கடிமணப் படலம் - 1320
மிதிலை நகர மகளிர் செயல் (1320-1321)
1320.
சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு. பொன். தூசு. வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார்கொலோ?
தெரிந்திலம். திருநகர் மகளிர் செய்கையே!
மலர் மழை பொழிந்தனர் சுண்ணம் தூவினர்- (அந் நகரத்து
மகளிர் எல்லோரும்) (இராம பிரானின் மீது) பூ மழை பொழிந்தனர்;
நறுமணப் பொடிகளைத் தூவினர்;விரிந்து ஒளிர் காசு. பொன். தூசு
வீசினர் - ஒளி பரவி மிளிர்கின்ற இரத்தினங்களையும் பொன்னையும்.
ஆடைகளையும் (யாவர்க்கும் மகிழ்ச்சி மிகுதியால்) அள்ளி வீசினர்;
பரிந்தனர். அழகினைப் பருகினார் கொலோ? - (இதற்குக் காரணம்)
இராமபிரானது பேரழகை விரும்பிக் குடித்தார்கள் போலும்!; திருநகர்
மகளிர் செய்கை தெரிந்திலம் - அழகு மிகும் அந்நகரத்து மகளிர்
செயல்கட்கு (இதனை விட வேறு காரணம் எதுவும்) எமக்குத்
தெரியவில்லை.
இராமனது பேரழகுப் பெருங்காட்சி கண்டு பிறர்க்கு மணியும்
பொன்னும் ஆடையுமாக அள்ளிக் கொடுத்தனர் என்க. 75
