கடிமணப் படலம் - 1310

bookmark

கிம்புரி அணிதல்

தொடையணி அணிதல்
 
1310.    

காசொடு கண் நிழல் கஞல. கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின். மகரவாய் விளங்கும் வாள் முகம்.
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே;
 
காசொடு கண் நிழல் கஞல- மணிகளின் ஒளியோடு காண்பார் கண்
ஒளியும்  இணைந்து  விளங்க;  கைவினை  ஏசறு கிம்புரி - கைகளால்
செய்யப்படுகிற  விசித்திர  வேலைப்பாடுகளில்   குற்றமில்லாத   கிம்புரி
என்னும் அணியானது (சுறா மீனின் திறந்த  வாய்  வடிவமாகச்  செய்யப்
படுவதாதலின்   அச்சுறா   மீனின்);  எயிறு  வெண்நிலா  வீசலின் -
பற்களாகப்   பதித்துள்ள  மணிகளிலிருந்து     வெண்ணிறமான   ஒளி
வீசுவதால்; மகரவாய்  விளங்கும்  வாள்  முகம்  -  அந்தக் கிம்புரி
என்னும்  அணியினது  ஒளி விளங்கும் முகம்; ஆசையை  ஒளிகளால்
அளந்து  காட்டவே  -  திக்குகளின்  எல்லையை  இவ்வளவு  என்று
அளந்து காட்ட (இராமன் அணிந்தான்)

கஞலல்:     விளங்கல். ஆசை: திசை. கிம்புரி: மகர மீனின்  திறந்த
வாய்   போன்ற   தாய்த்  தொடையில்  அணியப்படும்   ஓர்   அணி.
இதனைக்  “குறங்கு  நெறி”   என்பர்.  “மகரவாய்”  என்று  கூறுதலும்
உண்டு.                                                   65