கடிமணப் படலம் - 1321

bookmark

1321.    

வள்ளலை நோக்கிய மகளிர். மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய. நிற்கின்றார்-
‘உள்ளன யாவையும் உதவி பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!’ எனக் கொடுக்கின்றாரினே.
 
உள்ளன     யாவையும் உதவி - (தம்மிடம்)  உள்ள பொருள்கள்
யாவற்றையும்  (பிறர்க்குக்)  கொடையாகக் கொடுத்துவிட்டு;  ‘பூண்டவும்
கொள்ளையிற்  கொள்க’   எனக்   கொடுக்கின்றாரின்   -  தாம்
‘அணிந்துள்ளவற்றையும்  மொத்தமாகக்   கொள்வீராக’  என்று   கூறிக்
கொடுப்பவர்களைப்   போல;  வள்ளலை   நோக்கிய   மகளிர்  -
இராமபிரானைப்  பார்த்த  மகளிர்  அனைவரும்;  மேனியின்  எள்ள
அரும் பூண்  எலாம்  இரிய  நிற்கின்றார் -  (இராம வேட்கையால்
நிகழ்ந்த  மேனி இளைப்பால்) பழிப்பற்ற  ஆபரணங்கள்  எல்லாம் தம்
உடம்பிலிருந்து கழன்றுவிழ நின்றார்கள்.

மேற்பாட்டில்     பொன்னும் மணியும்  ஆடையும் கொடுத்தவர்கள்.
இப்பாட்டில்.   தம்   அணிகளையும்   இழக்க   நிற்பதால்.  “உள்ளன
யாவையும்    உதவிப்    பூண்டவும்   கொள்ளையிற்    கொள்கெனக்
கொடுக்கின்ற”  வள்ளல்கள்  போன்றனர்  மகளிர்   என  உவமித்தார்.
கொள்ளையிற்  கொள்வார்  முழுவதும்   எடுத்துச்  செல்வர்  ஆதலின்.
கொள்ளையிற் கொள்ளல். முழுவதும் கொள்ளல்  எனும்  பொருள் தந்து
நின்றது.  இராமபிரான்  ஆகிய  வள்ளலை  நோக்கி   மகளிர்  தாமும்
அவ்வள்ளலின்  தன்மையைப்  பெற்றுவிட்டனர்  என்பதாம்.  அவனைக்
கண்டதால்  எழுந்த  விரக  தாபத்தால் விளைந்த  உடல்  இளைப்பால்
அணிந்திருந்த    அணிகளும்   கழன்று    வீழ்ந்ததனால்.    “உள்ளி
உள்ளவெல்லாம்    உவந்து  ஈயும்”  (கம்ப.15)  வள்ளல்கள்   போன்று
ஆயினர் அம்மகளிர் என்க.                                  76