கார்முகப் படலம் - 785

bookmark

தேவர்களின் மகிழ்ச்சி

வானகத்தார் வாழ்த்தும் மண்ணகத்தார் மகிழ்ச்சியும்
 
785.    

பூ மழை சொரிந்தார் விண்ணோர்;
   பொன் மழை பொழிந்த மேகம்;
பாம மா கடல்கள் எல்லாம்
   பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனிக் கணங்கள் எல்லாம்
   கூறின ஆசி; - ‘கொற்ற
நாம வேல் சனகற்கு. இன்று.
   நல்வினை பயந்தது’ என்னா.
 
கொற்றம்     - வெற்றியையும்;  நாமவேல் - (பகைவர்க்கு) அச்சந்
தரும் வேற்படையையும் உடைய; சனகற்கு - சனகமன்னனுக்கு;  இன்று
- இன்றுதான்; நல்வினை - முற்பிறப்பில் செய்த நல்வினை; பயந்தது -
பயனை  அளித்தது;  என்னா  -  என்று  எண்ணி;  விண்ணோர்  -
(அதனால்)    தேவர்கள்;    பூமழை   சொரிந்தார்   -  மலர்மழை
பொழிந்தார்கள்;  மேகம்  -  வானமானது; பொன்மழை - பொன்மாரி;
பொழிந்தது - பொழிந்தது; பாம மா கடல்கள் எல்லாம் - பரந்துள்ள
கடல்கள்  யாவும்;  பல்மணி  தூவி  -  பலவகை   மணிகளைச் சிதறி;
ஆர்த்த  - ஆரவாரித்தன;  கோமுனிக் கணங்கள் - சிறந்த முனிவர்
கூட்டங்கள்;  எல்லாம்  ஆசி கூறின - யாவும் வாழ்த்து மொழிகளைக்
கூறின.

பாமம்     - பரப்பு; ஒளி என்ற பொருளும் உண்டு.  வில்லொடித்த
ஓசை   கேட்டு   முதலில்    துணுக்குற்றாராயினும்  பின்னர்  இராமன்
சிவதனுசை   முறித்த  ஓசையே  என    அறிந்து  பூமழை  பொழிதல்
முதலியவற்றைச் செய்தனர் என்பது.                            36