கடிமணப் படலம் - 1345

bookmark

பரதன் முதலிய மூவர்க்கும் திருமணம்.
 
1345.    

வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன். ‘எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்’ எனத் தமரோடு குறித்தான்.*
 
எள்ளல் இல் கொற்றவன்-பழிப்பில்லாத வெற்றிகளையே கொண்ட
சனகன்; எம்பி அளித்த  அள்ளல்  மலர்திரு  அன்னவர்தம்மை -
என்பின் பிறந்தவனான தம்பி  (குசத்துவசன்) பெற்ற.  சேற்றில்  மலரும்
செந்தாமரையில் வாழும் திருமகள் அனைய  மகளிரையும்;  கொள்ளும்
என   -   மணஞ்செய்து  கொள்ளுங்கள்  என்று;  வள்ளல்  தனக்கு
இளையோர்கள்   தமக்கும்  -  வரையாது  அருளும்  இராமபிரானது
தம்பியராகிய. பரத இலக்குவ. சத்துருக்கனர்க்கும்; தமரோடு குறித்தான்
-   (தசரத  சக்கரவர்த்தி  முதலிய)   உறவினர்களோடு  மணம்   பேசி
நிச்சயித்தான்.

சீதையை     வளர்த்தபின்     சனகனுக்குப்பிறந்த    பெண்ஆகிய
ஊர்மிளையை  இலக்குவனுக்கும்.   தம்பி   மகளிராகிய  மாண்டவியைப்
பரதனுக்கும்    சுருதகீர்த்தியைச்   சத்துருக்கனனுக்கும்    நிச்சயித்தனர்
என்பது முதனூலால் பெறப்படும்.                              100