கடிமணப் படலம் - 1311
சிலம்பும் கழலும் அணிந்தமை
காலில் கழலும் அணிதல்
1311.
‘இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?’ என.
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்.
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே;
‘இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு’ என- ‘இனிமேல்
பரந்த வடிவு கொண்டு (திரு விக்கிரம அவதாரத்தில்) உலகினை
அளந்தது போல். இத்திருவடிகள் எப்படி அளந்து விடும்’ பார்ப்போம்
என்று கூறித்; தனித்தனி தடுப்பன போலும் சால்பின - தனித்தனியே
தடை செய்வன போன்ற இயல்பினையுடையனவாய்; நுனிப்ப அரும்
நுண்வினைச் சிலம்பும் நோன் கழல் - நுனித்து நோக்கினும் முழு
நுட்பமும் கண்டறிய இயலாதவாறு செய் தொழிலையுடைய ஒலிக்கின்ற
வலிய வீரக் கழலையும்; பனிப்பரும் தாமரைப் பாதம் பற்றவே -
குளிர்ந்த பெரிய செந்தாமரை மலர் போலும் திருவடிகளைச்
(சுற்றிலும்) பற்றிக் கொள்ள (இராமன் அணிந்தான்.)
“பனிப்பரும் தாமரைப் பாதம்” என்பதற்கு. பனிப்பு அருந்
தாமரைப் பாதம் எனப் பிரிந்து. பற்றினார் அஞ்சி நடுங்க வேண்டாத
தாமரைப் பாதங்கள் எனினும் பொருந்தும். காவிய நாயகர்கள்
தெய்வமாயின் கேசாதிபாதமாக வருணித்தல் வேண்டும் எனும்
மரபையொட்டி 1210ஆம் பாட்டில் முடியணி வருணனையில் தொடங்கி.
இப்பாடலில் அடியணியாகிய சிலம்பும் கழலும் அணியும்
வருணனையோடு முடித்திருக்கும் திறம் நோக்குக. சிலம்பும் - நோன்
கழல். சிலம்பு - சிலம்புதல். ஒலித்தல். வில்லோன் காலன கழல்.
மெல்லடி மேலவும் சிலம்பு (குறுந் தொகை). 66
