கார்முகப் படலம் - 795

bookmark

சீதையின் ஆற்றாமைக் கூற்றுக்கள். (795-803)

795.    

“பெண் இவண் உற்றது” என்னும்
   பெருமையால். அருமையான
வண்ணமும் இலைகளாலே
   காட்டலால். வாட்டம் தீர்ந்தேன்;-
தண் நறுங் கமலங்காள்! - என்
   தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர்; என்
   உயிர் தர உலோவினீரே!
 
தண்   நறுங்   கமலங்காள்- குளிர்ந்த  நறுமணமுள்ள  தாமரைக்
கொடிகளே!;  பெண்  - ஒரு பெண்ணிற்கு; இவண் -  இப்போது இந்த
இடத்தில்;  உற்றது - (பிரிவுத் துயர்) நேர்ந்துள்ளது; என்றும் -  என்று
கருதுகின்ற;    பெருமையால்    -    பெருந்தன்மை    உங்களுக்கு
உண்டானதால்;    அருமையான    வண்ணமும்  -    (அப்பிரானது
காண்பதற்கு அரிய) திருமேனி நிறத்தையும்;  இலைகளாலே - (உங்கள்)
இலைகள் மூலம்; காட்டலால் - காட்டுவதால்; வாட்டம் தீர்ந்தேன்  -
மனவாட்டம்  நீங்கப்  பெற்றேன்  (அல்லாமலும்); நீர் - நீங்கள்;  என்
தளிர்  நிறம்  உண்ட  -  எனது  தளிர் போன்ற நிறத்தைக் கவர்ந்த;
கண்ணினுள்  -  அவருடைய  கண்களிலுள்ள;   நிறம் - நிறத்தையும்;
காட்டினீர்- (மலர்களைக்   கொண்டு)   காட்டினீர்   (அவ்வாறு காணச்
செய்தும்);  என்  உயிர் தர - எனது உயிராகிய  அவரைத் தருவதற்கு;
உலாவினீரே - பின்வாங்கினீரே (இதற்கு என்ன காரணம்).

இராமனது    நிறத்தையும் கண்களையும் தாமரை காட்டி  நின்றதைப்
புகழ்ந்து   அந்த   இராமனைத்   தன்    முன்னே   கொண்டு  வரத்
தவறியதனால் பழித்தாள் சீதை என்றார்.  உயிர்:  இராமனைக் குறிக்கும்;
சீதையின்  உயிரும்   ஆகும்.   தான்  அழகழிந்து  உடல்  முழுவதும்
பகலைப்   போர்க்கும்படி   தன்     மனத்தை   அவன்   கண்ணழகு
கவர்ந்ததால்   ‘தளிர்   நிறமுண்ட   கண்’  என்பது.   வண்ணமும்  -
எச்சவும்மை.  உலோவுதல்  -  உலோப  குணங்  கொள்ளுதல்;   கடும்
பற்றுள்ளம்   கொள்ளுதல்.    சீதை.    தாமரைகளே!  என்  உயிரான
காதலனுடைய  உடலின்  நிறமும்  கண் நிறமும்  காட்டினீர்.  ஆதலால்
அந்த  உயிர்  உம்மிடமே  உள்ளது.   அதனைக்   கொடுக்கவேண்டும்
என்று  உங்களை  இரக்கின்றேன்.  ஆனால்.  இவ்வாறு  கொடுக்காமல்
உலோபம்  செய்யலாமா?’  என்று  நொந்து  குறை   கூறினான்  என்ற
கருத்தைச் சுருங்கிய சொற்களால் கம்பர் புலப்படுத்துகின்றார்.       46