கடிமணப் படலம் - 1314

bookmark

இராமபிரான் தானம் செய்தபின் திருத்தேர் ஏறுதல்

இராமன் தேர் ஏறுமுன் தானம் நல்கல்
 
1314.    

பல் பதினாயிரம் பசுவும். பைம் பொனும்.
எல்லை இல் நிலனொடு. மணிகள் யாவையும்.
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான்மறைச்
செல்வர்கள் வழுத்துற. தேர் வந்து ஏறினான்.
 
பல்பதின்   ஆயிரம்  பசுவும்   பைம்  பொன்னும்  -  (பின்பு)
பத்தாயிரக்   கணக்கான  பசுக் கூட்டங்களையும்  பசும்  பொன்னையும்;
எல்லை இல் நிலனொடு   மணிகள்   யாவையும்  -  வரம்பில்லாத
நிலங்களையும்    நவரத்தினங்களையும்;   நல்லவர்க்கு உதவினான் -
நல்லொழுக்கமுடைய அருளாளர்கட்குக் கொடையாகக் கொடுத்தவனாகிய
இராமன்;   நவிலும்   நான்மறைச்    செல்வர்கள்    வழுத்துற -
போற்றற்குரிய நான்கு வேதங்களையே    தம்    செல்வமாக   உடைய
அந்தணாளர்கள் வாழ்த்துக்கள்  நிறைய;  தேர்  வந்து   ஏறினான் -
தேரில்  வந்து ஏறினான்.

கோதானமும்.     பூதானமும் ஸ்வர்ண தானமும் இரத்தின தானமும்
நல்லோர் மகிழக் கொடுத்து இராமன் தேர்  ஏறினன் என்க.  நற்பெருஞ்
செயல்கள்  புரியப்  புகுமுன்.  கொடை கொடுத்து.  நல்லோரை  மகிழச்
செய்யும்   மரபை   மறவாமல்  இங்குக்   குறித்தார்.   உதவினான்  -
வினையால்    அணையும்     பெயர்.     உதவினான்    என்பதனை
முற்றெச்சமாகக் கொள்ளின்  இராமன்  என்னும்  (தோன்றா) எழுவாயை
வருவித்துப்  பொருள்  கூறுக.  “அறப்பயன்.  தக்கார்  கைப்பட்டக்கால்
வான் சிறிதாப்  போர்த்துவிடும்”  (நாலடி. 38)  ஆதலால். “நல்லவர்க்கு
உதவினான்” என்றார்.                                      69