கடிமணப் படலம் - 1332

bookmark

அப்போது நிகழ்ந்த வாழ்த்து ஒலிகள்

வாழ்த்து ஒலியும் மலர் மழையும்
 
1332.    

அந்தணர் ஆசி. அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை. தார் முடி மன்னர்
வந்தனை. மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ.
 
அந்தணர்    ஆசி  -  (அவ்வாறு   சனகன்  சீதையை  இராமன்
திருக்கையில்  தரும்போது) அந்தணர்களின்  ஆசி  ஒலியும்; அருங்கல
மின்னார் தந்த  பல்லாண்டு  இசை  - (உலகிற்கு) அரிய அணிகலம்
போன்றுள்ள மாதர்கள் பாடுகின்ற பல்லாண்டு இசை  ஒலியும்; தார்முடி
மன்னர் வந்தனை-  மலர்மாலை   யணிந்த   மன்னர்களின்  வாழ்த்து
ஒலியும்; மாதவர்  வாழ்த்து  ஒலியோடு  -  பெருந்தவ  முனிவர்கள்
வாழ்த்து  ஒலியும்  ஆகிய  இவற்றோடு  (இணைந்து); முந்திய சங்கம்
முழங்கின  -  (மங்கலக்   கருவிகளுள்)   முந்தியனவாகிய  சங்கங்கள்
பேரொலியை எழுப்பின.

மாது.     ஓ -  அசைநிலைகள்.  மறையவர்  ஓதும்  வேதமுழக்கம்
எல்லாம்   ஆசியுரைகளே   யாதலின்.   “அந்தணர்   ஆசி” என்றார்.
மாதர்க்குள்  அரிய  அணி  அனைய மகளிர்  பல்லாண்டு  இசையோடு
கூறினர் என்பார். “அருங்கல மின்னார் தந்த  பல்லாண்டிசை”  என்றார்.
“புதல்வற்  பயந்த  திதலை  அவ்வயிற்று.  வாலிழை  மகளிர்  நால்வர்
கூடி.   கற்பினின்   வழாஅ   நற்பல    உதவிப்   பெற்றோற்பெட்கும்
பிணையை   ஆக!”   (அகம்.86)   எனச்   சங்க   காலத்தும்  மகளிர்
வாழ்த்துண்மை அறிக.                                      87