கடிமணப் படலம் - 1313

bookmark

இராமபிரான் கொண்ட திருக்கோலச் சிறப்பு செப்ப
அரிதனெல்

1313.    

முப் பரம் பொருளிற்குள் முதலை. மூலத்தை
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை.
அப்பனை. அப்பினுள் அமிழ்தை. தன்னையே
ஒப்பனை. ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ?
 
முப்பரம்     பொருளிற்குள்  முதலை  மூலத்தை  -  (எல்லாப்
பொருள்களிலும் சிறந்தன   என்பதனால்  பரம்பொருள்கள்  எனப்படும்
அயன்  அரி  அரன்  ஆகிய   மூர்த்திகள்   மூவருள்ளும்  முதல்வன்
ஆனவனை  அம்மூன்று  பரம்பொருள்களுக்கும்   மூலப்   பொருளாய்
நிற்பவனை; இப்பரம்  துடைத்தவர் எய்தும் இன்பத்தை - இல்வுலகப்
பொருள்களின்   தொடக்கை     அறுப்பவர்கள்    (பரம    பதத்தில்
சென்றடையும்)   பேரின்பத்தை;   அப்பனை  -   அனைத்துயிர்க்கும்
தந்தையை;   அப்பினுள்   அமிழ்தை   -   பாற்கடலில்   கிடக்கும்
அமிழ்தத்தை;   தன்னையே   ஒப்பனை   -   தனக்குத்    (உவமை
வேறின்மையால்)   தானே   உவமையாவானை;   ஒப்பனை  உரைக்க
ஒண்ணுமோ?   -  அவன்  அணிசெய்த  திறம்  (முழுதும்   நம்மால்)
உரைசெய்ய இயலுமோ?

“ஒப்பனை  ஒப்பனை” என்பதில். முன்னது  ஒப்பானவனை என்றும்.
பின்னது  அலங்காரத்தை  என்றும்  பொருள்படும். மேல்   1207 முதல்
இப்பாடல் 1227 முடிய 21 பாடல்களில் இராமன் அணி  செய்த  கோலங்
கூறியும்.  மனம்  நிறைவுறாத கவிஞர்பிரான்  ஆராமையால்.  “ஒப்பனை
உரைக்க  ஒண்ணுமோ?”   என்ற   தவிப்போடு   முடித்தார்.  “மூன்று
கவடாய்  முளைத்தெழுந்த மூலப்  பொருள்” (கம்ப. 3682)  இராமபிரான்
ஆதலின்  முப்பரம்   பொருளிற்குள்  முதலை.  மூலத்தை”   என்றார்.
“தானும்   சிவனும்   பிரமனும்  ஆகிப்    பணைத்த   தனி  முதலை”
(திருவாய்.8:8:5) “திருமால்.  நான்முகன். செஞ்சடையோன்  என்றிவர்கள்
எம்  பெருமான்   தன்மையை  யார்   அறிகிற்பார்?”  (திருவாய். 8:4:9)
எனும்    நம்மாழ்வார்   கருத்துக்களோடு    அப்படியே    “முப்பரம்
பொருளிற்குள் முதலை” என்பது ஒத்திருத்தல் காணலாம்.

ஆதியஞ்     சோதியுருவாய்  உள்ள  மூலப்  பரம்பொருளிலிருந்து
முப்பரம்   பொருள்கள்   கிளைத்தன    எனும்   கம்பர்   கருத்தோடு
நம்மாழ்வார்  கருத்து  முழு   ஒற்றுமையுடையதாதலை.   “தான்   ஓர்
உருவே  தனிவித்தாய்த்  தன்னின்  மூவர்  முதலாய  வானோர் பலரும்
முனிவரரும் மற்றும்  மற்றும்   முற்றுமாய்”   (திருவாய்.  1:5:4)  எனும்
திருவாய்மொழிப்   பாசுரத்தாலும்   அறியலாம்.   இவ்வுலகப்   பற்றும்.
உடற்பற்றும்   குறையக்  குறைய.   இறைவனின்   அந்தமில்   இன்பம்
பெருகுமாதலின். “இப்பரந்துடைத்தவர் எய்து இன்பத்தை” என்றார்.   68