கவியரசு முடியரசன்
வாழ்க்கை வரலாறு கவியரசு முடியரசன், தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு- சீதா லட்சுமி அம்மையார் என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இவருடைய பல கவிதைகள் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன. திரைத்துறையிலும் ஈடுபட்டு கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார். இவரது கவிதைகளைச் சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பூங்கொடி என்ற காவியம் 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. பேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார். அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். இவருடைய கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது.
