொற்ற வில் -
நீண்ட   வெற்றியுடைய   வில்லினால்;  வெம்  சரங்கள்  -  கொடிய
அம்புகளை;  பஞ்சு  அரங்கு  தீயின் - பஞ்சை அழிக்கும் நெருப்புப்
போல; ஆவி பற்ற - என்னுயிரைப் பற்றி நிற்கவும்; நெஞ்சு அரங்க -
(அதனால்)   என்  மனம்  சிதையுமாறு;  எய்ய  -  பிரயோகித்தலால்;
சஞ்சலம் கலந்த- துன்பம் வந்து கலங்கும்; போது - இப்போது; உய்ய
வந்து - (நான்) உயிர் பிழைக்கும்படி என் அருகே வந்து;  தையலாரை
-  (ஆதரவற்ற)   பெண்களை;  அஞ்சல்  அஞ்சல்  என்கிலாத   -
அஞ்சாதீர். அஞ்சாதீர் என்று கூறி அபயம்  அளிக்காத; ஆண்மை   -
ஆண்மை;   என்ன  ஆண்மையோ  -  எத்தகைய  ஆண்மையோ?

வருந்தும்  பெண்களை அணுகி அஞ்சல் என்று அபயம் அளிப்பதே
ஆண்மைக்கு  அழகு.  ஆனால்.  அப்படிச்  செய்யாத    இப்பிரானது
ஆண்மை என்ன ஆண்மை என்று   வெறுப்பினால் இயற்பழிக்கின்றாள்
சீதை.                                                    49