கடிமணப் படலம் - 1331
இராமபிராற்குச் சீதையைச் சனகன் தாரை
வார்த்தளித்தல்
சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்
1331.
கோமகன் முன் சனகன். குளிர் நல் நீர்
‘பூமகளும் பொருளும் என. நீ என்.
மா மகள் தன்னொடும். மன்னுதி’ என்னா.
தாமரை அன்ன தடக் கையின். ஈந்தான்.
கோமகன் முன் சனகன்- (தசரதச்) சக்கரவர்த்தித் திருமகனான
இராமனின் எதிர்நின்று சனக மன்னன்; ‘நீ பொருளும் பூ மகளும்
என என் மாமகள் தன்னொடும் மன்னுதி’ என்னா - ‘நீ (பரம்)
பொருளாகிய திருமாலும். தாமரையில் வாழும் திருமகளும் போல
என்னுடைய பெருமைக்குரிய திருமகளான சீதையுடனே நிலைபெற்று
வாழ்க’ என்று கூறி; குளிர் நல் நீர் தாமரை அன்ன தடக்கையின்
ஈந்தான் - குளிர்ந்த தூய நீரைத் (தாரை வார்த்து) தாமரை மலர்
போன்ற (இராமனது) வலத் திருக்கையில் கொடுத்தான்.
“பூ மகளும் பொருளும்” போல எனற்கு. பூமித் தாயும்
அவளிடத்துள்ள பொருளும் போல எனவும். திருமகள் செல்லுமிடம்
எல்லாம் செல்லும் செல்வம் போல எனவும் பொருள் கொள்ளலுமாம்.
பூமகள்: அலர்மேல் மங்கையாகிய திருமகள். “அகல கில்லேன்
இறையும் என்று அலர்மேல் மங்கையுறை” மார்பன்’ (திருவாய். 6:10:10)
ஆதலின் “பரம் பொருளும் பூமகளும் என மன்னுதி” என்றான்.
பொருளில் சிறந்த பொருள் இறைவனே ஆதலின் அடையின்றிப்
“பொருளும்” என்றார். அடையின்மை சிறப்பைக் குறித்தலைத்
திருக்கோவையார் முதற்பாடலில் பேராசிரியர் குறித்த உரையால்
அறிக. 86
