கார்முகப் படலம் - 789

bookmark

789.    

வயிரியர் மதுர கீதம்.
   மங்கையர் அமுத கீதம்.
செயிரியர் மகர யாழின்
   தேம் பிழி தெய்வ கீதம்.
பயிர் கிளை வேயின் கீதம்.
   என்று இவை பருகி. விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம்
   ஓவியம் ஒப்ப நின்றார்.
 
வயிரியர்    - கூத்தர்களின்; மதுர கீதம் - இனிய   பாடல்களும்;
மங்கையர்  அமுதகீதம் - மகளிரின் அமுதப் பாடல்களும்; செயிரியர்
-  யாழினை  மீட்டும்  பாணர்; மகரயாழின் தேன்பிழி - மகரயாழிலே
தோன்றும்   தேன்  பிழிந்தாற்  போன்ற;  தெய்வ  கீதம்  -  பாடும்
தெய்வத்தன்மையுள்ள  பாடல்களும்;  வேயின்  பயிர்கிளை- புல்லாங்
குழலிலிருந்து   ஏழிசை  அடிப்படையில் தோன்றும் பல்வேறு ராகங்கள்;
கீதம் - ஒலிக்கவும்; என்ற இவை - என்ற இவற்றை; பருகி - செவியிற்
கேட்டு; விண்ணோர் - தேவர்கள்; உயிர்உடை - உயிருள்ள; உடம்பு
எல்லாமும் -  உடல்  எல்லாம்; ஓவியம்  ஒப்ப நின்றார் - சித்திரம்
போல (அசைவற்று) நின்றார்கள்.

சீதையின்     திருமணம் விரைவில் நிகழும் என்ற    மகிழ்ச்சியால்
பாணர்  முதலியோரின் கீதங்கள் நிகழ்ந்தன;  அப்  பாடல் இனிமையில்
ஈடுபட்டு விண்ணவர் சித்திரம்போல நின்றனர் என்பது.            40