கார்முகப் படலம் - 796
கலிவிருத்தம்
796.
‘நாண் உலாவு மேருவோடு
நாண் உலாவு பாணியும்.
தூண் உலாவு தோளும். வாளி
யூடு உலாவு தூணியும்.
வாள் நிலாவின் நூல் உலாவும்
மாலை மார்பும். மீளவும்
காணல் ஆகும்? ஆகின். ஆவி
காணல் ஆகுமேகொலாம்.
(அந்த இராமனது தோளின் அழகைக் கண்டு) நாண் உலாவு
மேருவோடு - ஆதிசேடனாகிய நாணோடு மேரு மலை போன்ற
வில்லுடன்; நாண் உலாவு - (அவ் வில்லின்) நாணில் உலாவுகின்ற;
பாணியும் - கையும்; தூண் உலாவு தோளும் - தூண்களை ஒத்த
தோள்களும்; வாளி ஊடு - அம்புகள் இடையே; உலாவு தூணியும் -
செருகப் பெற்ற அம்பறாத் தூணியும்; வாள் நிலாவின் - ஒளிமிக்க
சந்திரனைப் போன்ற; நூல் உலாவு - பூணூல் அலையும்; மாலை
மார்பும் - வெற்றிமாலை சூடிய திருமார்பும்; மீளவும் - மறுமுறையும்;
காணல் ஆகும் ஆகின் - காணக் கூடுமாயின்; ஆவி - என்னுயிரை;
காணல் ஆகும் - நான் காணமுடியும் (அது கூடுமா?).
‘என் ஆவி வில்லும் கையுமாகியும். தூணியும் தோளுமாகியும்.
பூணூலும் மார்புமாகியும் உள்ளது. அத்தகைய ஆவியைக் காணின்
எனது ஆவியைக் கண்டதாகும். அவ்வாறு காணாவிட்டால் உயிர்
இழப்பேன்’ என்று சீதை கூறுகிறாள்.
தூண் உலாவு - உலாவு - உவம உருபு. உலாவ என்பது வெவ்வேறு
பொருளில் வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி. 47
