கண்டு மாமுனிவரின் தவத்தினை கலைத்தல்

bookmark

கண்டு மாமுனிவரின் தவத்தினை கலைத்தல் அரசகுமாரர்களே! இந்த விருட்சங்களினால் ஏற்பட்டிருக்கக்கூடிய இடர்பாடுகளை களைய இந்த விருட்சங்கள் உங்களிடத்தில் நட்பாக இருக்கும். மரங்களுக்கும், உங்களுக்கும் இடையே ஒரு உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகின்றேன். இதன்மூலம் இந்த விருட்சங்கள் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. மரங்களுக்கு எல்லாம் மகளாக இருக்கக்கூடிய மாரிஷை என்ற ஒரு கன்னியை நான் எதிர்காலத்தை அறிந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கின்றேன். ஜகன் மோகன லாவண்யா ரூபம் மிகுந்து இருக்கக்கூடிய அந்த பெண்ணான மாரிஷையை நான் உங்களுக்கு பரிசாகவும் அளிக்கின்றேன். அந்தக் கன்னியானவள் உங்களது வம்சத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்களது தேஜஸ்னின் பாதியும், என்னுடைய தேஜஸ்னின் பாதியினாலும் மகா பண்டிதனான தக்ஷின் என்ற பிரஜாபதி பிறப்பான். அவன் அக்னிக்கு ஈடான தேஜஸை உடையவனாக இருப்பான். அவனே பிரஜாவிருத்தி செய்வான் என்று கூறினார். சந்திரன் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் பிரசேதசர்கள் மாரிஷையை பற்றிய விவரங்களை கூறுமாறு வேண்டினார்கள். பிரசேதசர்கள் இவ்விதம் கேட்டதும் சந்திரனும் தான் வளர்த்து வந்திருந்த கன்னிப் பெண்ணான மாரிஷையின் உற்பத்தி விபரத்தை பற்றி எடுத்துரைக்க துவங்கினார். பூர்வகாலத்தில் வேத சாஸ்திரங்களில் பல நிபுணத்துவமும் அதில் இருக்கக்கூடிய பொருட்கள் யாவற்றையும் அறிந்தவராகவும் இருந்துவந்த கண்டு என்ற மாமுனிவர் கோமதி என்ற பல வளங்கள் நிறைந்திருக்கக்கூடிய அழகிய நதிக்கரையின் அருகில் ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். பூலோகத்தில் கண்டு மாமுனிவர் தவம் செய்து கொண்டிருப்பதை அறிந்த தேவர்களின் அதிபதியான இந்திரன் அவருடைய தவத்தினை எவ்விதத்திலாவது கலைக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் மேற்கொண்டு இருக்கக்கூடிய தவத்தினை கலைக்கும் பொருட்டு என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டு இருந்த இடத்தில் காமத்தில் திளைக்க செய்தால் முனிவரின் தவம் கலையும் அல்லவா என்று எண்ணினார் இந்திரன். உடனே தேவலோகத்தில் இருந்த பிரமிலோசை என்கின்ற தேவலோக மங்கையை வரவழைத்து பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருக்கக்கூடிய முனிவரின் தவத்தினை எவ்விதத்திலாவது ஈடேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கட்டளையும் பிறப்பித்து பிரமிலோசையை பூமிக்கு அனுப்பி வைத்தார். பூமிக்கு வந்து இறங்கிய பிரமிலோசை என்கின்ற பொற்கொடியானவள் தன்னுடைய வசீகரிக்கும் பார்வையினாலும் மோகிக்க வைக்கும் உடலழகினாலும் காமத்தை தூண்டவல்ல ஆடல்களை மாமுனிவரின் ஆசிரமத்தில் நிகழ்த்தினாள். தேவலோக மங்கையின் ஒவ்வொரு அசைவிலும் கண்டு மாமுனிவர் தன்னுடைய எண்ணத்தையும், கவனத்தையும், அடக்க வேண்டிய ஐம்புலன்களையும் மறக்க தொடங்கினார். இதனால் அவர் மேற்கொண்டிருந்த தவமானது கலையத் துவங்கியது. அவருடைய தவமானது கலைந்தது மட்டுமின்றி அவருடைய மனதில் தவத்திற்கு மாறாக அவளுடைய அழகிலும் மனம் கலக்கம் அடைந்து அவளுடன் கூடி மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணமானது தோன்றத் துவங்கியது. அந்த எண்ணத்தின் காரணமாக அந்த தேவலோக மங்கையிடம் கூடி மகிழ்ச்சி அடைய துவங்கினார். அந்த மகிழ்ச்சி காலமானது மந்திர பருவத்தில் நூறு ஆண்டுகள் கழிந்தது.வேத சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அந்த முனிவருக்கு பெண்ணரசி பலவிதமான சுகபோகங்களை அளித்தாள். பின்பு அவரிடத்தில் இனி நான் தேவலோகம் செல்ல வேண்டிய காலமானது வந்துவிட்டது என்றும், எனக்கு விடை கொடுத்து அனுப்புங்கள் என்றும் வேண்டினாள். தேவலோக மங்கை இவ்விதத்தில் கேட்டதும் கண்டு மாமுனிவருக்கு அவளைப் பிரிந்து ஒரு கணமும் இருக்க மனமில்லை. எனவே அவளிடம் நல்லவளே! இன்னும் சில நாட்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்றும் வேண்டினார். முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரமிலோசையும் அவருடன் நூறு ஆண்டுகள் தங்கியிருந்தாள். அம்முனிவருடைய இஷ்ட பாகங்களுக்கு இசைந்து அவருக்கு திருப்தியையும் ஏற்படுத்தினாள். காலங்கள் கழிந்து ஓடத் துவங்கின. ஒருநாள் மீண்டும் முனிவரை நோக்கி மாமுனிவரே நான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று வேண்டினாள் பிரமிலோசை. அப்பொழுதும் கண்டு மாமுனிவருக்கு அவளை விட்டு பிரிய மனம் ஏற்படவில்லை. மென்மேலும் அவளுடன் இருக்கவே அவருடைய மனமானது ஆசைப்பட துவங்கியது. சகல சமுத்திரயங்களும் நிறைந்திருக்க கூடியவளே, கட்டழகான தேகம் உடையவளே, என்னை விட்டுப் பிரியலாமா... இன்னும் கொஞ்ச நாள் என்னிடமே இருப்பாயாக என்று கூறினார். முனிவரின் விருப்பத்திற்கும், ஆசைக்கும் இணங்கிய தெய்வப் பெண்ணான பிரமிலோசையும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் இருந்து வந்திருந்தாள். நாட்களும், காலமும் கடந்து ஓட துவங்கின. ஒருநாள் புன்னகை பூத்த முகத்துடன் இனியாவது என்னை தேவலோகம் செல்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று பிரமிலோசை முனிவரிடம் வினவினாள். அப்பொழுது ஆசைகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு இருந்த முனிவரும் தேவலோக மங்கையை இறுக்கி அணைத்த வண்ணமாக அழகிய விழிகளை உடையவளே! காண்போரை கவரக்கூடிய பார்வையை கொண்டிருக்கக்கூடியவளே! இன்னும் ஒரு கணம் என்னுடன் இருப்பாயாக. நீ இப்பொழுது என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டால் நீண்ட நெடுங்காலம் என்னை காண வரமாட்டாய் அல்லவா... நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று கூறினார்.தேவலோக மங்கையான பிரமிலோசை ஒருவேளை இவரின் விருப்பம் இல்லாமல் நாம் பிரம்மலோகம் சென்றுவிட்டால் இவருடைய கோபம் அதிகரித்து நம்மை சபித்து விடுவாரோ என்ற பயத்தில் சிறிது நாட்கள் அவருடன் இருக்க தொடங்கினாள். சிறிது நாள் குறைந்து இருநூறு ஆண்டுகளாக அவருடன் கூடி வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்பொழுது மீண்டும் கண்டு மாமுனிவரிடம் முனிவரே! நான் இப்பொழுதாவது தேவலோகம் சொல்லட்டுமா? என்று கேட்டாள். அப்பொழுதும் போதை சுகத்தில் திருப்தி அடையாமல் இருந்த கண்டு மாமுனிவர் சில காலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். இவ்விதமாக பிரமிலோசையும் முனிவரிடம் இருந்து விடைபெற்று போக கேட்க, அவர் இன்னும் சில நாட்கள் என காலம் தாழ்த்தி கொண்டே இருந்தார்.பிரமிலோசையும் முனிவருடைய சாபத்திற்கு பயந்தும் ஒருவேளை தான் இவரை விட்டு பிரிந்து சென்றால் மிகவும் வருந்தி விடுவாரோ என்ற அனுதாபத்தினாலும் இவரை விட்டுப் பிரிவதற்கு எந்த விதமான மார்க்கமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பலவிதமான சுகங்களையும், இன்பங்களையும் எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த பின்னரும் கண்டு மாமுனிவரின் காதல் எள்ளளவும் குறையாமல் நாள் ஆக ஆக அவர் மனதில் இருந்த காதல் எண்ணமும், போக சுகமும் அதிகரித்து வலிமை பெறவே துவங்கியது. இவ்விதமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஒருநாள் கண்டு மாமுனிவர் அவசர அவசரமாக எழுந்து தம்முடைய ஆசிரமத்தை விட்டு எங்கோ விரைவாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். விரைவாக சென்று கொண்டிருந்த கண்டு மாமுனிவரை தடுத்து நிறுத்தினாள் பிரமிலோசை. இப்பொழுது நீங்கள் இவ்வளவு அவசரமாக எங்கு சென்று கொண்டு இருக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அப்பொழுது பெண்ணே மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கிவிட்டது ஆகையினால் நான் சந்தியாவந்தனம் செய்ய விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன். அப்படி நான் என்னுடைய சந்தியாவந்தனம் செய்யவில்லை என்றால் என் கடமையில் இருந்து ஒன்றை நிராகரித்தது ஆகிவிடும் என்று கூறினார். முனிவரின் கூற்றுகளை கேட்டதும் பிரமிலோசை புன்னகைக்க துவங்கினாள். புன்னகைத்த வண்ணமாகவே முனிவரே! சந்தியா காலம் விரைந்து கொண்டு இருப்பது இப்பொழுதுதான் உங்களுக்கு தெரிந்ததா? எத்தனையோ ஆண்டு காலங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரேநாளாக இருப்பது என்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது என்று கூறினாள்.பிரமிலோசையின் கூற்றுகளை கேட்டதும் வியப்படைந்தார் முனிவர். வியப்பின் உச்சியில் நின்று கொண்டிருந்த முனிவர் அந்தப் பெண்ணை நோக்கி பெண்ணே! நீ இன்று அதிகாலையில் தானே நதிக்கரையிலிருந்து வந்தாய் அப்பொழுது உன்னை பார்த்த நான் என்னுடைய ஆசிரமத்திற்கு அழைத்து வந்திருந்தேன்... இப்பொழுது இன்றைய நாள் முடிந்து சந்தியா காலம் ஏற்பட்டது என்றால் நான் சந்தியாவந்தனம் செய்ய வந்திருக்கின்றேன். இதற்கு நீ ஏன் என்னை இவ்விதமாக பரிகாசம் செய்கின்றாய். நிகழ்ந்த உண்மையை எடுத்துச் சொல் என்று கூறினார். முனிவர் வினவிய வினாவிற்கு விடை அளிக்கும் பொருட்டு பிரமிலோசை முனிவரே அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்பது உண்மைதான். ஆனால் இன்றைய தினம் வந்திருந்த அதிகாலை அல்ல. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளில் வந்திருந்த அதிகாலையில் நான் வந்தேன். நான் உங்களிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்று கூறினாள். பிரமிலோசையின் பதிலை கேட்டதும் முனிவர் வியப்பின் உச்சிக்கே சென்றடைந்தார். இன்றைய தினத்தின் அதிகாலையில் அல்லாமல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளில் வந்திருந்த அதிகாலை பொழுதா? அப்படியென்றால் நான் எத்தனை நூற்றாண்டு காலங்கள் உன்னுடன் கூடி சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பதையும் நீயே தெளிவாக கூறுவாயாக என்று கூறினார். முனிவர் வினவிய இந்த வினாவிற்கு விடையளிக்கும் வகையில் முனிவரே! நான் உங்களிடம் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும், ஆறு மாதங்களும், மூன்று நாட்களும் கடந்து போயின என்று பிரமிலோசை கூறினாள்.தெய்வ மங்கை கூறியதை கேட்டதும் கண்டு மாமுனிவருக்கு அவள் கூறியதில் எந்தவித உண்மை இல்லை என்பதையும், பெண்ணே நீ சொல்வது உண்மைதானா? அல்லது பொய்யா? என்னிடம் உண்மையை மட்டும் சொல். நான் உன்னுடன் கூடி இருந்தது என்பது ஒருநாள் மட்டும் தான் என் நினைவில் இருக்கின்றது. அப்படி இருக்கும் பொழுது நீ சொல்வது போல் நான் தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகள் உன்னுடன் கூடி இருந்தது என்பது எனக்கு உண்மையாக புலப்படவில்லை என்றார். ஆனால் பிரமிலோசை முனிவரை நோக்கி தலையாட்டிய வண்ணமாக வேதம் அறிந்த அந்தணர்களின் உயர்ந்தவராக இருக்கக்கூடிய உங்களிடம் நான் பொய்யுரைக்க இயலுமா? உண்மையை மட்டும்தான் நான் உங்களிடம் கூறிக் கொண்டு இருக்கின்றேன். அதுவும் நீங்கள் என்னிடத்தில் அறவழியை அனுசரித்து கேட்கும் கேள்விகளுக்கு உங்களை காயப்படுத்தும் அளவில் நான் எந்தவித உண்மையில்லாத பொய்யை உங்களிடத்தில் உரைக்கவில்லை. நான் கூறியவை யாவும் மெய்பொருள் நிறைந்து இருக்கக்கூடிய மெய்பொருள் ஆகும் என்று கூறினாள்.மீண்டும் தேவலோக மங்கை கூறியதைக் கேட்டதும் தவக்கோலத்தில் இருந்த முனிவர் தன்னைத்தானே மிகவும் கடிந்து கொண்டார். பல காலங்கள் செய்திருந்த தவங்கள் எல்லாம் எந்தவித பயனும் இல்லாமல் அழிந்து போய்விட்டன. நான் இனி என்ன செய்யப் போகின்றேன். வேதம் அறிந்தவர்கள் இடத்தில் இருக்க வேண்டிய என்னுடைய விவேகம் என்பது எல்லாம் என் இடத்திலிருந்து பறிபோய்விட்டதே... என்னை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வஞ்சிப்பதற்காகவும் யாரோ ஒருவன் தான் இந்த வனிதையை என்னிடத்தில் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.பசி, தாகம், சோகம், மோகம், வார்த்தக்யம் (பருவங்கள்), மரணம் ஆகிய ஆறு விகாரங்களும் இல்லாமல் என்றும் நிர்மலமாக இருக்கக்கூடிய பரம்பிரம்மத்தை அடையும் பொருட்டு மனதை அடக்கி ஆள வேண்டும் என்று முடிவு செய்திருந்த என்னுடைய விவேகத்தை அபகரித்து மோட்சத்தை நோக்கி செல்ல வேண்டிய என்னை துஷ்ட சகவாசத்தினால் நரகத்தை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். கோபத்தின் உச்சியில் இருந்த முனிவர் தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி என்னுடன் இருந்து என்னுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்திய துரோகியே... பாதகியே... இனிமேலாவது என்னை விட்டுவிட்டு உன்னுடைய விருப்பப்படியே இங்கிருந்து தேவலோகம் சென்று விடு. இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் இவ்விடத்திற்கோ, என் முன்னாலேயோ வராதே! ஒருமுறை உன்னை கண்டதற்கு நான் பல வருட தவப்பலனை இழந்து விட்டேன். இனிமேலாவது என் கண்களில் படாமல் இரு.இவ்விடத்தில் நீ வந்து உன்னுடைய நடை, உடை, பாவனைகளால் என்னுடைய சித்தத்தை கலைத்தது மட்டுமல்லாமல், பல காலங்களாக நான் செய்து வந்திருந்த என்னுடைய தவத்தையும் குழைத்து இந்திரனுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும், கர்மங்களையும் செய்துவிட்டாய். என்னுடன் இருந்து எனக்கே துரோகம் இழைத்த உன்னை என்னுடைய கோபத்தினால் சாம்பலாக்க முடியும். ஆயினும் சத்புருஷர்களுடன் ஏழடி நடந்து சென்றவர்கள் கூட நண்பர்களாவார்கள். அதுமட்டுமின்றி இத்தனை காலமும் என்னுடன் கூடியிருந்து அனைத்து சுகபோகங்களையும் அளித்து வந்துள்ளாய். அதையும் எண்ணிப்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். அதன் காரணமாகவே உன்னை நான் இவ்விடத்தில் மன்னித்து விடுகிறேன். நியாயமாக பார்த்தால் உன்னை குறை சொல்லியோ அல்லது சாபங்கள் கொடுத்து தண்டிப்பதினாலோ எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.நான் என்னுடைய ஐம்புலன்களையும் வெல்ல தவறி காம, மோக இச்சைக்கு ஆட்பட்டு அதில் பரவசம் அடைந்தேன் என்றால் குற்றம் முழுவதும் என்னுடையதாகவே இருக்கின்றது. தேவேந்திரனுக்கு வேண்டியதாகவும் என்னுடைய தவத்திற்கு ஊறு விளைவிக்க கூடியதாக உன்னிடத்தில் குடிகொண்டு இருக்கக்கூடிய அந்த மாமோகத்திற்கு இருப்பிடமான மாயையை அழிக்க வேண்டும் என்றும் கூறி கோபம் கொண்டார்.